தமிழனுக்கு சிங்கள தலமைகள் தான் எதிரியா? இல்லை தமிழ்த் தலமைகளா?

tna_colombo_1எங்கள் தமிழ் அரசியல் தலமைகளைப் பார்த்து தென்னிலங்கை சிங்கள அரசியல் தலமைகள் கை கொட்டி சிரிக்கும் நகைப்பிற்குரிய செயற்பாடுகளாக தமிழ் அரசியல் தலமைகளின் செயற்பாடுகள் அமைந்திருப்பது வேதனைக்குரிய செயற்பாடாக அமைந்திருக்கிறது.

ஒருகாலகட்டத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் அரசியல், அபிவிருத்தி, மற்றும் தேவைகள் குறித்து அக்கறை கொண்டிருந்தனர் என்பது மறுக்க முடியாது உண்மை. பின்னர் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துப் விடப்பட்ட இன அடக்குமுறைகளுக்கு எதிராக இளைஞர்கள் துடித்தெழுந்து, ஆயுதம் தாங்கினர்.

அந்த இளைஞர்களின், மனதில் தமிழ் மக்களின் விடுதலை பற்றிய இலக்கு, கனவு மட்டுமே இருந்தது. அதைத்தவிர அவர்கள் வேறு எதையும் சிந்தித்திலர்.

மறுபுறத்தில், ஆயுதப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கையில், காலத்தின் தேவை கருதி அரசியல் கட்சியின் தேவையினை உணர்ந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்று திரட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியிருந்தார்.

ஆனால் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், தமிழ் அரசியல் தலமைகளின் செயற்பாடுகளில் மக்கள் திருப்தி கொள்ளும் அளவிற்கு இல்லை என்பது தான் வெளிப்படை. தமிழர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று தனிப்பெரும்பான்மையான பலத்தோடு ஆட்சி அமைத்த வட மாகாண சபை மீது தற்பொழுது எழுந்துள்ள கேள்விகளும் விமர்சனங்களும் அதிகமானவை தான்.

ஒரு காலத்தில் மாகாண சபையினால் ஒன்றுமே செய்ய முடியாது என்றே விடுதலைப் புலிகள் அதனை அடியோடு நிராகரித்தனர். ஆனாலும் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தரப்பு தேர்தலை எதிர் கொள்ள வேண்டி ஏற்பட்டதால் அன்று தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களம் கண்டது அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றியும் பெற்றது.

இந்தியாவினால் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் சரத்துக்குள் அமைந்துள்ள மாகாண சபையானது தமிழ் மக்களின் பிரச்சினைகளை, அபிலாசைகளை தீர்த்து வைக்க கூடிய வகையிலான அதிகாரங்கள் எவையும் அது கொண்டிருக்கவில்லை என்பது வெளிப்படை.

இதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் இப்பொழுது நாம் அந்த மாகாண சபையினை ஏற்று இருக்கின்றோம். வடக்கிற்கு என்று ஒரு முதலமைச்சர். அந்த மாகாணத்திற்கு என்று அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என்று பெருவாரியான ஒரு அணி பணிபுரிந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் நமக்கு கிடைத்த சொற்ப அளவிலான அதிகார வரம்பினை கூட தமிழ் மக்கள் நலன்சார்ந்து ஒற்றுமையோடு பயன்படுத்தி வழங்க நமது அரசியல் தலைமைகள் சித்தமாக இல்லை என்பது தமிழ் மக்களின் சாபக்கேடாகவே உள்ளது.

யுத்தம் முடிந்த பின்னர் வடக்கு மக்களுக்கான ஆற்றுப்படுத்தல்கள் மிகமிக அத்தியவசியமான தேவை. இதனை புலம்பெயர் தமிழ் மக்களை இணைத்து, அரசாங்கத்தின் இன்னொரு பங்கினைப் பெற்று நமது மாகாண சபையினர் நிறைவேற்றியிருக்காலம்.

குறிப்பாக வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறார்கள், முதியவர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுத் தான் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கான ஆற்றுப்படுத்தலை செய்வதற்கு இதுவரை சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இது சாதாரண அடிப்படை பிரச்சினைகளில் ஒன்று தான். இப்படி ஏராளமான பிரச்சினைகள் இங்கே விவாதிப்பதற்கு இருக்கின்றன.

ஆனால் இப்பொழுது இங்கே பேசப்படும் பொருள் யாதெனில் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இடத்தேர்வு பற்றியதானது தான்.

தனி நாடு கேட்டும், சமஷ்டி கேட்டும் அரசாங்கத்தோடு சண்டை போடும் நாம் வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்கு இதுவரை ஒற்றுமையாக முடிவெடுக்கத் தெரியாமல் திண்ணாடிக்கொண்டிருக்கின்றோம் என்பது வெட்கக்கேடான விடையம்.

அதுவும் இத்தனை படித்த, புலமைசார் நிபுனர்களைக் கொண்ட தமிழ் இனத்தில், சட்டத்தரணிகளையும், வல்லுனர்களையும் தமிழ் தரப்பில், விவசாய, அரசியல் அறிவு கொண்ட முதிர்ச்சியான தரப்பில் ஒரு மைத்திய நிலையம் அமைப்பதற்கான இடத்தினை தெரிவு செய்வதில் இத்தனை நாள் இழுபறி நிலை.

வடக்கு முதலமைச்சர் ஒரு முடிவெடுத்தால், அவருக்கு எதிராக இன்னொரு தரப்பு முடிவெடுத்து நடைமுறைப்படுத்த விளைகின்றது. அதாவது இங்கே தமிழ் மக்களின் நலன்கள், அபிவிருத்திகள் மீது அக்கறை இல்லை. ஆனால் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எடுக்கும் முடிவுக்கு ஆதரவாக எதுவும் நடந்து விடக்கூடாது என்பதில் சிலர் குறியாக இருக்கின்றார்கள் போலவே தோன்றுகின்றது.

ஆக, தமிழர் தரப்புக்கள் தங்களுக்குள் முரண்பட்டுக்கொண்டு, தமிழ் மக்களின் வாழ்க்கையை அடகு வைத்து, அதில் குளிர் காய நினைக்கின்றார்கள் என்றே எண்ணத்தோன்றுகின்றது.

இன்று வடமாகாணத்திற்கான பொருளாதார மைத்திய நிலையத்தினை அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வதில் ஒற்றுமையில்லாமல், அலையும் நாம் எப்படி நாளை தமிழீழத்தினை வாங்கி தமிழ் மக்களுக்கான ஆட்சியை அமைப்போம் என்று சிந்தித்துப் பார்த்தால், சண்டையும், சச்சரவும் தான் தமிழீழத்தில் நடக்கும். வேறு எதுவும் நடக்காது.

அப்பொழுது எங்களில் யாரேனும் ஒருவர் தயவில் இலங்கையை ஒன்றாக்கி சிங்களவர்களகே ஆளட்டும். அப்பொழுது தான் தமிழர்கள் தமக்குள் நடக்கும் சண்டைகளை நிறுத்துவார்கள் என்று கூறுவார்கள். அது தான் நடக்கும்.

துறைசார் நிபுனர்கள், வல்லுர்கள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், விவசாய அமைச்சர்கள், ஏன் நாட்டின் எதிர்க் கட்சித்தலைவர் கூட ஒரு தமிழர். ஆனால், வடக்கு தமிழ் மக்களின் அபிவிருத்தியில் ஒரு முடிவெடுத்து அதனை நடைமுறைப்படுத்துவதில் இத்தனை சிக்கல்கள், பிரச்சினைகள்.

ஆக, தமிழர்களின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் இப்பொழுது தடையாக இருப்பது சிங்களவனா நாமா? சிந்தித்துப்பாருங்கள். நமக்கு முடிவெடுக்கவும் தெரியாது. முடிவெடுப்பர்களின் கருத்துக்களை சரியென ஏற்கவும் முடியாது. நீயா நானா என்ற தங்களின் போட்டியில் தமிழ் மக்களின் அரசியல் வாழ்வாதாரப் பிரச்சினைகளை மடக்கி, அழித்து விடுகின்றார்கள்.

இவ்விடத்தில் தந்தை செல்வாவின் வசனத்தை மட்டும் எங்களால் சொல்லி முடிக்கலாம். தமிழர்களை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். அவ்வளவும் தான். வேறு வழியில்லை.

-http://www.tamilwin.com

TAGS: