யாழ் பல்கலைக்கழகம் தமிழர்களுக்கு மட்டும் உரியதா?

JaffnaUniversityஇலங்கையில் இடம்பெற்ற போருக்கு முன்னும் சரி, பின்னும் சரி கல்வி நிறுவனங்களும் போரின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

யாழ்பாணப் பல்கலைக்கழகம் 1987 இல் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் இடையில் நடந்த சண்டையில் மிகவும் பாதிப்புக்கு உள்ளானதில் இருந்து பல போர்க் காயங்களுக்கு உள்ளானது.

அங்கு போராட்டத்தின் சுவலைகள் அவ்வப்போது வெளிப்பட்டபோது, அதன் மீது சந்தேகப் பார்வைகளும் அதிகரித்தன.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த நிலையிலும் பல்கலைக்கழகத்தில் தொடரும் சில நினைவு கூறல்கள் அல்லது செயற்பாடுகள்

பல்கலைக்கழகம் மீதான கூரிய பார்வையை விலக்க முடியாத நிலையில் வைத்துள்ளன. அதுபோல அங்கு ஏற்படும் சில குழப்பமான நிலமைகளும் பல கேள்விகளை தமிழர்களிடையே சந்தேகத்தை எழுப்புவதை மறுப்பதற்கில்லை.

16-7-2016 அன்று இடம்பெற்ற குழப்பமும் அதற்கு முன்னர் அங்கு இடம்பெற்ற குழப்பங்களில் ஒன்றாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது.

போர் நடைபெற்றபோது ‘இலக்குத் தவறிய தாக்குதல்’, ‘அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை’ என்ற மறுப்புக்கள் மூலம் போரிட்ட தரப்புக்கள் நியாயப்பாட்டை முன் வைத்தன. ஆனால், போரின் பின் இலக்கின்றி எதுவும் நடந்துவிட முடியாது.

மேலும் போருக்குப் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையினைக் கண்டும் காணாததுபோல் புறக்கணித்துவிட முடியாது.

பல கூட்டங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிக்கை போன்றன இனி அவ்வாறான அசாதாரண நிலமை ஏற்படாது என்பதற்கான உறுதிப்பாடு எனவும் கருதிவிட முடியாது.

சாதாரணமான ஒரு தமிழருக்கு ‘சிங்களவர் ஏன் இங்கு கற்க வந்துள்ளனர்’ என்ற ஐயப்பாடு உருவாக்குவதையும், அதேபோல் சாதாராணமான ஒரு சிங்களவருக்கு ‘ஏன் அங்கு சிங்களவர் கற்கக்கூடாது’ என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியாது.

இன்னும் ஒருபடி மேலே சிந்தித்தால், ஜனநாயக நாட்டில் எவரும், எங்கும் கல்வி கற்றலாம் என்ற கருத்தையும் மறுப்பதற்கில்லை. தர்க்க ரீதியாகக் கேட்பதாயின், ‘தமிழர் சிங்களவர்களின் இடத்திற்கு வந்து கற்கலாம் என்றால், ஏன் சிங்களவர்களால் தமிழர் வாழும் பிரதேசத்தில் கற்க முடியாது’ என்று கேட்கலாம்.

தமிழர்-சிங்களவர் ஒருமைப்பாட்டிற்கு, இவ்வாறு தமிழர் பிரதேசத்தில் சிங்களமானவர்களும், சிங்களவர் பிரதேசத்தில் தமிழர்களும் கல்வி கற்பது முக்கியம் என்ற கருத்தையும் கவனிக்கத்தக்கது.

இவ்வாறான கருத்துக்களில் உள்ள நியாயத் தன்மைகளையும் இலகுவில் மறுத்துவிட முடியாது.

