புலிகளின் கொடிகளை வைத்துக்கொண்டு மலேசியாவில் போராட்டம் மேற்கொள்ள அனுமதி உள்ளதா? என்பது தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்தார்.
விடுதலைப் புலிகளின் கொடிகளை வைத்துக் கொண்டு பாரிய அளவிலான போராட்டங்களை மலேசியாவில் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு மலேசிய அரசு அனுமதி அளித்துள்ளதா? இது தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு எந்த விதமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது? எப்போது இதற்கு பதில் கொடுக்கப்படும்? போன்ற பல கேள்விகளையும் அவர் எழுப்பினார்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த கேள்விகளை முன்வைத்தார்.
மேலும் விடுதலை புலிகளின் கொடிகளை பாவித்து பாரிய போராட்டங்களை முன்னெடுத்த ஆர்ப்பாட்டகாரர்களை ஏன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை? இலங்கை வெளிவிவகாரம் இது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளதா எனவும் பல கேள்விகளை வாசுதேவ நாணயக்கார முன்வைத்தார்.
குறித்த கேள்விகளக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
இவ்வாறாக புலிகளின் கொடிகளை பிடித்துக் கொண்டு போராட்டங்களில் ஈடுபடுவதனை மலேசியா நாட்டு அரசிற்கு தடுக்க முடியாமல் இருக்கலாம், பல நாடுகளில் இவ்வாறான போராட்டங்கள் இடம் பெற்று கொண்டே வருகின்றது என கூறினார்.
மேலும் இந்த விடயத்தை ஊடகங்கள் பெரிது படுத்தி புலிகளே போராட்டங்களில் ஈடுபட்டனர் எனவும், தாக்குதலில் ஈடுபட்டது புலிகளே எனவும் பிரச்சாரம் செய்து வருகின்றன.
இவ்வாறாக மிகைப்படுத்திய கருத்துக்களை ஊடகங்கள் வெளியிடுவதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
மேலும் மலேசியா அரசுடன் இலங்கை நட்புறவை கொண்டுள்ளது, அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் நண்பர்களே, முறையான விசாரணைகள் இடம் பெறும். அது வரையிலும் இந்த தாக்குதல் விடயம் தொடர்பில் எவரும் பெரிது படுத்த வேண்டாம் எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com