படித்த பக்குவமான முஸ்லிம் ஒருவரை எமது முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கு நாம் எப்போதும் தயாராகவிருக்கின்றோம். எமது பெரும்பான்மை பாதுகாக்கப்படுவதை சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்துவதாக இருந்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை அன்பாகவும் தாழ்மையாகவும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
தொழிற்சங்கவாதியும், எழுத்தாளருமான ஐ. தி. சம்பந்தன் அகவைவையை முன்னிட்டு வெளியிடப்பட்ட ‘சாதனையாளர் ஐ. தி. சம்பந்தன் முத்து விழா’ ‘தமிழ் அரச ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி’ என்ற நூல்களின் வெளியீட்டு நிகழ்வு ஓய்வுநிலை அரச அதிபரும், கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளருமான உடுவை. எஸ். தில்லை நடராசா தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசிய இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ. கணேசன் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றும் போது குறிப்பிட்டதாவது:
தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலேயே வடக்கு, கிழக்கு இணைந்திருக்க வேண்டுமென திடமாக வலியுறுத்தி வருகின்றோம்.
அதனை முஸ்லிம் தலைவர்களும் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தமிழர் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் அவ்வாறு கூறவில்லை.
ஒரு பக்குவமான, படித்த முஸ்லிம் நபரை எமது முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராகவிருக்கிறோம்.
நியாயமான நிரந்தரமான முடிவொன்றை எட்டுவதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பை எவரும் மறுக்க முடியாது. உண்மை அறியப்பட வேண்டும். உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும்.
மீண்டும் நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனடிப்படையில் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும். அதுவே உண்மையான நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.
தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை எவரும் குழப்பாது பொறுமை காக்க வேண்டும்.இந்த விழாவில் பங்குகொள்ள முடிந்ததையிட்டு மனமகிழ்ச்சி அடைகிறேன்.
ஐ. தி. சம்பந்தன் எனது நீண்ட நாள் நெருங்கிய நண்பர். அவர் பல தொழிற்சங்கங்களில் பல முக்கியமான பதவிகள் வகித்து அந்த மக்களின் துயர் துடைத்தவர். சிறந்த சமூக சேவையாளர். தமிழ்த் தொழிற்சங்கக் கூட்டணி ஆரம்பித்து அதன் செயாளர் நாயகமாக இருந்து செயல்பட்டவர்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியுடனும் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போன்றவற்றுடனும் இணைந்து செயல்படுபவர். தமிழ் மக்களின் பலவிதமான போராட்டங்களிலும் அவரின் சேவை வெகுகாலமாக பின்னிப் பிணைந்து உள்ளது.
ஐ. தி. சம்பந்தன் ஒரு ஆய்வாளர். எழுத்தாளர். அரிய பல தகவல்களைக் கொண்டு தமிழ் அரச ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்ற நூலை வெளிக்கொணர்ந்துள்ளார். இந்த நூலில் பெறுமதிமிக்க புள்ளி விபரங்களும் பல ஆதாரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அவருக்கு உங்கள் எல்லோர் சார்பிலும் எனது சார்பிலும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.எமது உரிமைப் போராட்டத்தின் அடிப்படை விடயங்கள் பற்றி கருத்துகள் சிலவற்றைக் கூறுவது இந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
எமக்கு பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டாலும் முதன் முதலாக இழைக்கப்பட்ட அநீதி நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட்ட பிரசா உரிமை சட்டமாகும்.
இந்த நாட்டின் முதலாவது பிரதம மந்திரி டி. எஸ். சேனாநாயக்க பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, இந்திய வம்சாவளி மக்கள் இந்தியாவிற்கு செல்லலாம். இலங்கையில் இருப்பவர்களுக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்படும் என்று கூறினார்.
ஆனால் அந்த வாக்குறுதியும் மீறப்பட்டது.அப்பொழுது செனட்டர் சபையில் செனட்டராக இருந்த நடேசன் ஜேர்மனியில் ஹிட்லர் யூத மக்களை கொலை செய்வதுடன் அவர்களின் பிரஜா உரிமையையும் பறிக்கிறார். ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யாமல் இந்தியா வம்சாவளி மக்களை செயலற்ற பிரஜைகளாக முடக்கி வைக்கிறீர்கள் என்றார்.
அந்த பிரஜா உரிமை பறிப்பும் எமது தமிழ் மக்களின் மீதான முதலாவது தாக்குதலாகும்.பிரஜா உரிமை பறிப்பு காரணமாக 1947ம் ஆண்டின் பின்னர் 1977ம் ஆண்டு தான் இந்திய வம்சாவளி மக்கள் சார்பில் ஒருவர் (சௌமியமூர்த்தி தொண்டமான்) நுவரெலியா – மஸ்கெலியா தொகுதியில் மூன்றாவது உறுப்பினராக தெரிவானார்.
அதுவரை இந்திய வம்சாவளி மக்களின் சார்பில் ஒரு சிலர் நியமன உறுப்பினராக பாராளுமன்றில் இருந்துள்ளார்கள்.பெரும்பான்மை சமூகத்தில் இருந்து சமூகவிரோதிகளால் வன்முறை கட்டவிழ்ந்து விடப்பட்ட பொழுது இந்த நாட்டுக்கு உரித்துடைய தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கு பேணப்படவில்லை. அது பாரதூரமான குற்றமாகும்.
இந்த நாட்டை விட்டு இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறினார்கள். தமிழ் மக்களில் அரைப்பங்கினர் இலங்கைக்கு வெளியே வாழ்கின்றார்கள். இந்தியாவில் மட்டும் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பக்கூடிய நிலைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
நாம் பெரும்பான்மை மக்களை எதிர்க்கவில்லை. அவர்கள் எமது சகோதரர்கள். நாமும் அவர்களும் சமத்துவமாக வாழவேண்டும். நாம் இரண்டாம்தரப் பிரஜைகளாக வாழ முடியாது.
இறைமையின் அடிப்படையில் எமது அபிலாசைகளை ஏற்றுக்கொண்ட அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும். அதுவே எமது நிலைப்பாடு.தற்போது பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது.
வழிநடத்தும் குழு நிர்ணயிக்கப்பட்டு ஒழுங்காக கூடி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. புதிய அரசியல் சாசனம் இந்த நாட்டிற்கு அவசியமாகவுள்ளது. புதிய அரசியல் சாசனமானது தமிழ் மக்களுக்கு மட்டுமானதல்ல. அனைத்து மக்களுக்கும் முக்கியமானது. அதற்காக அனைவரும் முயற்சிக்கின்றார்கள்.
புதிய அரசியல் சாசனத்தின் ஊடாகவே தற்போதுள்ள நிலையிலிருந்து நாட்டை மீட்க முடியும்.தற்போது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தை நாம் எல்லோரும் பயன்படுத்த வேண்டும்.
இலங்கையின் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் நாம் எதிர்பார்த்தளவில் கருமங்கள் வேகமாக நடைபெறாது விட்டாலும் கூட முன்னேற்றங்களைக் காணக்கூடியதாகவுள்ளது.
நியாயமமான, நிரந்தரமான நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு, அரசியல் சாசன ரீதியாக ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு எமது பரிபூரணமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராகவிருக்கின்றோம்.
தமிழ் மக்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். அவர்கள் மீண்டும் ஏமாற்றப்பட முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்றது.
சர்வதேசத்தின் கண்காணிப்பு தொடர வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
-http://www.tamilwin.com