மாகாண அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் எடுபிடியாக இருக்க முடியாது. இரு அரசாங்கங்கள் இடையிலும் புரிந்துணர்வு உண்டாக வேண்டும். புரிந்துணர்வு இல்லையாயின் நாம் சரியாக செயற்பட முடியாது என வட மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் அதிகாரிகள் குழு ஒன்று இன்றைய தினம் யாழ். குடாநாட்டுக்கான விஐயம் ஒன்றினை மேற்கொண்டு இருந்தது.
இந்நிலையில் குறித்த குழு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இன்றைய தினம் காலை 11 மணியளவில் முதலமைச்சரை கைதடியில் உள்ள அவருடைய அலுவலகத்தில் சந்தித்த மேற்படி உலக வங்கியின் அதிகாரிகளான பீற்றர் டி எலிஸ், ஜெசிக்கா ரசல் ஸ்மிற், யென் மற்றும் நெல்சிப் திட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி மனோகரன் ஆகியோர் மதியம் 12 மணிவரையில் சந்திப்பை மேற் கொண்டனர்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர்,
மாகாண அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் எடுபிடியாக இருக்க முடியாது. இரு அரசாங்கங்கள் இடையிலும் புரிந்துணர்வு உண்டாக வேண்டும். புரிந்துணர்வு இல்லையாயின் நாம் சரியாக செயற்பட முடியாது என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம்.
மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் மாகாண அரசாங்கத்தின் கீழ் உள்ள பிரதேச சபைகளும் கூடிய நெருக்கத்துடன் வேலைகளை கொண்டு நடாத்துவது தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.
இதன் போது மத்திய அரசாங்கமானது மாகாண அரசாங்கத்தை பொருட்படுத்தாமல் பலவழிகளில் உதாசினப்படுத்துவதை அவர்களுக்கு சுட்டிக்காட்டியிருந்தேன்.
அத்துடன் மத்திய மாகாணத்திற்கு இடையில் புரிந்துனர்வும் சேர்ந்து செயற்படுகின்ற மனோபாவும் இல்லையாயின் எங்களால் சரியாக இயங்கமுடியாது எனவும் நாம் அதிகார பரவலாக்கத்தை எதிர்பார்ப்பதையும் நாம் மத்தியின் கையாட்களாக இயங்க முடியாமையும் எடுத்துரைத்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது அவர்கள் இந்தோனேசியாவில் அனுபவ ரீதியாக தாம் பார்த்த பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார்கள். இதன்படி அதிகார பரவலாக்கமானது முக்கியமானது. உள்ளுராட்சி மன்றங்கள் கூடிய வலுவுடன் வேலை செய்வதற்கு அதிகார பரவலாக்கம் முக்கியமானது என்ற கருத்தை அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் எங்களுக்குள் போதுமான புரிந்துனர்வு இருக்கின்றது. ஆனால் அதனை அரசாங்கத்திற்கு எடுத்துரைப்பது தான் பிரச்சினையாகவுள்ளது. அந்தவகையில் நாம் அரசாங்கத்திற்கு எத்தனையோ விதத்தில் எடுத்துரைத்துவிட்டோம்.
எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக்கொள்ளதக்க வகையில் ஏற்ற உதவிகளை செய்யவேண்டும். எங்களை கட்டுபடுத்த வேண்டாம். என தாம் மத்திய அரசாங்கத்திடம் பலவாறு கேட்டிருந்தமையும் தாம் அவர்களுக்கு சுட்டிக்காட்டியிருந்ததாக அவர் தெரிவித்தார்.
-http://www.tamilwin.com