விஷ ஊசி விவகாரம்! போராளிகளைச் சோதிக்கும் திட்டத்தில் மாற்றம்

munnal_poralikal_0புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவப் பரிசோதனை நடவடிக்கையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மாற்றம் மேற்கொண்டுள்ளது.

வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் 50 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள முன்னர் தீர்மானிக்கப்பட்டது.

எனினும், தற்போது அதனை விடுத்து அனைத்துப் போராளிகளையும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும், இதனை 5 வருடங்களுக்கு தொடர்ந்து முன்னெடுக்கவும் வட மாகாண சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின்போது விஷ ஊசி ஏற்றப்பட்டது எனவும், இதனால் போராளிகள் பலர் உயிரிழக்கின்றனர் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்கு வட மாகாண சுகாதார அமைச்சு முடிவெடுத்தது.

இதற்காக சிறப்பு மருத்துவர் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவினர் கடந்த வாரம் ஓர் ஆலோசனையை முன்வைத்தனர்.

அதில், வடக்கின் 5 மாவட்டங்களிலிருந்தும் எழுந்தமானமாக 50 முன்னாள் போராளிகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அந்த முடிவுகளுக்கு அமைய தொடர் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

தற்போது இந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்று விடுதலையான அனைத்து முன்னாள் போராளிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை முன்னெடுக்க முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, வடக்கின் 5 மாவட்டங்களிலும் உள்ள பொது வைத்தியசாலைகளில், முன்னாள் போராளிகளுக்கு தனியான ‘கிளினிக்’ சேவை ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை முன்னாள் போராளிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளக் கூடிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, 5 வருடங்களுக்கு தொடர்ச்சியாக இந்தக் ‘கிளினிக்’ சேவையை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: