போரின்போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அரசு ஆரம்பித்துள்ளது.
“வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களில் 21 ஆயிரத்து 663 குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன.
அதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இந்த செயலணி செயற்படும்” என்று இணை அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சரவையில் எடுக்கப்பட்ட மேற்படி முடிவை அறிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “1980ம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெயர்வுகள் இடம்பெற்றன. வடக்கிலிருந்து தமிழ் மக்களுக்கு மேலதிகமாக சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர்.
தற்போது மோதல் முடிவடைந்து, அமைதி நிலை திரும்பியுள்ளது. இதையடுத்து வெளியேறிய மக்கள் தமது சொந்த இடத்துக்கு திரும்புகின்றனர்.
எனினும், அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அவர்களால் மீள்குடியேற முடியாமலுள்ளது. மீளக்குடியேற வருவோரில் வீடுகள் தேவைப்படும் 16,120 முஸ்லிம் குடும்பங்களும், 5,543 சிங்கள குடும்பங்களும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்தமையினால் இந்த மக்களின் வாக்குரிமை மற்றும் அரசியல் உரிமைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிறப்பு, இறப்பு பதிவுகள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். எனவே, இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கிலேயே மேற்படி செயலணி அமையப்பெறும்.
இந்த செயலணியின் சிபாரிசின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளதீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com