பிரிவினைவாத கோரிக்கைகளை விடுத்து, தனிநாடு உருவாகுவதற்கான அடிப்படை பின்னணியை உருவாக்கும் கருத்துக்களை வெளியிடும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அமரபுர ஸ்ரீ தர்மரக்ஷித பௌத்த பீடத்தின் மாநாயக்கர் திருகுணாமலயே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தர்மவிஜய மன்றத்தின் 39ஆவது வருடாந்த சங்க சபைக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது சிங்கள பௌத்தர்களுக்கு நடக்கும் விரும்பத்தகாத செயல்கள் பற்றி பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அவர் குறுகிய எண்ணத்தில் வெளியிடும் கருத்துக்கள் முழு இலங்கைக்கும் செய்யும் கெடுதியான கருத்துக்களாகவே நான் காண்கின்றேன்.
இனங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் காலத்தில், முதலமைச்சரின் கருத்துக்கள் நாட்டிற்குள் புதிய பிரிவினைவாதம் ஏற்பட காரணமாக அமையும்.
இந்தியாவில் மாநில முதலமைச்சர்களுக்கு இப்படியான கருத்துக்களை வெளியிட முடியாத வகையில் சட்டங்கள் அமுலில் உள்ளன.
எமது நாட்டில் அப்படியான சட்டங்கள் இல்லை. இதனால், தனிநாட்டுக்கான அடிப்படை பின்னணியை உருவாக்கி வரும் வடக்கு முதலமைச்சரவை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும், இவருடைய அந்த கருத்துக்களால் மௌனிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் மீண்டும் ஆரம்பிப்பதற்கு வித்தாய் அமையும் எனவும் அமரபுர ஸ்ரீ தர்மரக்ஷித பௌத்த பீடத்தின் மாநாயக்கர் திருகுணாமலயே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com