இலங்கையில் 16 – 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களில் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக மருத்துவ ஆலோசகர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
தற்கொலை செய்துக் கொள்வது இலங்கையின் பிரதான சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினை என்று கூறுவதில் தவறில்லை. ஏன் என்றால் இலங்கையில் 2015ஆம் ஆண்டில் தற்கொலையின் மூலம் மாத்திரம் 3051 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. நாம் டெங்கு மற்றும் புற்று நோய் குறித்து பேசுகின்றோம். அதற்காக மாவட்ட குழுக்கள் உள்ளன. அதற்கு அவசியமான செலவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
டெங்கு நோயினால் வருடத்தில் 150 உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. எலி காய்ச்சல் காரணமாக 100 பேர் உயிரிழக்கின்றார்கள். எனினும் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் போன்றவற்றை பேசும் அளவில் தற்கொலை குறித்து பேசுவதில்லை. எனினும் கிட்டத்தட்ட 3000 பேர் வரையில் வருடமொன்றுக்கு தற்கொலையின் காரணமாக இலங்கையில் உயிரிழக்கின்றனர்.
இலங்கையில் தற்கொலைக்கு முயற்சிப்பது தொடர்பில் தரவுகள் சேர்க்கப்படாது. எனினும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஒரு நாட்டில், பிரதேசங்களில் தற்கொலைகள் எத்தனை இடம்பெறுகின்றதோ அது போன்று 10 முதல் 30 வரை தற்கொலைக்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் வருடத்திற்கு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் எண்ணிக்கை கிட்டத்த 10 ஆயிரமாகும்.
இலங்கையில் தற்கொலை செய்வதற்கு முயற்சிப்பவர்களுக்குள் இரண்டு விசேட அறிகுறிகள் காணப்படுகின்றது. ஒன்று குறைந்த வயதுடையவர்கள், அதாவது 15 முதல் 25 வயதுடையவர்களே தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். அதேபோல் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பவர்களில் பெரும்பான்மையினர் பெண்களாகும்.
பொதுவாக உலகின் ஏனைய நாட்டை சேர்ந்த ஆண்களே தற்கொலை செய்துக் கொள்கின்றனர். எனினும் இலங்கையில் மாற்றம் ஒன்றை காண முடிகின்றது.
இந்த தற்கொலையின் பிரதான காரணம், குடும்பத்தின் நெருங்கியவர்களுடன், அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகள் அல்லது காதலன் காதலியுடன் ஏற்படுத்திக் கொள்கின்ற மோதல்களே காரணமாகியுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com