வலி வடக்கில் மீள் குடியேறிய மக்களை நேரில் சந்தித்த பான் கீ மூன்

வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து அண்மையில் மீள்குடியேறிய பிரதேசத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீமூன் இன்று யாழ். குடாநாட்டிற்கு சென்று இருந்தார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், வட மாகாண முதலமைச்சரையும், அமைச்சர்களையும் சந்தித்து அவர் கலந்துரையாடியிருந்தார்.

அதன்பின் வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து அண்மையில் மீள்குடியேறிய மக்களின் வீட்டுத்திட்டங்களையும், மக்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தும் வகையில் அவர் பளை வீமன்காமம் கிராமத்தின் மத்திய பகுதிக்கு விஐயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இவ்விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நாயகம் பான்கீ மூன் தலைமையிலான ஏழுபேர் கொண்ட குழுவினர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன் போது அந்தப் பகுதி மக்களுடனான சினேகபூர்வமான கலந்துரையாடலையும் ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் நாயகம் மேற்கொண்டார்.

மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வீட்டுத் திட்டங்கள் மற்றும் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் ஆராய்ந்த அவர், குழந்தையொன்றை தூக்கி வைத்து அளவளாவியமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தங்களின் எதிர்காலப் எதிர்பார்ப்புகள் தொடர்பாக மக்கள் இதன் போது தமது கருத்துக்களை ஐ.நா பொதுச் செயலாளரிடம் முன்வைத்தனர்.

இந்த விஜயத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் மாவட்டச் செயலகத்தின் காணி மேலதிக செயலாளர் ப.முரளிதரன், வலி வடக்குப் பிரதேச செயலாளர் ஸ்ரீ.மோகன், மற்றும் மீள்குடியேற்ற மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

-http://www.tamilwin.com

TAGS: