நாட்டின் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்காக, அதிகாரத்தினை பகிர்ந்து கொள்வது தொடர்பில் தானும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் அக்கறையோடு இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதிகார பகிர்வு தொடர்பாக சிங்கள, தமிழ் மக்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற அபிவிருத்தி சவால்கள் குறித்த விசேட கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பிரதமர் தெரிவித்துள்ளதாவது, “அதிகார பகிர்வு விடயத்தில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனும் நானும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம்.
மத்திய அரசாங்கத்திற்கு மாகாணங்களுக்கும், பிரதேச சபைகளுக்கும் இடையிலான தொடர்புகளை பலப்படுத்தி அதிகாரங்கள் உரிய முறையில் பகிரப்படும். இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளமையினால் நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.
அத்துடன் புதிதாக உருவாக்கப்படவுள்ள தேர்தல் முறையானது அனைத்து தரப்பினரதும் பிரதிநித்துவம் பலப்படுத்தும் வகையில் அமைக்கப்பட வேண்டும். நிறைவேற்று அதிகார முறைமையை நீக்கி அதிகார பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டிய தேவை இரண்டு பிரதான கட்சிகளுக்கும் உள்ளது. புதிய அரசியலமைப்பு மூலம் நாடு பிளவுபடுவதை அனுமதிக்கப் போவதில்லை. அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஜனநாயக ஆட்சியை பலப்படுத்துவதே தமது இலக்கு.” என்றுள்ளார்.
-http://www.puthinamnews.com