கடந்த யுத்த சூழலாலும் இனக்கலவரங்களாலும் மூன்றுமுறை இடம்பெயர்ந்து 387பேரை பலிகொடுத்த புல்லுமலை தமிழ்மக்கள் மீள்குடியேற ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த யுத்தத்தினால் இருந்தஇடமே தெரியாமல் சின்னாபின்னமான எல்லைப்புறக் கிராமங்களில் ஒன்றுதான் புல்லுமலை.
இது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்றுபிரதேச செயலாளர் பிரிவுக்குள் வருகின்ற எல்லைக்கிராமமாகும். முன்னர் அங்கு 620குடும்பங்கள் செல்வச்செழிப்புடன் வாழ்ந்துவந்திருந்தன.
நாட்டிலேற்பட்ட போர் இனக்கலவரம் போன்றவற்றால் 3முறை இடம்பெயர்ந்து மயிலம்பாவெளி பிரதேசத்தில் தஞ்சமடைந்தனர்.
அதாவது கடந்த 30வருடமாக அங்கு மீள்குடியேற்றம் நடைபெறவில்லை.பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து போன போன இடங்களில் குடியிருப்பை நிரந்தரமாக்கிக்கொண்டனர். சிலருக்கு அவ்வசதி இல்லாமல் மீளக்குடியேற
எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். இருந்தும் சுமார் 62 குடும்பத்தினர் புல்லுமலையைச்சுற்றியுள்ள கொச்சித்தோட்டம் கொலனி ஏற்றம் வெல்காவட்டை போன்ற இடங்களில் தற்காலிகமாக குடியேறி வாழ்ந்துவருகின்றனர்.
அவர்களின் இன்றைய நிலை..
இந்த மக்களின் மீன்குடியேற்றத்திற்காக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பல முயற்சிகளை எடுத்து சில நிறுவனங்களையும் அணுகியிருந்தார்.
அதன் பலனாக ஒரு நிறுவனம் 06வீடுகளையும் ஒரு மாதா கோயிலையும் கட்டிக்கொடுத்துள்ளது. இந்திய உதவியில் 5வீடுகள் நிருமாணிக்கப்பட்டுள்ளன.
புல்லுமலையில் பிறந்து கனடாவில் தற்போது வாழும் சமுகஆர்வலர்கள் கனடாவில் செய்த நிதிசேகரிப்பினால் பெற்ற 25 லட்சருபாவைக்கொண்டு 5வீடுகளை
நிருமாணித்துவருகின்றார்கள்.அவை நிறைவுறும் தறுவாயிலுள்ளன. கனடாவில் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி பாடும்மீன்களின் இரவு எனும் நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்து இந்த 25லட்சருபாவைத்திரட்டியதாக ஏற்பாட்டாளர் தெரிவிக்கிறார்.
இவ்வீடுகள் மிகவிரைவில் 4விதவைகளுக்கும் ஒரு குடும்பஸ்தருக்கும் கையளிக்கப்படவிருக்கிறது என அவர் மேலும் சொன்னார். இதேவேளை அங்கு 32லட்சருபா செலவில் ஒரு பிள்ளையார் ஆலயமும்
அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் புல்லுமலையைச்சேர்ந்தவர் 22லட்ச ருபாவை வழங்கினார்.இலங்கை அரசாங்கம் 8லட்சருபாவை வழங்கியிருந்தது. ஊர்மக்களிடம் 2லட்ச ருபாவைச் சேகரித்து ஆலய கும்பாபிசேகமும் நடாத்தி தற்போது ஆலயம் தினப்பூஜையுடன் வழிபாட்டிலுள்ளது. அங்கு வாழ்வாதாரத்திற்குரிய தொழில்வசதி இல்லையென்பது ஒரு குறைபாடாகவேயுள்ளது.எனினும் புல்லுமலை கிராம மக்கள் விரைவில் மீள்குடியேறவுள்ளனர் என்ற செய்திக்கு இவைகள் கட்டியம் கூறிநிற்கின்றன.
-http://www.tamilwin.com