இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்களின் உள்ளடக்கம் குறித்து அரச உயர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் தொடர்பில் இன்று நடைபெறவுள்ள வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் எனத் தெரியவருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில் பகிரங்கமாக ஏற்பட்டுள்ள இந்தக் கருத்து மோதலால் அரசுக்குள் பனிப்போர் மூண்டுள்ளது.
சர்வதேச நீதிபதிகளை உள்வாங்குவது குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு, வெளிவிவகார அமைச்சரால் கேள்விக்குட்படுத்தப்பட்டமை குறித்து தேசிய அரசின் பங்காளிகளான ஐ.தே.க. மற்றும் சு.கவால் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து மஹிந்த அணியும் கேள்வி எழுப்பி வருகிறது.
இதேவேளை, போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்கள் கட்டாயமாக உள்வாங்கப்படவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகின்றது.
இலங்கையின் உள்நாட்டு விவகாரத்திலோ, நீதித்துயிலோ எந்தவொரு வெளிநாட்டு நீதிமன்றம், நீதிபதி அல்லது அமைப்பும் தலையீடு செய்வதற்குத் இடமளிக்கமாட்டேன் என்று ஐ.நா. கூட்டத்தொடர் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
உள்நாட்டு விசாரணைப் பொறிமுயில், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றும், அது இலங்கை அரசின் இறுதியான நிலைப்பாடு அல்ல என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஐ.நா. கூட்டத்தொடர் முடிவடைந்ததையடுத்து ஜெனிவாவிலிருந்து நாடு திரும்பிய பின்னர் அமைச்சில் நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மங்கள இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, பாணந்துயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரி, சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என்று மீண்டும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டு, வெளிவிவகார அமைச்சர் மங்களவுக்கு பதிலடி கொடுத்தார்.
இதன்பின்னர், இந்தக் கருத்தையே நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோரும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தனர். அத்துடன், சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணையொன்று முன்னெடுக்க இலங்கையின் அரசமைப்பில் இடமில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.
இவ்வாறாக சர்வதேச நீதிபதிகளை உள்வாங்குவது குறித்து அரசுக்குள் பாரிய கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று லண்டன் செல்ல முன்னர் நடத்தப்படவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் முக்கிய கவனத்தில் எடுக்கப்பட்டு விவாதிக்கப்படும் என அறியமுடிகின்றது.
இதேவேளை, நாமல் ராஜபக்ஷ எம்.பி. கைதுசெய்யப்பட்டமை மற்றும் கைது தொடர்பான தகவல் முன்கூட்டியே வெளியானமை குறித்தும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்படலாம் என்று மேலும் அறியமுடிகின்றது.
-http://www.tamilwin.com