இலங்கையில், இறுதிக்கட்ட போரின் பொது இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் சம்பந்தமாக ஆராய்வதற்கு உண்மை கண்டறியும் ஆணைக்குழுவொன்றை அமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சிகளின் அமைப்பு சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த இலங்கை ராணுவத்தினரை பழிவாங்குவதற்காகவே இந்த ஆணைக்குழுவை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
சர்வதேச அழுத்தங்களுக்கு அமைய அரசாங்கம் இதனை நியமிக்கவுள்ளதாக தெரிவித்த விமல் வீரவன்ஸ, வெளிநாட்டு நீதிபதிகள் இந்த ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்படவுள்ளதாக குற்றம்சாட்டினார்.
இந்த ஆணைக்குழுவின் முலம் நாட்டின் சுதந்திரம் பறிக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு மிகப்பெரிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆணைக்குழு சம்பந்தமாக நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கை ராணுவத்தின் நன்மதிப்பை காப்பதற்கு, குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வது அவசியமென்று தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்துக்களை தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ, குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் ராணுவத்தினருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்வதற்கு உள்நாட்டில் தகுந்த நிதிமன்ற கட்டமைப்பொன்று இருப்பதாக தெரிவித்தார். -BBC