தன்மூப்பான மதமாற்றம் முடிவுக்கு வரும் என்ற நஸ்ரியின் உத்தரவாதத்துக்கு அனைத்து சமய அமைப்பு வரவேற்பு

unilateralசட்டச்  சீரமைப்பு (திருமணம்,  மணமுறிவு)ச்  சட்டம்  1976-க்குக்   கொண்டுவரப்படும்   திருத்தங்களால்    தன்மூப்பான   மதமாற்றங்களுக்கு  முற்றுப்புள்ளி   வைக்கப்படும்   என  சுற்றுலா,  பண்பாட்டு   அமைச்சர்   கூறியிருப்பதை  மலேசிய   பெளத்த,  கிறிஸ்துவ,   இந்து,  தாவோயிச  ஆலோசனை  மன்றம் (எம்சிசிபிசிஎச்எஸ்டி)  வரவேற்றுள்ளது.

“சிறார்  மதமாற்றம்  கூடாது   என்பதே  எம்சிசிபிசிஎச்எஸ்டி-இன்  நிலைப்பாடாக   என்றும்  இருந்து  வருகிறது.  அதுவே   நீதியாகும்    அரசமைப்புப்படி   நடப்பதுமாகும்.

“முதிரா வயதுடைய   ஒருவரை   மதமாற்றம்   செய்ய   வேண்டுமானால்  மணவாழ்க்கையில்  இணைந்த  இருவரும்   சம்மதிக்க     வேண்டும்”,  என   அனைத்துச்  சமய  அமைப்பின்  உதவித்   தலைவர்   ஜாகிர்  சிங்   கூறினார்.

இது  2009,  ஏப்ரலில்  அமைச்சரவை  எடுத்த  முடிவுக்கும்    ஏற்புடையதாகும்   என   அந்த   அமைப்பு    தெரிவித்தது.    அப்போதைய   அமைச்சரவை   சிவில்  திருமணத்தில்   பிறந்த  ஒரு   பிள்ளையை     மதம்  மாற்ற   பெற்றோர்  இருவரின்   சம்மதமும்   தேவை  என்று  குறிப்பிட்டிருந்தது.

அந்த  அமைச்சரவை   முடிவு    பின்பற்றப்படும்  என    2009-க்குப்  பின்னர்   அமைச்சர்  ஒருவர்   தெரிவித்திருப்பது    இதுவே  முதல்  முறையாகும்    என  ஜாகிர்  கூறினார்.