உன்னதமான தலைவராக வடக்கின் முதலமைச்சர்!

Wigneswaran3காலத்துக்குக் காலம் தலைவர்கள் தோன்றுவது இந்த உலகின் நியதியாகவுள்ளது.

தலைவர்கள் பிறக்கிறார்கள் என்பது முன்னைய கருத்தாக இருந்த போதிலும் சமகாலத்து முகாமைத்துவ சிந்தனை தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பதாகும்.

தலைவர்கள் பிறக்கிறார்கள் என்பதே எமது நிலைப்பாடு. அதற்காக நீங்கள் சொல்வது தான் சரியா? என்று யாரும் வாதம் புரிந்து விடாதீர்கள்.

அவ்வாறு வாதம் புரிவோருக்கு நாம் கூறக்கூடியது, தலைவர்கள் உருவாக்கப்படுவதாக இருந்தால் இந்த உலகில்; இந்த நாட்டில், எங்கள் இனத்தில் எத்தனையோ தலைவர்கள் உருவாக்கப்பட்டிருப்பார்கள்.

ஆனால் நடைமுறையில் மக்களால் நேசிக்கப்படுகின்ற, போற்றப்படுகின்ற எக்காலத்திலும் மறக்கப்படாத தலைவர்கள் என்போர் ஒரு சிலராகவே இருக்கின்றனர்.

இந்த வகையில்தான் தலைவர்கள் பிறக்கிறார்கள் என்று நாம் கூறத் தலைப்பட்டோம்.

தாங்கள் கூறுவது தவறு என்று மீண்டும் நீங்கள் வாதம் செய்தால், நாம் இரு தரப்பும் ஒரு உடன்பாட்டுக்கு வர முடியும்.அந்த உடன்பாடு தலைவர்களை வகைப்படுத்துவதாக இருக்கும்.

அதாவது உன்னதமான தலைவர்கள் என்றும் சாதாரண தலைவர்கள் என்றும் அதனைப் பகுப்பாக்கிக்கொள்ளலாம்.

உன்னதமான தலைவர்கள் என்றும் உன்னதமானவர்கள். மக்கள் மனங்களில் வாழ்பவர்கள், நேர்மையானவர்கள் என்று வரைவிலக்கணப்படுத்திக் கொண்டால், சாதாரண தலைவர்கள் என்போர் பதவியாசை கொண்டவர்களாக சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப தக்கிட தத்தோம் போடக் கூடியவர்களாக மிகவும் உச்சமாக நடிக்கக் கூடியவர்களாக இருக்கக் கூடியவர்கள்.

இவர்களிடம் சிலவேளைகளில் நல்ல குணமும் நற்செயற்பாடும் தோன்றலாம். இந்த இரு வகையில் உன்னதமான தலைவர்கள் பிறக்கிறார்கள்.

சாதாரண தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்று நாம் உடன்பட்டுக் கொள்வதே பொருத்தமுடையதாகும்.

இவ்வாறான ஒரு உடன்பாட்டில் எங்கள் தமிழ் இனத்தின் இன்றைய கள நிலைமையில் தமிழ் மக்களின் உன்னதமான தலைவராக வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அவரின் வெளிப்படையான உரைகள், அவரது நேர்மைத்தனம், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நெஞ்சுரத்துடன் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் எடுத்துரைக்கும் ஆற்றல், பதவி ஆசை இல்லாத சான்றாண்மை என அவரிடம் இருக்கக் கூடிய சால்புடை பண்புகள் அவரை தமிழ் மக்களின் உன்னத தலைவராக பிரகடனப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக இன்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் எவரையும் நம்பாத தமிழ் மக்கள் வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நம்புகின்றனர்.

அவரிடம் இருக்கக் கூடிய ஆத்ம பலத்தை எங்களுக்குக் கிடைத்த படைக்கலமாக தமிழ் மக்கள் உணருகின்றனர்.

இத்தகைய மேன்மைமிகு தலைவர் தமிழ் மக்களுக்கு கிடைத்தது தான் தமிழ் மக்களுக்கு இன்றிருக்கக் கூடிய நிம்மதி என்றால் அது மிகையன்று.

எனினும் வடக்கு மாகாண முதலமைச்சரின் நேர்மையும் நீதியும் ஆற்றலும் தமிழ் மக்களுக்காக அவர் ஆற்றுகின்ற வெளிப்படையான உரைகளும் சாதாரண தலைவர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தவே செய்கிறது.

அதற்காக அவர் என்ன தான் செய்ய முடியும்?

-http://www.tamilwin.com

TAGS: