இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாகவேண்டுமானால் தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம், காணாமல் போனவர்களுடைய பிரச்சினைகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.
அதனை செய்யாமல் நல்லிணக்கம் தொடர்பாக வார்த்தைகளால் ஒன்றையும் செய்ய இயலாது. செயற்பாடே வேண்டும் என நல்லிணக்க பொறிமுறைகளுக்கான குழவினரிடம் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நல்லிணக்க பொறிமுறைகளுக்கான குழுவினர் இன்றைய தினம் யாழ்.கரவெட்டி பிரதேச செயலகத்தில் பொதுமக்களிடம் கருத்தறியும் கூட்டத்தை நடத்தியிருந்தனர்.
இதன் போது கருத்து வெளியிட்டுள்ள பொது மக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
பௌத்த மயமாக்கல்
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் வவுனியா மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணம் வரையான பிரதேசங்களுக்கு இடையில் பல விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு விகாரை அமைக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சிங்கள மக்கள் அல்லது பௌத்த மக்களே வாழவில்லை. பின்னர் எதற்காக இந்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன?
இந்த விகாரைகள் போரின் நினைவுகளை மீளக்கொண்டு வருவதாகவே இருக்கின்றது. இது நல்லிணக்கத்திற்கு பாதகமான ஒரு நிலையாகும்.
நில அபகரிப்பு, படையினர் வெளியேற்றம்.
தமிழ் மக்களுடைய பெருமளவு நிலம் படையினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. அந்த நிலங்கள் மீளவும் மக்களிடம் வழங்கப்படவேண்டும்.
அதற்கு முன்னதாக எங்களுடைய மாகாணத்தில் இருந்து படையினர் முழுமையாக நீக்கப்படவேண்டும். நாங்கள் தனியே சீருடைய அணிந்த படையினரை மட்டும் கூறவில்லை.
அவர்களுடைய புலனாய்வாளர்களும் வெளியேற்றவேண்டும். அவ்வாறான நிலை உருவாகும்போதே எங்களால் எங்களுடைய நிலத்தில் சுதந்திரமாக செயற்பட முடியும்.
நாங்கள் தமிழீழ விடுதலை புலிகள் இருந்த காலத்தில் மிகவும் சுதந்திரமாக இருந்தோம். ஆனால் இப்போது அவ்வாறான நிலமை இருப்பதாக நாங்கள் கருதவில்லை.
சுதந்திரமாக பேச முடியவில்லை. சுதந்திரமாக நடமாட முடியவில்லை. புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றது என கவலை வெளியிட்டுள்ளனர்.
காணாமல்போனவர்கள் தொடர்பாக.
காணாமல்போனவர்கள் அல்லது கடத்தப்பட்டு காணாமல்போக செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்படவேண்டும்.
அத்துடன், அவர்கள் காணாமல்போனதற்கான நியாயத்தை அரசாங்கம் கூறியே ஆகவேண்டும். இவ்வாறான ஒரு பொறிமுறை காணப்பட்டதன் பின்னதாகவே அடுத் தகட்டம் என்ன? என்பதை நாங்கள் தீர்மானித்துக் கொள்ள முடியும்.
அவ்வாறான ஒரு பொறிமுறையை உருவாக்காமல் நஷ்டஈடு அல்லது இழப்பீடு தொடர்பாக பேசுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் எரிச்சல் உணர்வை உண்டாக்கும். இந்நிலையில், மரண சான்றிதலை எந்தவொரு சூழ்நிலையிலும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
இதேபோல் காணமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு உள்ளிட்ட ஆணைக்குழுக்களினால் எந்தவொரு பயனும் கிடையாது. அவர்களால் செய்ய முடிந்தது. மரணசான்றிதழ் வழங்குவது மட்டுமே.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக.
சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்ட வேண்டும். கடந்த காலத்தில் நாட்டில் ஜே.வி.பியினர் இவ்வாறான போராட்டங்களை மேற்கொண்ட போது அவர்களில் கைது செய்யப்ட்டவர்கள் பின்னர் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டார்கள்.
ஆனால் எமது தமிழ் இளைஞர்கள் தற்போதும் சிறைகளிலே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அதிலும் தற்போது விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்கள்.
இவ்விடயத்தில் அரசாங்கம் தனது இருமுக செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. எனவே அரசாங்கம் பொது மன்னிப்பின் அடிப்படையில் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறான நிலையில் மேற்குறிப்பிட்ட எந்தவொரு விடயத்திலும் அரசாங்கம் நியாயமான தீர்வினை வழங்காது நல்லிணக்கம் தொடர்பாக பேசுவில் என்ன பயனுள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட எமது பிரச்சனைகள் தீர்கப்பட வேண்டியது அவசியமானது.
போரின் இறுதியில் காணாமல்போனவர்கள், போர்குற்றங்கள் தொடர்பாக.
காணமல் போனவர்கள் தொடர்பிலும் இலங்கையில் இடம்பெற்ற போர்குற்றங்கள் தொடர்பிலும் உண்மை கண்டறியப்பட வேண்டியதுடன் அவற்றுக்கான விசாரனையானது சர்வதேசத்தின் பங்களிப்புடனேயே இடம்பெற வேண்டும்.
அவ்வாறு இடம்பெறுகின்ற விசாரனையில் சர்வதேச நீதிபதிகள் சர்வதேச மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் உள்வாங்கப்பட வேண்டியதுடன் தமிழ் தெரிந்த நீதிபதிகளும் பாதிக்கப்பட்ட மக்களை சார்ந்தவர்களும் உள்வாங்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்கள் எனும் போது அது வடக்கு கிழக்கை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே அவர்களில் இவ்விடயங்களை அறிந்தவர்களும் உள்வாங்கப்பட வேண்டும்.
இவ்வாறான விசாரனையினூடாகவே நீதியான விசாரனையை முன்னெடுக்க முடியும். இது தொடர்பில் உள்ளக விசாரனையை ஏற்றுக்கொள்ள முடியாது.
கொலை செய்த ஒருவரை நீதிபதியாக ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய விசாரனையானது காலம் கடத்தாது ஒர் குறிக்கப்பட்ட காலத்திற்குள் நடாத்தி முடிக்கப்பட வேண்டும்.
நாம் இதுவரை காலமும் போராடிக்கொண்டிருப்பது அரசாங்கத்தின் சலுகைகளுக்காகவோ அல்லது அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளையோ பெற்றுக்கொள்வதற்காகவோ இல்லை.
எமது மண்ணில் நாம் சுதந்திரமாகவும், சுயநிர்ணயத்துடனும் வாழ்வதற்காகவே போராடுகின்றோம் என பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
-http://www.tamilwin.com