அடிப்படை வசதியின்றி தவிக்கும் இலங்கை அகதிகள்!

refugees tnஇந்தியாவின் காட்டுமன்னார் கோவில் முகாமில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர் என தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இலங்கை தமிழர்கள், தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.

இவர்கள் மாநிலம் முழுவதும் 107 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, விருத்தாச்சலம், காட்டுமன்னார்கோவில் ஆகிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். தற்போது தமிழகத்தில் உள்ள முகாம்களில் 64 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கின்றனர்.

இந்நிலையில், காட்டுமன்னார்கோவில் முகாமில் முன் சேமிப்பு கிடங்கில் தடுப்புகளை அமைத்து அகதிகள் வசித்து வந்தனர்.

நீண்ட போராட்டத்துக்குப்பின் கடந்த 2011ஆம் ஆண்டு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இவர்களுக்கு சிறிய அளவிலான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

இந்த வீடுகளில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளை கட்டுவதற்கு அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டது.

இந்த முகாமில் வசிப்பவர்களின் குழந்தைகள் மேற்படிப்புக்கு சேருவதில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். முகாமில் உள்ளவர்களில் 30 பேர் தற்போது படித்து வருகின்றனர்.

இவர்களில் 8 பேர் மேற்படிப்பு படித்து வருகின்றனர். 2000ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டில் முகாமைச் சேர்ந்த ஒருவர் மருத்துவப் படிப்பில் சேர்ந்து மருத்துவர் ஆனார். அதன் பிறகு இடஒதுக்கீடு இரத்து செய்யப்பட்டது.

இதனால் பல மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவப் படிப்பில் சேர இயலவில்லை என அகதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து முகாமில் தங்கியுள்ள அகதிகள் குறிப்பிடுகையில், முகாமில் தங்கியுள்ளோருக்கு வருமானம், வாழ்வாதாரம் முக்கியப் பிரச்னையாக உள்ளது.

இதனால் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்ல விரும்புகின்றனர். அந்நாட்டில் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதால் வெளியில் வேலைக்கு செல்லலாம்.

சோதனையும் தவிர்க்கப்படுகிறது. ஆனால் இங்குள்ள முகாமில் தங்கியுள்ளோர் வேலைக்குச் செல்ல முடியாது. திடீர் சோதனையும் நடைபெறுகிறது.

இதனால் பெரும்பாலானோர் வேலைக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். அவுஸ்திரேலியாவுக்கு அகதிகள் ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

இதற்கு இந்திய அரசிடம் விண்ணப்பித்து முறையான அனுமதி பெற்று விசாவுடன் செல்லலாம். இந்த அனுமதியைப் பெற கடவுச்சீட்டு முக்கியமானதாகும்.

ஆனால், இந்த ஆவணங்களை இந்திய அரசு வழங்காததால் பலர் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்கின்றனர். எனவே, எங்களுக்கு கடவுச்சீட்டு வழங்க இந்திய அரசு முன்வர வேண்டும் என்கின்றனர்.

மேலும், முகாமில் ரேஷன் அரிசி வழங்கி வருகின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக வழங்கப்படும் அரிசி கெட்டுப்போனதாக உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது.

எனவே, நல்ல அரிசியை வழங்க வேண்டும். எங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையும் போதவில்லை. வேறு வருமானத்துக்கும் வழியில்லை. எனவே அரசு உதவித் தொகையை உயர்த்தித்தர வேண்டும் என்றார்.

மேலும், இங்கு நிரந்தர குடிநீர்த் தொட்டி இல்லை என்றும், அவ்வப்போது குடிநீர் கொண்டுவந்து விநியோகம் செய்யப்படுவதாகவும், இந்த தண்ணீர் தங்களுக்கு போதுமானதாக இல்லை என்றும் அகதிகள் தெரிவிக்கின்றனர்.

தெருவிளக்கு வசதி இல்லை எனவும் கூறுகின்றனர். எனவே, அரசு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: