ஏழு வருடங்கள் கடந்த போதிலும் ஆறாத உளக்காயங்களுடன் வன்னி மக்கள்!

vanniஇலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்து விட்ட இன்றைய நிலையிலும் அது ஏற்படுத்திச் சென்ற வடுக்கள் பாதிக்கப்பட்டோர் உள்ளங்களிலுருந்து இன்னும் நீங்கி விடவில்லை. அன்றாடம் தமது வாழ்க்கைக் கோலங்களில் வலிகளைச் சுமந்தவாறே அவர்கள் வாழ்கின்றார்கள்.

தொன்றுதொட்டு கலாசார, பண்பாடுகளுடன் பாரம்பரியமாக வாழ்ந்த நிலங்களை இழந்து, தமது உறவுகளை இழந்து, அவயவங்களை இழந்து உளநெருக்கீடுகளுடன் அவர்கள் வாழ்கின்றார்கள்.

அதுமட்டுமின்றி பயங்கரமான யுத்த நிலைமைகள், பொருளாதாரச் சிக்கல்கள், துஷ்பிரயோகங்களுக்குட்பட்டிருத்தல், கல்வியில் ஏற்பட்ட தடங்கல் போன்ற பாதிப்புகளும் ஏதோவொரு வகையில் உளரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

யுத்தத்தின் தாக்கம் நாட்டின் அனைத்து சமூகங்களிலும் அனைத்து மட்டங்களிலும் காணப்பட்ட போதும் வன்னியில் இறுதி யுத்தம் ஏற்படுத்திய தாக்கம் எண்ணிலடங்காதவை.

பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், உடைமைகளையும் இழந்த அதேவேளை, தொடர் இடப்பெயர்வுகளின் விளைவாக அதிகளவான உளரீதியான பாதிப்புகளை இன்றும் வன்னி மக்கள் சுமந்து வருகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் உளநலப் பிரிவுக்கு மாதாந்தம் புதிதாக 200 பேருக்கு அதிகமானோர் சிகிச்சைகளுக்காக வருவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் ஏதோவொரு வகையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் உளநலப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே பாரிய யுத்த நிலைமைகளுக்கும், தொடர் இடப்பெயர்வுகளுக்கும் முகம்கொடுத்த முல்லைத்தீவு மாவட்ட மக்கள், பலரிடம் கலந்துரையாடிய போது அவர்களிடம் யுத்தநிலைமைகள், இறுதிக் கட்ட யுத்த அனுபவங்கள் ஏதோவொரு வகையில் உளரீதியான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதை காணக் கூடியதாகவிருந்தது.

வற்றாப்பிள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த வயதான தாயார் திருமதி வடிவேலு கூறுகையில்,

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எங்களுடைய சொந்த ஊரிலிருந்து குடும்பத்தினருடன் இடம்பெயர்ந்து சனங்களோடு சனங்களாய் சென்று கொண்டிருந்தோம்.

அப்போது எனது இளைய மகனை நான் தவற விட்டு விட்டேன்.இன்று வரை அவனுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது.

ஒருவேளை மகன் இறந்திருந்தால் மகனுக்கு செய்ய வேண்டிய இறுதிக் கிரியைகளை நாங்கள் செய்யத் தவறி விடுவோமோ என்பதற்காக மகனின் புகைப்படத்துக்கு மாலை போட்டு வருடா வருடம் கிரியைகளை செய்து வருகின்றோம். எங்களுக்கு உண்மையில் இந்த வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இல்லை என்றார்.

யுத்த காலத்தின் போது பிறந்து அத்தகையதொரு சூழ்நிலையில் வளர்ந்த சிறார்களிடமும் உட,உளத் தாக்கங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.

விஸ்வமடு பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனொருவனின் தாயார் தனது மகன் தொடர்பாகக் கூறுகையில்,

எனது பிள்ளைகள் மூவரும் யுத்த காலத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள். அக்காலப் பகுதியில் எந்த நேரமும் விமானத் தாக்குதல்களும், வெடிகுண்டுச் சத்தங்களும், மரண ஓலங்களும் கேட்டுக் கொண்டுதான் இருக்கும்.

இதன் போது எனது இளைய மகனே அதிகமாகப் பயப்படுவான். இறுதிக் கட்ட யுத்தம் அகோரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் நாங்கள் இடம்பெயர்ந்து பதுங்கு குழிகளுக்குள் இருந்தோம்.

அப்போது பலர் ஷெல் பட்டு கண் முன்னே வலியால் துடிதுடித்து இறந்து போனார்கள். இதன் போது மகன் பயத்தால் எனது மடியில் படுத்து அழுவான். என்னை இங்கிருந்து கூட்டிப் போய்விடுங்கள் என்று அழுவான்.

இன்றும் அன்று நேரில் கண்ட காட்சிகளால் ஏற்பட்ட தாக்கம் மகனுக்குள் இருக்கின்றது.

இருளைக் கண்டால், பட்டாசு வெடிச் சத்தங்களைக் கேட்டால், திரைப்படங்களில் பயங்கரமான காட்சிகளைப் பார்த்தால் எதையோ கண்டு பயந்தவனாய், விழிகள் இரண்டும் பிதுங்கி மூச்சு விட முடியாதவாறு கிடப்பான்.

பலமுறை வைத்தியர்களிடம் காட்டிய போதும் அவனுக்கு உடல்ரீதியாகப் எந்த பிரச்சினைகளும் இல்லையென்றே வைத்தியர்கள் கூறுகின்றார்கள்” என்றார்.

யுத்த காலத்தில் எங்களுக்கு சுதந்திரமாக விளையாடக் கூட சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஒரு நாள் நானும், எனது நண்பர்களும் விளையாடிக் கொண்டிருக்கும் போது பந்து உருவில் ஒரு பொருள் மைதானத்தில் இருந்தது.

நான் அதைப் பந்தென்று நினைத்து ஓடிப் போய் எடுத்து வந்து பரிசோதித்துப் பார்க்கையில், அது வெடித்து சிதறியதில் என் பார்வையை இழந்து விட்டேன்.

அதற்குப் பிறகு எனது பெற்றோரையும் யுத்தத்தினால் இழந்து அநாதை ஆசிரமத்திலேயே வளர்ந்தேன் என்கிறார் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்குமார்.

இவ்வாறு பயங்கரமான யுத்த காலத்தில் வாழ்வா, சாவா என்ற நிலையில் வாழ்ந்த மக்களிடமும் இறுதிக் கட்ட இடம்பெயர்வுகளின் மூலம் உறவுகளையும், உடைமைகளையும் இழந்த மக்களிடமும் உளரீதியான தாக்கங்கள் அதிகம் காணப்படுகின்றன.

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து ,மீள்குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பின்னர் 2010ம் ஆண்டளவில் வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் உளநலப் பிரிவு என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் உளநலப்பிரிவின் தகவல்களின்படி யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அதிகளவான மக்கள் உளரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்பட்டதாகவும், இதில் சிலர் தீவிர மனநோயாளிகளாக இருந்ததுடன், சிலர் யுத்தத்தினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, உறவுகளின் இழப்பு, யுத்தத்தின் கொடூரத் தன்மை, துஷ்பிரயோகங்களுக்குட்பட்டிருத்தல், போன்ற பல்வேறு காரணங்களின் விளைவாக ஏதோவொரு வகையில் உளரீதியாக பாதிக்கப்பட்டவர்களாக காணப்பட்டதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதனுடைய தாக்கம் வேறு ஒரு கோணத்தில் சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்திருப்பதாக உளநலப்பிரிவுகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக யுத்தத்துக்குப் பிற்பட்ட காலப் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்கொலை, கல்வியில் வீழ்ச்சி, விவகாரத்து, மதுபாவனை அதிகரிப்பு, பாலியல் தொழில்கள் போன்ற சமூகப்பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு இத்தகைய உளத் தாக்கங்களே காரணமாக அமைந்துள்ளதாக சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் உளநல பிரிவின் சிகிச்சைகள் தொடர்பாக உளநல வைத்தியரொருவரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

முல்லைத்தீவு வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிலர் அடிக்கடி ஏதாவது ஒரு உடல் உபாதையொன்றைக் கூறிக் கொண்டு மருந்து எடுக்க வருவார்கள். ஆனால் அவர்களுக்கு உடல்ரீதியாக எந்தவிதமான பாதிப்புகளும் இருக்காது.

எனினும், இத்தகையவர்களின் வீட்டுச்சூழல், கடந்த கால அனுபவங்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஏதோவொரு வகையில் யுத்தத்தினால் உளரீதியான தாக்கத்துக்குட்பட்டவர்களாக இருப்பார்கள்.

எனவே அத்தகையவர்களை இனம்கண்டு உளநலப் பிரிவின் சிகிச்சைகளுக்கு உட்படுத்துவோம். மேலும் கிராம சேகவர் பிரிவுகளுடன் ஊடாக அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து யுத்தத்தினால் உளரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உளநல சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

உள்நாட்டுப் போரினால் யாவற்றையும் இழந்தவர்களாக வாழும் வன்னி மாவட்ட மக்களில் பலருக்கு சிறந்த உளரீதியான சிகிச்சைகள் இன்று அத்தியாவசியமென்பது மட்டும் தௌிவாக தெரிகின்றது.

-http://www.tamilwin.com

TAGS: