மதிப்பும், மரியாதையும் உள்ளத்தில் இருந்து வரவேண்டும் என்கிறார்கள் உளவியலாளர்கள். நம்மோடு கூடியிருப்பவர்களை, அல்லது நம்மில் பெரியவர்களுக்கு வயதின் காரணமாக மரியாதை கொடுப்பது உண்டு.
இன்னொருபுறத்தில், அவர்களின் திறமைகளைக் கண்டு, வியந்து, போற்றி அதன் மூலமாக மரியாதை கொடுப்பது இன்னொரு ரகம்.
இந்த இருவேறு நிலைகளில் இருந்து நோக்கில், இலங்கை அரசியல் வரலாற்றில், போராட்ட காலத்தில் இருபெரும் தலைவர்களை எதிரிகள் பாராட்டி வியந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.
இலங்கை வரலாற்றை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த நாடாக சித்தரித்து, அதன் மூலமாக இலங்கையை தனித்துவமான சிங்கள பௌத்த நாடாக காக்க வைப்பது தான் இலங்கை வரலாற்றை எழுதிய மகாநாம தேரரின் நோக்கம் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.
அதற்கான பல்வேறு எடுத்துக்காட்டுக்களையும், யதார்த்தமின்மைகளையும் விளக்கி பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்று இருக்கின்றன.
இலங்கை வரலாற்றை மகாவம்சம் என்னும் நூல் கொண்டு மகாநாமதேரர் மகாவிகாரையில் இருந்து எழுதியிருந்தாராயினும், அவர் தனித்து பௌத்தத்தை முதன்மைப்படுத்தினார்.
துட்டகைமுனு மன்னனை புகழ்ந்தார். பௌத்தத்தையும், சிங்களத்தையும் காக்க வந்த தேவதூதன் என்று பறைசாற்றினார்.
இலங்கையை அடுத்த சந்ததிக்கு தனித்துக் கொடுக்காமல் சிங்கள பௌத்த நாடு என்று கொடுக்க நினைத்தார். அதனால் வரலாற்றை தான் விரும்பியவாறு எழுதினார். அது பிற்காலத்தில் நாட்டில் இரத்த ஆற்றை ஓடு வைத்ததது என்பதும் வரலாறாகிற்று.
இந்நிலையில், அன்று வரலாற்றை துட்டகைமுனுவிற்காக, பௌத்தத்திற்காக, சிங்களத்திற்காக படைத்த மகாநாமதேரர், துட்டகைமுனுவை எதிர்த்து ஒரு தமிழ் மன்னன் போரிட்டான், அவன், நீதி நெறி தவறாத, நன்னெறி காத்தவன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அதாவது, துட்டகைமுனுவின் எதிரியாக, பௌத்தத்திற்கு எதிரானவனாக தன்னுடைய வரலாற்று நூலில் எழுத வந்த மகாநாம தேரரின் கரங்கள், அதே சொற்கள், அதே சிந்தனை எல்லாளனின் நீதிநெறியைப்பற்றி, அவனது ஒழுக்கத்தைப் பற்றி, அவன் செய்த ஆட்சியைப்பற்றி தவறாக சொல்லுவதற்கு மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை.
தான் சார்ந்த, தன் இனம் சார்ந்த, தன் மதம் சார்ந்த எல்லாவற்றிற்கும் எதிரியாக எல்லாளனை பார்த்த மகாநாம தேரரிற்கு மனச்சாட்சி இடம்கொடுக்கவில்லை. அவனை நீதிநெறி காத்த தலைவனாக தன் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
இதுவொருபுறம் இருப்பின், இளைஞனான துட்டகைமுனு போரில் சூழ்ச்சியால் அனுராதபுரத்தை 44ஆண்டுகள் ஆண்ட எல்லாளனை கொன்று, இலங்கை தேசத்தை முழுவதுமாக கைப்பற்றியவன் ஒரு அறிவித்தலை விடுத்தான்.
“ போரில் இறந்த இந்த வீரனை(எல்லாளனை) இவ்விடத்தில்(அனுராதபுரத்தில்) புதைக்கின்றோம். இவ்வழியே செல்லும் எவரும், தமது வாகனத்தை நிறுத்தி, வாத்திய கருவிகளில் இருந்து இசைகளை எழுப்பாது, அமைதியாக வணக்கம் செலுத்தி செல்ல வேண்டும். ஏனெனில் இவ்விடத்தில் ஓர் வீரன்அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றான் என்று பறைசாற்றினான்.
இதுதான் அடிமனதில் இருந்து வரும் மரியாதை. துட்டகைமுனு நினைத்திருந்தால் எல்லாளனை ஒருவனைப் போன்று அடக்கம் செய்துவிட்டு தன் கடமைகளை செய்ய முடிந்திருக்கும். ஆனால் அங்கே உண்மையும், மரியாதையும் அவனை அவ்வாறு செய்யவிடவில்லை.
அதே நிலமை தான் இன்று மீண்டும் நடந்தேறியிருக்கிறது. இலங்கையில் முப்பது ஆண்டுகாலமாக ஆயுத ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தனர். போராடினர்.
எனினும் உலக நாடுகளின் ஆதரவோடு அவர்களின் போராட்டமானது பயங்கவரவாதமாக சித்தரிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார் என்று அறிவித்தது இலங்கை அரசாங்கம்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றி பல்வேறு கருத்துக்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், நேற்று முன்தினம் இலங்கை இராணுவத்தினரின் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன வெளியிட்டு இருக்கும் கருத்து தான் அதி உச்சம்.
பிரபாகரனோடு களத்தில் அவரது படைப்பிரிவு போரிட்டதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இத்தனைக்கும் தன்னுடைய நாட்டிற்கு எதிரான பயங்கரவாதி, படையினருக்கும் சிங்கள மக்களுக்கும் எதிரானவர் என்று இலங்கை அரசாங்கம் குறிப்பிடுகின்றது. அதனை அவர் மனதிலும் விதைத்திருந்தது. ஆனால் அந்த இராணுவ அதிகாரி நேற்று முன்தினம் சொன்னது என்ன?
பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.
அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். இலங்கை இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.
அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள்.
அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார்.
அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது. என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார் கமால் குணரட்ன.
இது அவரின் வெறும் வார்த்தைகள் அல்ல. ஒரு புறத்தில் அறத்தினைக்கற்ற பௌத்தநெறி படித்த புத்த பிக்குகள் நாட்டில் இனவாதத்தை விதைத்துக் கொண்டு இருக்கையில், தான் எதிரியாக நினைத்து போரிட்ட ஒருவரின் நல்லொழுக்கம் பற்றி இராணுவ அதிகாரி குறிப்பிடுவது அசாதாரணமானதல்ல.
நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் புலிகள் பற்றியும், பிரபாகரன் பற்றியும் இலங்கை அரசாங்கம் பயங்கரமான பயங்கரவாத செய்திகளை வெளியிட்டுக்கொண்டு இருக்கையில், போர்க்களத்தில் போராடிய இராணுவ அதிகாரி தன் உண்மையான மனச்சாட்சிக்கு ஏற்றால் போல் பேசியிருக்கிறார்.
ஆக, எதிரிகளாக இருப்பினும், அவர்களின் நல்ல குணம்குறித்து பேசுவதற்கு என்றும் நற்குணம் வேண்டும். அந்தவகையில் மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவை பாராட்டலாம்.
இலங்கை அரசியல் வரலாற்றில் எதிரிகளாலும் வியந்து போற்றும் அளவிற்கு தமிழர்களின் மாபெரும் தலைவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதை காலம் கடந்தும் எமது சந்ததிக்கு எடுத்துரைப்போம்.
இதுவே வரலாற்றைக் காக்கும் எமது கடமையாகும். அடுத்தடுத்த சந்ததியினருக்கு கொடுக்கும் பரிசும் இதுதான்.
-http://www.tamilwin.com