எழுக தமிழ் போராட்டத்திற்கு பெருந்தோட்ட தமிழ் மக்களின் ஆதரவளிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினரும் ஊவாமாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
எழுக தமிழ் போராட்டம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் என்ற போராட்டத்தை நடத்தியிருந்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினதும், பெருந்தோட்ட தமிழ் மக்களினதும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்.
30 ஆண்டு கால போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் அநேக பிரச்சினைகள் தொடர்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய நல்லாட்சி அரசாங்கம், இந்நாட்டு சிறுபான்மை மக்களை மதிக்கும் அரசாங்கமாகும்.
எனவே வட மாகாண முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமான பதிலளிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.பேரணி மற்றும் போராட்டம் நடத்துவது வட மாகாண முதலமைச்சரின் உரிமையாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலேனும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
-http://www.tamilwin.com