யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கும் பொறுப்புக்கூறல் செயற்பாடு, தேசிய நல்லிணக்க வேலைத்திட்டங்கள் மற்றும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அண்மையில் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்த விடயங்கள் பல்வேறு காரணிகளை கோடிட்டுக்காட்டியுள்ளது.
குறிப்பாக அரசாங்கமானது பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு தேசிய நல்லிணக்க விவகாரங்களில் தமிழர் தரப்பை ஏமாற்றிவிடும் போக்கை கடைப்பிடிக்கின்றது என்ற தொனியிலான கூற்றை வடக்கு முதல்வர் முன்வைத்துள்ளார்.
அதாவது தமிழ் பேசும் மக்களின் ஓரளவு குறிப்பிடத்தக்க வகையிலான அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் வகையிலான தீர்வுத்திட்டம் ஒன்றை கொடுத்துவிட்டு பொறுப்புக்கூறல் செயற்பாட்டை அரசாங்கம் சூட்சகமாக தவிர்த்துவிடும் நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உண்மையில் தற்போதைய அரசியல் கள நிலைமைகள் மற்றும் நீதி வழங்கும் செயற்பாட்டுக்கிரமத்தில் என்ன நடக்கப்போகின்றது என்ற விடயமானது தெளிவில்லாமலேயே காணப்படுகின்றது. குறிப்பாக பொறுப்புக்கூறல் பொறிமுறை எவ்வாறு முன்னெடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்பதும் புதிய அரசியலமைப்பின் ஊடாக எவ்வாறு தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்படும் என்ற விடயமும் தெளி வற்றதன்மையாகவே காணப்படுகின்றது.
இதன் நீடித்தத் தன்மையையே வடக்கு முதலமைச்சர் எடுத்துரைத்திருக்கின்றார். அதாவது தென்னிலங்கையின் இந்த அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்திலான போக்குகள் குறித்த வரலாற்றை அறிந்து கொண்டுள்ள நிலையிலேயே இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
முதலில் வடக்கு முதல்வரின் முன்வைத்துள்ள கூற்றின் சாரம்சத்தைப் பார்ப்போம்.அதாவது “”வடக்கு கிழக்கு இணைப்பு என்பது அவசியம். ஆனால் முஸ்லிம் மக்களுக்கு ஒரு நிர்வாக அதிகார சபையை வழங்குவதில் தமிழ் மக்களுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.
வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ்ப் பேசும் அலகு என்பது எமது வருங்கால ஒற்றுமைக்கும், தமிழ்ப் பாரம்பரிய நிரந்தரத்திற்கும் மிக்க அவசியமான ஒன்றாகும். மத்திய அரசாங்கம் பொறுப்புக் கூறல் சம்பந்தமான ஜெனிவாத் தீர்மானத்தின் நோக்கை மழுங்கடையச் செய்யத் தன்னாலான சகலதையும் செய்து வருகின்றது.
இந்த அரசாங்கமோ எந்தப் பெரும்பான்மையின அரசாங்கமோ தரப்போகும் அரசியல் தீர்வு எமக்கு முழுமையான திருப்தியை அளிக்கப் போவதில்லை. அவற்றை ஏற்பதென்றால் போனால் போகட்டும் என்ற வகையில் தான் நாம் அவற்றை ஏற்கக் கூடும். ஏனென்றால் தற்போது இருப்பதிலும் பார்க்க சில முன்னேற்றங்களையே அரசாங்கம் ஆங்காங்கே முன் வைக்கும்.
எனவே பொறுப்புக் கூறலை நாம் தியாகம் செய்து விட்டு பெறுமதியான நிலையான தீர்வொன்றையும் அரசியல் ரீதியாகப் பெற முடியாத நிலைமையே உருவாகும். இன ரீதியாகச் சிந்திக்கக்கூடிய பெரும்பான்மை மக்களிடையே, அவர்களை நீதிகாண வைக்க வேண்டுமானால் பொறுப்புக் கூறலை இறுக்கிப்பிடித்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
சிங்கள மக்கள் தலைவர்கள் நெருக்குதல் இல்லாவிட்டால் தமிழர்களுக்கு எந்த வித சலுகையும் தர முன்வர மாட்டார்கள் என்பது கொழும்பில் பிறந்து வளர்ந்த என்னுடைய முடிவான கருத்து. முன்னைய அரசாங்கம் வெளிப்படையாகத் தரமாட்டோம் என்றது.
இப்போதைய அரசாங்கம் எல்லாந் தருவோம் என்று காலத்தைக் கடத்திக் கொண்டே செல்கின்றது. அது மட்டுமல்ல. சில யுக்திகளையும் கையாளுவதைக் காணக் கூடியதாக உள்ளது. அதாவது “எல்லாம் தருவோம்” என்று எங்களுக்குக் கூறிவிட்டு எம்மை எம்மிடையே அல்லது எமது சகோதர இனங்களுடன் மோத விடும் ஒரு பாங்கினைக் கண்கூடாகக் காண்கின்றோம்.
மீண்டும் எம்மிடையே குழப்பத்தை உண்டாக்கி எம்மக்களை முக்கியமான அவர்களின் குறிக்கோள்களில் இருந்து வழிமாற்ற முற்படுகின்றது அரசாங்கம். நாங்கள் இப்பேர்ப்பட்ட முரண்பாடுகளில் எங்கள் சகல பலத்தையும் கவனத்தையும் பிரயோகித்துக் கொண்டிருக்கும் போது அரசியல் சம்பந்தமான மிகக் குறைந்த ஏற்பாடுகளுடன் அரசியல் யாப்பு வரைவொன்றைத் தயாரித்து விடுவார்கள்.
நான் இப்பொழுது தான் அரசியல் சூழ்ச்சிகளைப் படித்து வருகின்றேன். ஒரு தேர்தலில் வென்ற பின் எதிர்த்தரப்பாரை மேலெழும்ப விடக் கூடாது. வழக்கு மேல் வழக்கு வைத்து விசாரணை வைத்து அவர்களின் எதிர்ப்புச் சக்தியை மழுங்கடிக்க வேண்டும் என்பது நான் கற்ற ஒரு பாடம். தமிழ் மக்களாகிய நாங்கள் இதுவரையில் பல தடவைகள் ஏமாற்றப்பட்டே வந்துள்ளோம்.
படிப்பிலும் பண்பிலுந் தான் நாங்கள் ஜாம்பவான்கள். யுக்தியிலும் குதர்க்கத்திலும் நாங்கள் சிறுபிள்ளைகள். இன்றைய நிலையில் எமது பிரச்சினைகளை நாம் இனம் காண வேண்டும். அவற்றை முழுமனதுடன் முழு சக்தியுடன் நாம் முன்னெடுக்க முன்வர வேண்டும். அரசாங்கங்களின் யுக்திகளுக்கு நாம் ஆளாகக் கூடாது. எமது ஒற்றுமையைக் குலைக்க அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் பலியாகக் கூடாது.
சர்வதேச நீதிபதிகளே விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும். போர்க் குற்றங்கள் பற்றிய உண்மையை அறிந்தால்த்தான் நல்லெண்ணத்திற்கு வழி வகுக்கலாம். எமது அரசியல் தீர்வைப் பொறுத்த வரையில் எமது இன அடையாளம், எமது நில அடையாளம், எமது பாரம்பரிய கலாசார அடையாளம், மொழி அடையாளம், எமது சமூக ஒன்றிப்பு போன்ற பலவற்றை வலியுறுத்தியே எமக்கான சுயநிர்ணய உரிமையை நாங்கள் பெற வழி வகுக்க வேண்டும்.
மாண்புடன், பாதுகாப்புடன், நிலைப்பாட்டுடன் நாங்கள் வாழ வழி காண வேண்டும்””இவ்வாறு பல்வேறு விளக்கங்களுடனும் வரலாற்று ஆதாரங்களுடனும் வடக்கு முதல்வர் தற்போதைய கள நிலையையும் தமிழ் பேசும் மக்களுக்கான நீதி மற்றும் அரசியல் தீர்வு விடயத்தின் யதார்த்தத்தையும் உணர்த்தியுள்ளார் என்றே கூறவேண்டும்.
அதாவது வடக்கு முதல்வர் முன்வைத்துள்ள இந்த விடயங்களை மிகவும் ஆழமாகவும் உன்னிப்பாகவும் அவதானிக்கவேண்டிய தேவை ஏற்படுகின்றது.இங்கு முக்கியமான ஒரு விடயத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது தீர்வு வழங்குவோம் என்றும் கூறிக்கொண்டு காலத்தை கடத்திக்கொண்டிருக்கும் செயற்பாட்டில் தமிழ் தலைமைகள் சிக்கிவிடக்கூடாது.
உண்மையில் அரசாங்கம் பொறுப்புக்கூறல் செயற்பாடு மற்றும் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் அரசியல் தீர்வு என்பனவற்றை இதய சுத்தியுடன் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றதா? என்பது கண்டறியப்படவேண்டும்.
இல்லாவிடின் கடந்த கால வரலாற்றுப் பதிவுகளை போன்று தமிழ் பேசும் மக்கள் மீண்டும் ஏமாற்றப்படப் போகின்றார்களா? என்ற கேள்வியும் எழுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தமிழ் பேசும் மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய வகையிலான வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தமிழர்களின் அபகரிக்கப்பட்ட காணிகள் மீள்வழங்கப்படவேண்டும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படவேண்டும் , வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிவில் நிர்வாகம் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பனவற்றை ஜனாதிபதியும் பிரதமரும் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அவற்றை நோக்கி இடம்பெறும் வேலைத்திட்டங்கள் தாமதமாகின்றதா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதாவது பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் இதய சுத்தியுடன் நடந்துகொள்ளுமா? என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.தற்போதைய தேசிய அரசாங்கத்துடன் மிகவும் இராஜதந்திர ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது.
குறிப்பாக நேரடியாக அரசாங்கத்தை எதிர்த்துவிடாமல் இராஜதந்திர ரீதியிலும் சமார்த்தியமாகவும் அரசாங்கத்துடன் செயற்பட்டு பாதிக்கப்பட்டோருக்கான நீதியையும் பொருத்தமான அரசியல் தீர்வையும் பெற்றுவிடலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகின்றது.
பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த இராஜதந்திர நகர்வுகள் அண்மைக்காலங்களில் ஒருசில சாதகமான சூழலையையும் தோற்றுவித்திருந்தது. குறிப்பாக புதிய அரசாங்கம் வந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சிவில் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
தொடர்ந்து யுத்த காலத்தில் அபகரிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் காணிகள் ஓரளவு மீளக்கிடைக்க ஆரம்பித்தன. விரைவாக காணிகளை மீள்வழங்கும் நோக்கில் விசேட செயலணியும் உருவாக்கப்பட்டது.அதுமட்டுமன்றி பொறுப்புக்கூறல் விடயத்திலும் கடந்த அரசாங்கத்தை போலன்றி புதிய அரசாங்கமானது ஓரளவு ஆரோக்கியமான அணுகுமுறையை முன்னெடுத்தது என்று கூறலாம்.
குறிப்பாக வெ ளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கி நம்பகரமான சுயாதீனமான விசாரணை பொறிமுறையை முன்னெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கும் இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியது.
இது ஒரு மிக முக்கிய திருப்புமுனையாக கருதப்பட்டது. இதற்கு முன்னர் பதவியிலிருந்த அரசாங்கம் ஜெனிவா பிரேரணையில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதனை பரிசீலிக்கக்கூட தயாராக இருக்கவில்லை. எனினும் புதிய அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரனை வழங்கியமை ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தியது.
இவ்வாறு அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துச் செல்லும் இராஜதந்தர அணுகுமுறையானது ஓரளவு வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தன என்பதை மறுக்க முடியாது. மிகவும் விசேடமாக அரசாங்கம் காணாமல் போனோர் குறித்த நிரந்தர அலுவலகத்தினை அமைப்பதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு மஹிந்த ஆதரவு அணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவந்தனர். சட்டமூலம் விவாதத்துக்கு வந்தபோதும் கடுமையான எதிர்ப்புவெளியிடப்பட்டது. ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும் வகையில் அரசாங்கம் சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்பதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் காலத்தை இழுத்தடிக்கும் வேலைத்திட்டங்கள் அணுகுமுறைகள் இடம்பெறுமாயின் அது தொடர்பில் அனைத்துத் தரப்பினரும் சிந்திக்கவேண்டும்.
அதன்படி வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தவேண்டும் என்பதுடன் பொறுப்புக்கூறலையும் அரசியல் தீர்வையும் பெற்றுக்கொள்ள தமிழர் தரப்பும் இராஜதந்திரமாக செயற்படவேண்டும் என்பதே இங்கு முக்கியமாகும்.
இந்த இடத்தில் இராஜதந்திர அணுகுமுறை என்பது மிகவும் அவசியமானதாகும். அதேநேரம் அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசியல் தீர்வையும் பொறுப்புக்கூறல் ஊடாக பாதிக்கப்பட்டோருக்கு நீதியையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எடுப்பார்களா?
-http://www.tamilwin.com