உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று யாழ்ப்பாணம் செல்கிறார்.
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரையும் இவர் அங்கு சந்திக்கின்றார்.
நண்பகல் 12 மணிக்கு பொது நூலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும், பிற்பகல் 1 மணிக்கு ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயையும், அதன் பின்னர் வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்திக்கவுள்ளார்.
இந்தச் சந்திப்புக்களைத் தொடர்ந்து வலி.வடக்குப் பகுதியிலுள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களையும் மீள்குடியேறிய மக்களையும் சந்தித்து அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறியவுள்ளார்.
பான் கீ மூனுடனான சந்திப்பில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் கூட்டமைப்பினர் விளக்கிக் கூறவிருப்பதுடன், அரசியலமைப்புத் திருத்த செயற்பாடுகள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இலங்கை வந்தடைந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன், அன்று இரவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்திருந்தார்.
அதன் பின்னர் நேற்று வியாழக்கிழமை முற்பகல் காலிக்குச் சென்ற அவர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். காலியில் சர்வமதத் தலைவர்கள் குழுவையும் அவர் சந்தித்திருந்தார்.
நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு இடம்பெற்றது.
பான் கீ மூனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குமார் தலைமையிலான குழுவினர் பௌத்தாலோக மாவத்தையில் உள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.
ஐ.நாவின் செயற்பாடுகளைக் கண்டித்த வாசகங்களைக் கொண்ட பதாதைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும், அப்பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐ.நா அலுவலகத்துக்குள் நுழையாமல் வீதித் தடுப்பும் போடப்பட்டிருந்தது.
எனினும், ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் சார்பில் மகஜர் கையளிக்கப்பட்டது. அதேநேரம், மஹிந்த ஆதரவு அணியினரும் ஐ.நா அலுவலகத்தில் மகஜரொன்றைக் கையளித்திருந்தனர்.
பான் கீ மூன் கொழும்பிலுள்ள ஐ.நா தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றியிருந்ததுடன், அவர்களுடன் குழுப் புகைப்படமொன்றையும் எடுத்துக் கொண்டார்.
இன்று ஐ.நா செயலாளர் நாயகம் யாழ்ப்பாணம் செல்வதை முன்னிட்டு அங்கு காணாமல்போனவர்கள் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
-http://www.tamilwin.com