தமிழரோ, முஸ்லிமோ சிங்களவர் பிரதேசங்களில் கல்வி, தொழில் போன்றவிடயங்களுக்காகச் செல்வதை ஆக்கிரமிப்பாகப் பார்க்க முடியாது. அவர்கள் பெரும்பான்மையினரில் தங்கி வாழ்கின்றனர். ஆனால், சிறுபான்மையினரின் பிரதேசங்களில் பெரும்பான்மை இனம் நுழைவதை சிறுபான்மையினர் ஐயத்துடனும் பயத்துடனும் பார்ப்பது தவிர்க்கவியலாத ஒன்று.

இதனை சிறுபான்யினராக இருந்து அல்லது அவர்களின் மனநிலையில் இருந்து பார்த்தால் மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும்.

யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்களவர்களின் இருப்பும் இவ்வாறான ஒன்றே.

இது யாழ் பல்கலைக்கழகம் மட்டுமின்றி, கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்பனவற்றிலும் இதே நிலைதான்.

அவர்களுக்கு அங்கு பல, வசதியான பல்கலைக்கழகங்கள் இருக்க ஏன் இவ்வளவு தூரம் வருகின்றார்கள் என்ற ஒரு சமானிய சிறுபான்மை நபரின் கேள்வியை மறுக்க இயலாது. அதனை தட்டிக் கழித்து நடந்து கொள்வது இன முரண்பாட்டு முகாமைத்துவத்திற்கு ஏற்புடைய செயலாகாது.

ஒருவேளை சிங்கள மாணவர்கள் தமிழை ஒரு பாடமாகக் கற்ற வருகிறார்கள் என்றால் ஓரளவு நியாயத்தை முன் வைக்கலாம்.

போரின் வடுக்கள் உள்ள, அதன் மனக்காயத்திற்கு உள்ளான, பாதிக்கப்பட்ட தலைமுறை வாழ்ந்து கொண்டிருக்கும் இனத்தவரிடம் தங்களின் எதிரியாக கருதப்படும் இனம் சம்பந்தம் கொள்வது ஐயத்தையே உருவாக்கும். அவர்கள் பிரதேசத்தில் இராணுவமாக இருந்தாலும் சரி, மாணவனாக இருந்தாலும் சரி அவர்களை ஆக்கிரமிப்பாளராகவே கருத இடமுண்டு.

இவ்விடத்தை ஒரு கல்வியலானாகவே அணுக வேண்டும். அரசியல்வாதியாகவோ, இராணுவ அதிகாரியாகவோ அல்ல.

எது எப்படியோ சிங்கள மாணவர்கள் சிறுபான்மையினர் பிரதேச பல்கலைக்கழகத்திற்குள் உள்வாங்கப்பட்டுவிட்டனர். அவர்கள் விருந்தாளியாக அல்லது நண்பராக ஏற்றுக் கொள்ளப்பட அவர்களின் நடத்தை மிக அவசியம்.

அந்த மாணவர்களுக்கு பாதிக்கப்பட்ட, எதிரியாகப் பார்க்கப்படும் இனத்தவரிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்ற பக்குவம் உள்ளதா? அவர்கள் கலாச்சாரம், மனநிலை தொடர்பில் போதிய புரிந்து கொள்ளல் உள்ளதா? இந்த யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு செயற்படாத வரை ‘வேண்டாப் பொண்டாட்டி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம்’ என்ற நிலையை மாற்ற முடியாது.

இந்த விடயத்தில் கல்வியியலாளர்கள் முக்கிய பங்கு வகிப்பது அவசியம். அங்கு படிக்கும் சிங்கள மாணவர்கள் தங்கள் இருப்பு இன முரண்பாட்டு முகாமைத்துவத்திற்கு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என உணர்ந்து செயற்படுவது அவசியம்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் குறிக்கோள் வாக்கான ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்பதை அவர்கள் முன்நிறுத்தி செயற்படுவது அவசியம்.

யாழ் பல்கலைக்கழகம் தமிழர்களுக்கு மட்டும் உரியதல்ல, மாறாக சகலருக்கும் உரியது என்ற சிந்தனையை ஏற்படுத்த அங்குள்ள சகல மாணவர்களும் முன்வர வேண்டும்.

-http://www.tamilwin.com

TAGS: