பௌத்தமாக மாற்றப்படும் இந்துகோயில்கள்! இலங்கைத்துறை முகத்துவாரம் லங்கா பத்துனவாக மாற்றம்

திருகோணமலை நகரில் உள்ள சிறிய கிராமமே இலங்கைத்துறை முகத்துவாரம் ஆகும். இந்த பகுதியில் இடம் பெற்ற இராணுவத் தாக்குதலை அடுத்து 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அந்த பகுதி தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

அப்போது இடம் பெற்ற இராணுவ தாக்குதலின் போது இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் வாழ்ந்து வந்த பொதுமக்கள் அங்கிருந்து மட்டக்களப்பிற்கு இடம் பெயர்ந்து சென்றனர்.

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பின்னர், இந்த கிராமப் பகுதி இலங்கை அரசாங்கத்தினால் “லங்கா பத்துன” (Lanka Patuna) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

 

குறித்த பகுதியில் புதிதாக பல புத்த கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. குறித்த கோயில்களில் வழிபடுவதற்காக அதிக எண்ணிக்கையிலான சிங்களவர்கள் குறித்த பகுதிக்கு வருகை தருகின்றனர்.

 

இந்தக் கிராமத்தில் இருந்து 2008ஆம் ஆண்டு வேருகல் – ஈச்சிளம்பட்டு பிரதேச செயலகத்திற்கு இடம் பெயர்ந்த பொது மக்கள் குறித்த இடத்தில் இருந்த இந்து கோயில்கள் அழிக்கப்பட்டிருப்பதை சுற்றுலாவிற்காக வருகைத்தந்த போது பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் அந்த பகுதியில் இருந்த முருகன் கோயில் கூட பெயர்க்கப்பட்டு பௌத்த கோயில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதே வேளை, 4ஆம் நுாற்றாண்டில் புத்தரின் பல் இந்தியாவில் இருந்து அந்த பகுதிக்கே கொண்டு வரப்பட்டதாக சிங்கள நூல்களில் கூறப்பட்டுள்ளது.

தற்போது லங்கா பத்துன என பெயர்மாற்றப்பட்டுள்ள பகுதி ஒரு பிரபல்யமான இடமாக வளர்ந்து வருவதுடன் நாளுக்கு நாள் ஏராளமான பௌத்தர்கள் இங்கு வருகின்றனர். மேலும், தற்போது கடற்கரை பகுதியில் போக்குவரத்துக்காக பாலம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

தமது இந்து கோயில்கள் அழிக்கப்பட்டிருப்பதை அப்பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து சென்ற மக்கள் மீண்டும் அப்பிரதேசத்திற்கு வருகை தரும் போது மரத்தின் நிழலிலேயே இளைப்பாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்போது நாங்கள் என்ன செய்ய முடியம்? எங்களது இந்த இடத்தில் அவர்கள்குடியேறிவிடுவார்களோ? என புலம்பெயர்ந்து சென்றவர்கள் தொடர்ந்தும் அச்சம் கலந்த கேள்விகளை எழுப்பிக் கொண்டே உள்ளனர்.

இருப்பினும் இந்த பகுதியில் மற்றுமொரு முருகன் கோவிலை கட்டுவிப்போம் எனபுலம்பெயர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்லடியின் நிலை..

இதே வேளை, இலங்கைதுறை பகுதியில் இருந்து அண்மையிலேயே கல்லடி என்ற இடம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள இந்து கோவிலின் அருகில் மற்றுமொரு புத்த விகாரை புதிதாக கட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதி முழுவதும் பாறையாலேயே அமைக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதியை தமிழீழ விடுதலை புலிகளின் தொடர்பாடல் கோபுரமாக அக்காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இராணுவம் அந்த இடத்தை கைப்பற்றிய போது அங்கு அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் கோவில் அழிக்கப்பட்டதுடன், குறித்த இடத்தினை பௌத்தர்களின் வரலாற்றுத் தளம் என அரசாங்கத்தின் தொல்பொருள் ஆய்வுத் திணைக்களமும் அறிவித்துள்ளது.

பௌத்தர்களின் வரலாற்று தளம் என கூறுகின்றீர்களே அப்போது எப்படி பிள்ளையார் சிலை அந்தப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது என குடியிருப்பாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அந்தக் கேள்விக்கு அரசாங்கத்தின் தொல்பொருள் ஆய்வு திணைக்களம் தரப்பில் அந்த பிள்ளையார் சிலை சிலரால் கைவிடப்பட்டு சென்றது. என பதில் வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரசாங்கமே அவர்களுக்கு ஆதரவு, அரசின் மூலமாகவே இவை நடைபெறுகின்றது இதில் நாம் கேட்டு எதுவுமே நடக்கப் போவதில்லை என அந்த பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாரிடம் அவர்கள் தெரிவித்திருந்த போதும் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றே பொதுமக்கள் கூறுகின்றனர்.

அதே போன்று முன்னதாக திருகோணமலை மாவட்டத்தில் ஒரு இந்து கோவில் இருந்தது. ஆனால் அது தற்போது பௌத்த நிலமாக மாற்றப்பட்டு அந்த பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு முழுமையான பாதுகாப்புடன் காணப்படுகின்றது.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவும் திட்டங்கள் காரணமாகவும் கிண்ணியா பகுதியில் சிங்கள மக்களின் தொகை அதிகரித்துள்ளது.

கிண்ணியா பகுதிக்கு பார்வையாளர்களாக அனைவரும் செல்லலாம் ஆனால் அங்குள்ள சிவன் கோவிலில் பூஜை போன்றவற்றை தமிழ் மக்களால் மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தளவிற்கு நியாயம் உண்டு என்பதனை அறிய முடியவில்லை.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தமிழ் மக்கள்..

எங்களது நிலங்களை பெற்றுக் கொள்வது வெகு தொலைவில் இல்லை. ஆயுத மோதல் காரணாக முள்ளிவாய்காலில் பலர் கொல்லப்பட்டனர். இறுதியில் சிலர் உயிர் பிழைத்தனர் அவர்கள் கால்களை இழந்த மற்றும் ஊனமுற்ற நிலையிலேயே தற்போதும் கடைகள் வைத்து கொண்டு தங்கள் அன்றாட வாழ்கையை வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் அரசாங்கம் அவர்களுக்கு எந்த ஆதரவையும் வழங்கவில்லை. ஆயுத மோதல் காரணமாக பாதிக்கப்பட்ட முள்ளிவாய்கால் மக்களின் கடைகளுக்கு செல்லும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவர்களை கண்டவுடனேயே புன்னகைக்கின்றனர். இங்கு அவர்களுடைய மனவேதனையை புன்னகைப்பவர்கள் அறிந்து கொள்வதில்லை.

யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் கடந்தும், மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றாலும் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் கொள்கைகளை அதாவது சிங்களமயமாக்கலை தொடர்ந்தும் செய்து கொண்டே தான் இருக்கின்றது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

பௌத்த மதத்திற்கு முதன்மை இடத்தை வழங்குவது மற்றும் பௌத்த மதத்தை பாதுகாப்பது மற்றும் ஊக்குவிப்பது என்பன இலங்கை அரசியலமைப்பில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த பேரினவாதம், இலங்கை அரசாங்கம் அகியவற்றின் சுமைகளை தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்தவர்கள் என சிறுபான்மையினர் ஆகியவர்கயே எதிர்கொள்ள வேண்டி உள்ளதனை மறுக்க முடியாது.

வடக்கு – கிழக்கு மக்கள் மனதில் மனக் கசப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பிரச்சினை தொடர்பில் தற்போதுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் எவ்வாறு சமாளிக்க திர்மாணித்துள்ளது என்பதனையும் அதன் மூலம் மதத்திற்கும் கலாச்சாரத்திற்கும் மேலும் மக்களின் நம்பிக்கைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படா வண்ணம் அமையுமா என்பதனை பொறுத்திருந்தே அறிந்து கொள்ள முடியும்.

-http://www.tamilwin.com

TAGS: