தமிழர்கள் பற்றியும், தமிழர்களின் அரசியல் விவகாரங்கள் பற்றியும் எவர் வாய் திறந்தாலும், முதலில் அவர்களை இலங்கையின் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த அரசியல்வாதிகள் அடையாளப்படுத்துவது புலிப்பயங்கரவாதிகள் என்று தான். இந்த அடையாளப்படுத்தல் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரனையும் விட்டுவைக்கவில்லை.
இலங்கையில் இது ஒருவகையான வியாதியாக மாறிப்போயுள்ளது அல்லது மனநோயாக மாறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
யுத்தம் முடிந்த பின்னர் வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாய சூழலில் இருந்தது மகிந்த தரப்பு. சர்வதேச நெருக்கடிகளும், இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்திற்குப் பின்னர் தான் மகிந்த அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இணங்கியது.
இலங்கையின் மற்றைய மாகாணங்களை தன் வசப்படுத்தியிருந்தாலும், வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தான் தமிழ் மக்கள் தேர்வு செய்வார்கள் என்பது தெரிந்தும் மகிந்தர் வேறு வழியின்றி தேர்தலை நடத்த ஆயத்தமானார்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு மிகப்பெரியதொரு சவால் தான் இந்த வடக்கு மாகாண சபைத் தேர்தல். தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தான் கேள்விக் குறி. யாரை வேட்பாளராக நியமிக்கலாம் என்னும் முடிவெடுப்பதற்கே நீண்ட நாட்களாயின.
அப்பொழுது தான் இலங்கையின் நீதியரசராக இருந்து ஓய்வு பெற்ற கனகசபாபதி விசுவலிங்கம் விக்கினேஸவரன் அவர்களின் தெரிவை சம்பந்தர் முன்மொழிந்தார்.
எனினும், தமிழர் தரப்பில் சிலர் அவரின் தெரிவிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஒரு சிலர், வடக்கைப் பற்றி தெளிவாக தெரியாத ஒருவர், வடக்கிற்கே நெடுநாளாக வருகை தராவர் எவ்வாறு வடக்கின் முதல்வர் வேட்பாளராக நிற்க முடியும் என்று வெளிப்படையாகவே எதிர்த்தனர்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தன்னுடைய முடிவில் விடாப்பிடியாகவே இருந்தார். அவருக்கும் மிகப்பெரியதொரு அழுத்தங்கள் இந்த விடையத்தில் ஏற்பட்டதும் வெளிப்படை.
இருப்பினும், எதற்காக வடக்கு மாகாணத்தின் முதல்வர் வேட்பாளராக விக்கினேஸ்வரனை நிறுத்த சம்பந்தர் முடிவெடுத்தார் என்பது உண்மையான யதார்த்தமான கருத்துத் தான்.
வடக்கின் முதல்வராக நாடாளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராஜாவை நிறுத்தலாம் என பரவலாக பேசப்பட்டது. அவர் அதற்கு பொருத்தமானவர் என கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்களும் கருத்து வெளியிட்டனர்.
ஆனால், சம்பந்தர் இதில் சிந்தித்திருக்கிறார் என்றே கூற வேண்டும். காரணம், வடக்கு மாகாண முதலமைச்சராக விக்கினேஸ்வரன் நியமிக்கப்படும் போது அதற்கான அங்கீகாரம் நிச்சையமாக சர்வதேசத்திடம் இருந்து கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஏனெனில் வடக்கின் முதல்வராக விக்கினேஸ்வரன் தவிர, மாவை சேனாதிராசாவை நியமித்து வெற்றி பெற வைத்திருந்தால், நிச்சையமாக அவரின் கருத்துக்களை தென்னிலங்கை அரசியல்வாதிகளும், அரசாங்கமும், ஏன் சர்வதேச சமூகமும் ஏற்கும் நிலை மிகவும் குறைவாகவே இருந்திருக்கும்.
தவிர, மாவை சேனாதிராசாவை புலி முத்திரை குத்தி, வடக்கில் புலிகள் கோரியதையே மாவையும் கோருகின்றார் என இலகுவில் பிரச்சினைகளை வேறு திசைக்கு மாற்றியிருந்திருப்பார்கள்.
ஆனால் ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவரை நியமித்ததன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கள் முன்னைப்புக்கள் யாவும் தவிடு பொடியானது.
காரணம் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்ட விக்கினேஸ்வரன் அவர்கள் முழுகளோடோ அன்றி, வேறு எந்த குழுக்களோட தொடர்பற்ற இலங்கையின் நீதியராக தனது பணியை நிறைவேற்றிய மனிதர். இலங்கை சட்ட திட்டங்களை மதிப்பளித்து, அதனை பேணி பல தீர்ப்பளித்த ஒரு நீதி. அவர் மீது இலகுவில் புலிப்பட்டம் சூட்டுவது கடினம் என்பது சம்பந்தரின் முடிவு.
