தமிழர் படுகொலையில் ஐ.நா.வின் தவறுக்கு பான் கீ மூனின் பதில் என்ன?

ban_ki_moon20154ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் இந்த நாட்டில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கினாலும் தமிழர்கள் விடயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

கடந்த ஆட்சியில் நடந்த அதே நீதி நிர்வாகங்களே இந்த ஆட்சியிலும் நடைபெற்றுவருகின்றது.

சிங்கள அரசிற்கு எதிராக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை நல்லிணக்கம் என்ற போர்வையில் பங்காளியாக மாற்றிய நல்லாட்சி அரசு, தமிழர்களுக்கு யுத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அநீதிகளுக்கு இன்னும் தீர்வை வழங்கவில்லை.

மீள்குடியேற்றம், அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, கல்வி, வளப்பகிர்வு உள்ளிட்ட அனைத்திலும் தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகின்றது.

அரசாங்க அதிகாரிகள் மாகாண ஆளுநர்கள் ஆகியோர் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களை விட அதிகாரம் படைத்தவர்களாக உள்ளதுடன், அவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளாக உள்ளமையானது தமிழ் மக்கள் தொடர்ந்தும் தங்களது நிலங்களில் இரண்டாம்தரப் பிரஜைகளாக வாழ்வதற்கு காரணமாக உள்ளது.

இது தமிழ் மக்கள் மத்தியில் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இல்லாதொழித்துள்ளது.

ஐ.நா. மற்றும் இலங்கை அரசுமீதான விமர்சனங்கள்

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் நடந்துகொண்ட விதம் குறித்த விமர்சனங்களும், அதனூடாக ஐ.நா மீதான நம்பிக்கை அற்றதன்மையும் தமிழ் மக்கள் மத்தியில் ஆழப்பதிந்துள்ளது.

இறுதி யுத்தத்தில் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடியதுமான அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபையையே தமிழ் மக்கள் நம்பியிருந்தனர்.

ஆனால் அந்த நம்பிக்கையை ஐ.நா இல்லாமல் செய்ததுடன், அதற்கான பரிகாரத்தையும் ஐ.நா செய்யத்தவறியுள்ளது என்ற குற்றச்சாட்டு இன்றும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.

தங்களது மக்களின் படுகொலைகளில் ஐ.நாவின் பங்கும் இருந்துள்ளது என்பதை தமிழ் மக்கள் கருதுகின்றனர். இது சர்வதேச ரீதியாக ஐ.நா அமைப்புக்கு ஏற்பட்ட அவப்பெயர் என்பதோடு, அது ஏற்படக்காரணமான எந்த விசாரணைகளையும் ஐ.நா கண்டறிந்ததாக தெரியவில்லை.

மாறாக இலங்கை அரசுடன் இணைந்து மீண்டும் பெயரளவிலான அதாவது இறுதி யுத்தத்தின் போது எவ்வாறு மக்கள் கொல்லப்படவில்லை என்று அரசு கூறியதோ அதை எவ்வாறு ஐ.நா நம்பிக்கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதோ அதைப்போன்று தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் நல்லிணக்க செயற்பாடுகளையும் ஐ.நா நம்பிக்கொண்டிருப்பது மிகுந்த ஆபத்தானது.

அரசாங்கத்தை பொறுத்தமட்டில் தங்களது நாட்டிற்கு சர்வதேச ரீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை கலைந்து சர்வதேச நீதிப்பொறிமுறைகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கான கட்டமைப்புக்களை உருவாக்குகின்றதே தவிர, அதனை நீதியாகவும் நியாயமாகவும் உண்மைத்தன்மை கொண்டதாகவும் செயற்படுத்துவதில் எந்த அக்கறையும் காட்டியதாக தெரியவில்லை.

எனவே, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற எந்த செயற்பாட்டையும் நடுநிலையாக நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை. இந்த நாட்டில் உள்ளகப்பொறிமுறை என்பது பொய்த்துப்போன ஒன்றாகவே உள்ளது.

எனவே நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து விடயங்களையும் சர்வதேச கண்காணிப்பின் ஊடாக செயற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை தமிழர்கள் பான் கீ முனிடம் முன்வைக்கவுள்ளனர்.

முள்ளிவாய்காலில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டது குறித்து ஐ.நா மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கும் அது குறித்து ஐ.நா ஏன் விசாரணைகளை நடத்தவில்லை என்பதற்கான பதிலை பான்கீ முன் வடகிழக்கு தமிழர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை இலங்கை விடயத்தில் விட்ட மிகப்பெரிய மனிதாபிமானத் தவறை இனிமேல் விடாதிருப்பதற்கு ஐக்கியநாடுகள் சபை மேற்கொண்ட மேற்கொள்ள இருக்கின்ற நடவடிக்கைகள் குறித்து தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தி நடந்த கொலைகளுக்கு மன்னிப்பும் வருத்தமும் பான்கீ மூன் தெரிவிக்கவேண்டும் என்பதே பெரும்பான்மை தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இலங்கையில் நடந்த தவறுகளுக்கு பான்கீ மூனின் பதில் என்னவாக இருக்கப்போகின்றது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

-http://www.tamilwin.com

TAGS: