2006இல் இயக்கத்தின் ஆளணியை அதிகரிப்பதற்காகக் கட்டாய ஆட்சேர்ப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற முடிவுக்கு இயக்கம் வந்திருந்தபோது, இயக்கத்தின் பயங்கரமான இன்னொரு முகத்தை மக்கள் காணத் தொடங்கியிருந்தனர்.
அரசியல்துறைப் போராளிகளின் கூட்டத்தில் அரசியல்துறைப் பொறுப்பாளர் இந்த அறிவித்தலை வெளியிட்டபோது பெரும்பாலான போராளிகள் அதிர்ந்துபோயிருந்தார்கள்.
“எங்களிட்ட போதியளவு ஆயுதங்கள் இருக்குது. ஆளணிதான் இல்லை, தலைவர் எதிர்பார்க்கிற ஆளணி இருக்குமெண்டால் இந்த யுத்தத்தில நாங்கள்தான் வெல்லுவம். கடல், தரை, வான் என முப்படைகளின் பலம் இயக்கத்திட்ட இருக்கிது.
அனுபவம் வாய்ந்த தளபதிகள் இருக்கிறார்கள், எல்லாத்துக்கும் மேலாக அண்ணை இருக்கிறார். தலைவர் எதிர்பார்க்கிற ஆளணி பலம் மட்டும் இருக்குமெண்டால், இதுதான் தமிழீழத்திற்கான இறுதிப் போராக இருக்கும்.
வீட்டுக்கு ஒருவர் இருவர் இயக்கத்தில் இருந்தால் போதாது. போராட வல்லமையுள்ள அனைவரும் ஆயுதம் ஏந்திப் போராட முன் வரவேண்டும்.
எனவே நீங்கள் தயக்கம் காட்டாது இளைஞர் யுவதிகள் அனைவரையும் இயக்கத்தில் இணைக்க வேண்டும். இதுதான் தலைவருடைய எதிர்பார்ப்பு.” அரசியல்துறைப் பொறுப்பாளர் இந்த விடயத்தைப் போராளிகளின் மத்தியில் தெரிவித்தபோது உண்மையில் மக்கள் இதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதை என்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியாதிருந்தது.
என்னைப் போன்றே பல போராளிகளுடைய உணர்வுகளும் இருந்தன. ஆனாலும் அத்தகைய சந்தர்ப்பத்தில் எமது கருத்துக்களை வெளிப்படுத்திக்கொண்டிருப்பது தலைமையின் கட்டளையை மீறும் துரோகச் செயலாகவே கருதப்படும்.
இயக்கத் தலைமையால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒரு முடிவை நடைமுறைப்படுத்துவது தான் போராளிகளின் தலையாய கடமையே தவிர அபிப்பிராயம் கூறிக்கொண்டிருப்பது போராட்டத்தில் தெளிவற்றதான குழப்பம் ஏற்படுத்தும் செயற்பாடாகவே கருதப்பட்டது.
கட்டாய ஆட்சேர்ப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட ஆண், பெண் போராளிகளுக்கு மக்களுடனான அணுகுமுறைகள் குறித்துப் பலராலும் வகுப்புகள் எடுக்கப்பட்டன.
ஆனாலும் ஒரு இளைஞனையோ யுவதியையோ கட்டாயமாக இயக்கத்தில் இணைப்பது எவ்வளவு கடினமானதும் மிக மோசமானதுமான வேலை என்பதை இயக்கத்தின் தலைமை உணரத் தவறியது.
கட்டாய ஆட்சேர்ப்புக் காரணமாகப் போராளிகளுக்கிடையே பலத்த விமர்சனங்களும் முரண்பாடுகளும் ஏற்பட்டன. அந்தக் காலகட்டத்தில் வன்னிக்குள் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சிக்குண்டிருந்த மக்களின் நிலைமைகளை விபரிக்க வார்த்தைகளே இல்லை.
எந்தச் சமூகத்தை வாழவைக்க வேண்டுமென்பதற்காக நாம் போராடப் போனோமோ அதே சமூகத்தின் சீரழிவு நிலைக்கும் நாமே காரணமாக இருந்தோம்.
கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து தப்புவதற்காகச் சமூகத்தில் இளவயது திருமணங்கள் வேகமாக நடைபெறத் தொடங்கின. திருமணமாகாமலே இளவயது ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் சூழ்நிலைகள் சமூகத்தில் அனுமதிக்கப்பட்டன. பதுங்குக்குழிகளை அமைத்து மாதக்கணக்கில் தமது பிள்ளைகளைப் பெற்றோர் மறைத்து வைத்துப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உருவானது.
கட்டாயமாக இணைக்கப்பட்ட பல போராளிகள் பின்பு தமது சுயவிருப்பத்துடன் மிகச் சிறப்புடன் செயற்பட்ட சந்தர்ப்பங்களும் இருந்தன. அதேவேளை, ஆயுதங்களைக் களமுனைகளிலேயே எறிந்துவிட்டு வீட்டுக்கு ஓடியவர்களும் உண்டு. இன்னும் சிலர் கட்டாயத்தின் பேரில் களமுனைகளுக்கு அனுப்பப்பட்டதால் மரணத்தைத் தழுவியவர்களாகவும் இருந்தனர்.
அக்காலகட்டத்தில் அரசியல்துறையில் ஒரு போராளியாக இருப்பதே பெருத்த மன உளைச்சலையும் அவமானத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது. அதுவரையிலும் மக்களின் நலனுக்காகப் புலிகள் இயக்கம் செய்த எல்லா வேலைத் திட்டங்களும் மக்களின் மனங்களிலிருந்து முற்றாக அடிபட்டுப் போனது.
புலிகள் இயக்கம் கட்டாய ஆட்சேர்ப்புச் செய்வதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய முடியும் என நான் ஒருபோதும் நம்பவில்லை. மாறாக நாம் ஒரு படுபயங்கரமான தோல்வியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை உணரத் தொடங்கினேன்.
ஆனாலும், தலைவரின் பிடிவாதமான நடவடிக்கைகளால் மக்களும் போராளிகளும் மனரீதியாகப் பாதிப்படைந்ததுடன் தாங்க முடியாத அலைக்கழிவுகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.
தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு என்பது எனது நிலைப்பாடு. இந்தக் காரியத்தில் சூழ்நிலைக் கைதிகளாகப் பல போராளிகளும் பொறுப்பாளர்களும் மன விருப்பின்றிச் செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.
கட்டாய ஆட்சேர்ப்பில் அரசியல்துறை மட்டுமன்றி, தாக்குதல் தளபதிகளும் படையணிகளும் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. புதுக்குடியிருப்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மூத்த தாக்குதல் தளபதி ஒருவரிடம் மக்களின் அபிப்பிராயங்களை நான் எடுத்துக்கூற முற்பட்டபோது
அவர் சொன்னார்: “தமிழினி, ஏன் இப்பிடி குழம்புறிங்கள்? தலைவர் சொன்ன வேலையைத்தான் நாங்கள் செய்யுறம், உங்களுக்கு ஏலாட்டில் விட்டிட்டுப் போங்கோ, மற்றவங்களையும் குழப்ப வேண்டாம்”.
அதன் பின்பு ஏற்பட்ட சில மனக் கசப்புகள், அதனால் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக என்னால் தொடர்ந்தும் உற்சாகமாக வேலைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் என்னிடம் கூறினார். “தமிழினி, நீங்கள் பெண்கள் தொடர்பான வேலைகளில் கூடுதலான கவனம் செலுத்துங்கள். ஏனைய வேலைகளைக் கவனிப்பதற்கு வேறு ஒரு பொறுப்பாளரை நியமிக்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்” எனக் கூறினார்.
அச்செய்தி எனக்கு மிகுந்த நிம்மதியாக இருந்தது. ஏதோ இறுக்கம் தளர்ந்து மனதும் உடலும் இலேசானதுபோல உணர்ந்தேன்.
பொறுப்பாளராக இருந்து நிர்வாகப் பிரச்சனைகளில் மனப் பாதிப்புகள் அடைவதை விட ஒரு போராளியாக இருந்து அதுவும் பெண்களுக்கான வேலைகளை மகிழ்ச்சியோடு செய்வதே உகந்தது எனக் கருதினேன்.
அரசியல்துறை மகளிர் பொறுப்பாளராகத் தாக்குதலணியைச் சேர்ந்த மூத்த போராளி ஒருவர் நியமிக்கப்பட்டார். எனக்குக் கிடைத்த சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் எனக் கருதினேன்.
களமுனையில் நின்ற மகளிர் படையணிப் போராளிகளுடன் அதிக அளவு நாட்களைச் செலவு செய்தேன். இயக்கத்தின் பரப்புரைக் கூட்டங்களுக்கான அழைப்புகளிலும், அரசியல்துறையின் முக்கியமான கலந்துரையாடல்களுக்கான அழைப்புகளிலும் கலந்துகொண்டேன்.
கடினமான நிர்வாகப் பணிச் சுமைகளின் அழுத்தங்களுக்குள் சிக்கிக்கொள்ளும்போது, எமது போராட்டத்தின் முழுப் பரிமாணத்தையும் சிந்தித்துச் செயலாற்ற முடியாமல் மட்டுப்படுத்தப்பட்ட வேலைகளுடனேயே உழல வேண்டியேற்படுவதை மகளிர் பொறுப்பாளராக இருந்த காலத்தில் எனது அனுபவத்தில் உணர்ந்துகொண்டேன்.
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு போராட்ட அமைப்பு என்கிற தன்மையை இழந்து ஓர் அரச இயந்திரம்போலத் தன்னை விசாலித்துக் கொண்டதனால் இயக்கத்தின் கூடுதலான மூளைப் பலம் நிர்வாகச் சிக்கல்களில் வீணே சிதறடிக்கப்பட்டது.
பல திறமையான போராளிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு நிர்வாகச் சிக்கல்களில் தமது நேரத்தையும் திறமையையும் வீணடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அது இயக்கத்தின் வளர்ச்சியாகவும் பெருமையாகவுமே கருதப்பட்டது.
சமாதான காலத்தில் புலத்திலிருந்து வந்த பலரும்கூட ஓமந்தைக்கு அப்பால் வடக்கே இன்னொரு தேசத்தை தாம் காண்பதாகப் புளகாங்கிதப்பட்டதை நானறிவேன்.
-http://www.tamilwin.com
முதலில் இந்த புத்தகத்தை எழுதியது இந்த தமிழினி தான என்று ஆராயவும் …இவர் பல காலம் சிங்கள ராணுவ …சிறையில் இருந்தவர் ..என்பதை கவனிக்க ..