அது உண்மையும் கூட. விக்கினேஸ்வரனை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளும் நிலையும் உருவானது. ஒரு நல்ல மனிதர் என்கிற பெயரையும் அவர் எடுத்திருந்தார். இலகுவில் அவரை புறக்கணிக்க முடியாமல் போகும் ஒரு சூழலும் உருவாகியிருந்தது.
தேர்தலை அறிவித்த உடன் மகிந்த தரப்பின் மாவை சேனாதிராஜா தான் பொதுவேட்பாளராக நியமிக்கப்படுவார் என்று கருதியிருந்தது. ஆனால் விக்கினேஸ்வரனின் நியமனத்தோடு மகிந்த தரப்பினரும் ஆடிப்போயிருந்தனர் என்பதும் வெளிப்படையான உண்மை தான்.
ஆனால் சம்பந்தனின் இந்த முடிவு காலத்தின் தேவை கருதிய ஒரு செயற்பாடு தான் என்பது பின்னர் தான் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் புலிகள் தான் பிரச்சினையாக இருந்தனர். இதனால் புலிகளின் சார்பில்லாத ஒருவர் நியமிக்கப்பட்டார். மக்கள் தங்கள் பெருவாரியான ஆதரவை காட்டினர். கூட்டமைப்பின் வெற்றி அமோகமானது.
ஆனால் தென்னிலங்கை அரசியல் தலைமைகள் தங்கள் மனநிலையில் இருந்து மாறப்போவதில்லை என்பதையும், அது தான் திணிக்கும் அரசியல் தீர்வையே பெறவேண்டும் என்னும் வாதத்தில் முடிவாகவே இருக்கின்றது.
தமிழர்களைப் பற்றிப் பேசினால் புலிகள், பயங்கரவாதிகள் என்று கூறுகின்றார்கள் என வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் கருத்து புறந்தள்ளிவிடக்கூடிய ஒன்றல்ல.
இதனை சர்வதேச சமூகம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்தியாவும் இதில் தலையிட்டேயாக வேண்டும். அது இந்தியாவின் கடமையும் கூட, புலிகளின் வளர்ச்சியிலும், புலிகளின் அழிப்பிலும், வட மாகாண சபை தேர்தலிலும், இலங்கையின் ஒட்டு மொத்த அரசியலிலும் இந்தியாவின் பங்கு கனதியானது.
இந்நிலையில் தமிழர்களின் உரிமை விடையத்தில் பேசும் ஒவ்வொருவரையும் புலிச்சாயம் பூசி அவர்களுக்கு புலி முத்திரை குத்தி ஒதுக்கி வைப்பது தமிழர்களின் அரசியல் விவகாரம் தீர்ந்து போவதற்கான வழியல்ல.
அது மீண்டும், இலங்கையில் வன்முறைக்கே வித்திடும். எந்தவிதமான புலிச்சாயமும் இல்லாமல் நீதியரசாகவும், ஆன்மீகவாதியாகவும் இருந்து அரசியலுக்குள் புகுந்த வடக்கின் முதலமைச்சரின் மீதே இந்த அரசாங்கம் புலிச்சாயலை பூசுகின்றதெனில், இலங்கையில் நீதியையும், நியாயத்தையுமும் உரிமையையும் கோரினால் அவர்கள் புலிகள் பயங்கரவாதிகள் எனில், நீதியையும் நியாயத்தையுமும், உரிமையையும் புலிகள் தான் கோருவார்கள் என்பதை இலங்கை தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்கின்றார்களா?
அல்லது, நீதியினையும், நியாயதினையும், உரிமையினையும் கோரினால் அவர்கள் பயங்கரவாதிகள் எனில், அரசாங்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் யார்?
வடக்கு மாகாண முதலமைச்சரின் ஆதங்கத்தினை இன்று சர்வதேசமும், இந்தியாவும் கேட்டாக வேண்டிய கட்டாயமான சூழல் ஏற்பட்டிருப்பது காலத்தின் கட்டாயமான தேவை.
புலியெனக்கூறி, ஒட்டுமொத்த அரசியல் விவகாரத்தினையும் முடக்க நினைப்பார்களாயின் அது மீண்டும் புலியின் மீள் உருவாக்கத்திற்கே வித்திடும். அதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. இதனை தென்னிலங்கை புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று கிடைத்துள்ள இந்த ஜனநாயக வெளியினைப்பயன்படுத்தி இலங்கை தமிழ் மக்களின் அரசியல் விவகாரங்களை நீதியான முறையில் தீர்ப்பது இலங்கையின் எதிர்கால அரசியல் நலனுக்கு நன்மை பயக்கும். இல்லையேல் காலம் தான் பதில் சொல்லும்.
-http://www.tamilwin.com