30 வருடங்களின் பின் புத்துயிர் பெறும் ஆனையிறவு

1937ஆம் ஆண்டிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஆனையிறவு உப்பளமானது 1990ஆம் ஆண்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் சேதமடைந்த நிலையில் 2004ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு தொடர் யுத்தம் காரணமாக முற்றாக செயலிழந்த நிலையில், முப்பது ஆண்டுகளின் பின்னர் இன்று மீண்டும் ஆனையிறவு உப்பளத்தில் உப்பு அறுவடை வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு மக்களுக்கு புதிய வாழ்வாதாரத்திற்கான செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான கட்டுமானப்பணிகள் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் 100 மில்லியன் ரூபா செலவில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மேலும் 25 மில்லியன் ரூபா செலவில் கட்டடங்கள் களஞ்சியம் என்பன புனரமைப்பு செய்யப்பட்டன.

இன்றைய தினம் உப்பளத்திற்கான கட்டடத் தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், மற்றும் கண்டாவளைப் பிரதேச செயலாளர் முகுந்தன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டு உப்பு அறுவடை செய்தல் மற்றும் அடிக்கல் நாட்டு விழா என்பவற்றில் பங்குகொண்டிருந்தனர். அத்துடன் உப்பள அதிகாரிகள், ஊழியர்கள், எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த காலங்களில் சுமார் 50000 மெற்றிக்தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டதாகவும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள அறுவடையில் முதற் கட்டமாக 8000 மெற்றிக்தொன் உப்பினை உற்பத்தி செய்யமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உப்பளத்தில் முன்பு 650 பணியாளர்கள் பணியாற்றி இருந்த போதும் இப்பொழுது 31 பணியாளர்களே வேலை செய்வதனை அவதானிக்க முடிகிறது. அத்துடன் இன்றைய தினம் இயந்திர இயக்குனர்கள் மற்றும் சிற்றூழியர்கள் ஐம்பது பேருக்கு நியமனம் வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த கால யுத்தத்தின்போது வடக்கில் தொழில் செய்யும் பல இடங்கள் சேதங்களுக்கு உள்ளாகி இருந்தன. ஆனால் யுத்தம் முடிவடைந்து ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல தொழில்துறைகள் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டிருந்த பல இடங்கள் தற்போது விளை நிலங்களாகவும், மக்களுக்கு ஏதாவது ஒரு தொழிலை செய்யக்கூடிய வகையிலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த நல்லாட்சி அரசு பல நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் அமைத்து வேலையற்று இருக்கும் பலருக்கும், குடும்பத் தலைவிகளுக்கும் வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: