பிரபாகரனை கொலைசெய்த மஹிந்த மீது தமிழ் மக்கள் கோபத்தில்!

mahinda n prabhaவடக்கு, கிழக்கு தமிழர்களின் மனங்களில் இன்னும் பிரபாகரனே தலைவராக இருக்கின்றார். அந்த தலைவரைக் கொலைசெய்த மஹிந்த மீது அந்த மக்கள் இன்னும் கோபத்தில்தான் உள்ளனர்.

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

யார் என்ன சொன்னாலும் வடக்கு, கிழக்கு தமிழர்களுள் பெரும்பான்மையானவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரனைத்தான் அவர்களின் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அவர்களின் மனங்களில் பிரபாகரன் இன்னும் தலைவராகவே வாழ்கின்றார். வடக்கு, கிழக்குத் தமிழர்கள் மாத்திரமன்றி தோட்டப்புறத் தமிழர்களும் நூறு வீதம் பிரபாகரனை ஆதரிக்கின்றனர்.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது மலையகத் தமிழர்கள் சோகம் அனுஷ்டித்தனர். பிரபாகரன் கொல்லப்பட்டதை தமிழர்களால் சகிக்க முடியவில்லை.

அவரைக் கொலைசெய்த மஹிந்த மீது தமிழர்கள் இன்றும் கோபத்துடனேயே இருக்கின்றனர்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்து கிளிநொச்சியில் மஹிந்த தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியபோது அவர்கள் மஹிந்தவின் முகத்தைப் பார்க்காது வேறு பக்கம் முகத்தைத் திருப்பிய நிலையிலேயே பொருட்களைப் பெற்றனர்.

வடக்கில் இப்போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் தொடக்கி வைக்கப்பட்டிருக்கும் இனவாத செயற்பாடுகள் முறியடிக்கப்பட வேண்டும்.

தமிழர்கள் அனைவரும் இனவாதிகள் அல்லர். சிங்களவர்களை விடவும் இந்த நாட்டை அதிகமாக நேசிக்கின்ற தமிழர்களும் இருக்கின்றார்கள்.

தெற்கிலும் வடக்கிலும் இனவாதம் அழிக்கப்படாவிட்டால் எமக்கு இந்த நாட்டுக்கு எதிர்காலம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: