தற்போது உள்ள அரசியல் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த இனரீதியான கலவரங்களை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள் அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அண்மையில் ஞானசார தேரர் தமிழர்களை விரட்டியடிப்போம் என்ற சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றினை வெளிப்படுத்தி இருந்தார்.
அதே போல் மீண்டும் ஒரு கருத்து அதுவும் முற்றிலும் தமிழர்களுக்கு எதிரான கருப்பு ஜீலை மீண்டும் நினைவு படுத்தும் நோக்கத்தோடு வெளியிட்டுள்ளார்.
நேற்று ஊடகச் சந்திப்பு ஒன்றில் அவர் வெளியிட்ட கருத்து தற்போது வேகமாக முகப்புத்தக வலையமைப்பு ஊடாக பரவி வருகின்றது.
“தற்போது நாடு செல்லும் போக்கானது வேடிக்கையானது, உலகில் எந்தவொரு நாட்டிலும் சிறுபான்மை இனத்தவரின் மொழி பெரும்பான்மை இனத்தவருக்கு கற்றுக்கொடுக்கப்பட வில்லை ஆனால் இலங்கையில் 70 சதவீதம் உள்ள பெரும்பான்மை இன மக்களுக்கு தமிழ் கற்பிக்கப்படுகின்றது.
அரசு ஊழியர்கள் தமிழ் மொழியை கற்க கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள், வடக்கிற்கு சிங்களமே கற்பிக்கப்பட வேண்டும் அதனை விடுத்து மாறுபட்ட செயல் தற்போது நடை பெற்று வருகின்றது என ஞானசார தேரர் குற்றம் சுமத்தினார்.
மேலும் அனைவரும் சிங்களவர்களை அடக்க முற்பட்டு வருகின்றார்கள், தமிழர்களை தலைவர்களாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை தொடருமானால் சிங்களவர்கள் அடி வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதன் காரணமாக சிங்கள இளைஞர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள்.
அதனால் நாமும் ஆயுதம் ஏந்தி சிங்களவர்களை காப்பாற்ற முயற்சி செய்வோம் என்று சிங்கள இளைஞர்கள் பகிரங்கமாக கருத்துகளை வெளியிட்டு முகப்புத்தகத்தின் ஊடாக பரப்பிக்கொண்டு வருகின்றார்கள். நாடு அபாயத்தில் உள்ளது எனவும் ஞானசார தேரர் கூறினார்.
இங்கு அவர் “தெமலுன்ட” என்ற ஓர் கூற்றையும் கூறியுள்ளார், இந்த வார்த்தை எத்தகைய பாரதூரமானது என்பதனை கடந்த காலத்தை மீட்டிப்பார்க்கும் போது அறிந்து கொள்ள முடியுமானதாக இருக்கும்.
ஒரு மதத்தலைவர் இவ்வாறான முற்றிலும் இனவாதத்தை தூண்டும் விதமான கருத்துகளை வெளியிட்டுள்ளது அரசியல் நோக்குனர்கள் இடையே பாரிய அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நல்லிணக்கத்தை நோக்கிச் செல்லும் போது இவ்வாறான கருத்துகளை வெளிப்படுத்தி கொண்டு வருவது நாடானது அபாயத்தைச் நோக்கிச் செல்லும் என்பதனை எடத்துக்காட்டும் என்றே தெரிவிக்கப்படுகின்றது.
-http://www.tamilwin.com