ஹிட்லரின் படுகொலைகள் யூதர்களுக்கு எவ்வாறு விடுதலை உணர்வை போதித்ததோ அதே போன்று முள்ளிவாய்க்கால் துயரங்கள் தமிழ் மக்களுக்கு தமது நிலையை உணர வழி வகுக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் காலை 9.00 மணியளவில், யாழ். ராஜா கிறீம் ஹவுஸ், சரஸ்வதி மண்டபத்தில் பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற, ’’இலங்கை அரசியல் யாப்பு டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரை 1931 – 2016’’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் வழங்கியிருந்த சிறப்புரையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவரது உரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இன்று இந்த நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருந்தேன். பல காரணங்களை முன்னொட்டி எமது குறைகேள் நிவர்த்தி நடமாடும் சேவையை இன்று கரைச்சி கிளிநொச்சியில் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் உங்களுடன் சேர்ந்து இந்த நூலை வெளியிட முடியாமைக்கு வருந்துகின்றேன்.
அதுவும் பலகட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து நூலை வெளியிடும் இந்த அரிய நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமைக்கு மிகவும் வருந்துகின்றேன்.
யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் சுயாதீன ஆராய்ச்சியாளருமாகிய திரு மு.திருநாவுக்கரசு அவர்களின் படைப்பில் உருவாகிய இலங்கை அரசியல் யாப்பு, டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரை (1931 – 2016) என்ற இந்த நூலின் முதலாவது வெளியீடு வவுனியாவில் நடைபெற்ற போது என்னை அவ்விழாவில் கலந்து கொண்டு இந்நூலை வெளியிட்டு வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் எனது கூடுதலான வேலைப்பளு காரணமாகவும் அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இரண்டொரு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டியிருந்த காரணத்தாலும் எனது இயலாமையை அவருக்குத் தெரிவித்து இதே போன்ற இன்னோர் வெளியீட்டு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறுமாயின் நிச்சயமாக அதில் கலந்து கொள்வேன் எனவும் தெரிவித்திருந்தேன்.
இந்த நிகழ்விலும் இன்று கலந்து கொள்ள முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. இவை அனைத்தும்“எனையாளும் ஈசன் செயல்”என்று நினைத்து என் மனதைத் தேற்றிக் கொள்கின்றேன்.
இன்றைய இளம் சந்ததியினரில் பெரும்பாலானோர் இலங்கை அரசியல், உலக அரசியல் போன்ற அரசியல் விவகாரங்களில் சிரத்தை காட்டாது ஒதுங்கியிருக்கின்ற அல்லது வேறு துறைகளில் கூடிய நாட்டங்களை கொண்டிருக்கின்ற தன்மைகளை பல சந்தர்ப்பங்களில் நான் அவதானித்திருக்கின்றேன்.
அரசியலில் நாட்டம் கொள்ளாதிருப்பினும் அரசியல் விவகாரங்களில் என்னைப் போன்றவர்கள் மாணவ பருவத்தில் இருந்தே நாட்டம் காட்டி வந்துள்ளோம். ஒரு மாணவன் அல்லது மாணவி கணிதம், விஞ்ஞானம், மொழி, கணனி, கற்கைநெறி ஆகியவற்றில் மட்டும் கற்றுத் தேறிவிட்டால் முழு மனிதனாக மாறிவிட முடியாது.
பூகோள ரீதியாக எமது வதிவிடங்கள், வரலாற்றுப் பெருமைகள், அரசியல் சித்தாந்தங்கள் என்பவற்றையும் கற்றுத் தேறுகின்ற போதே அவர்கள் முழுமையடைகின்றார்கள். அரசியல் கற்கைநெறிகளை ஆழமாக கற்றுத்தேறுகின்ற போது எமது பாரம்பரியம், எமது இதுகாறுமான வளர்ச்சி, எமது சமூக நிலை போன்ற பலவற்றையும் நாம் புரிந்து கொள்கின்றோம்.
எம்மை அறியாமலே மொழிப்புலமையும் விருத்தியடையத் தொடங்கி விடுகிறது.அந்த வகையில் கடந்த சுமார் 85 ஆண்டு காலப்பகுதியின் போது இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், அரசியல் தலைவர்களின் பேரினவாதப் போக்கு, தமிழர்கள் மீதான அடக்குமுறை போன்ற பல விடயங்களை உள்ளடக்கி அரசியல் தத்துவங்களை அனைவரும் இலகுவில் அறிந்து, உணர்ந்து அதன்பால் நாட்டம் கொள்ளத்தக்க வகையில் இந்த நூலை வடிவமைப்புச் செய்து அதன் வசன நடையை எளிய தமிழ் வடிவில் ஆக்கித்தந்த படைப்பாளர்; அவர்களுக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.
இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த நூறு ஆண்டு காலங்களாக தமிழ் மக்கள் தமது அரசியல் முன்னெடுப்புக்களில் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதும் அதன் விளைவாகத் தோல்விகளைத்தழுவிக் கொள்கின்ற செயற்பாடுகளும் நடைபெற்று வருவது நாம் அனைவரும் அறிந்துள்ள விடயம்.
இந்நூலில் குறிப்பிட்டவாறு தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு வெற்றிக்கான வழிவகைகளைத் தேடுவதற்கு நாம் தயார் இல்லை எனின் தொடர்ந்தும் நாம் தோல்விகளைச் சந்திப்பதற்கு தயாராகின்றோம் என்பதே யதார்த்தம் ஆகின்றது.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது அணுகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி பேரழிவுற்ற ஜப்பான் அக்கணமே தன்னைச் சுதாகரித்து தனக்கு ஏற்பட்ட சவாலை எதிர் கொண்டு சுமார் கால் நூற்றாண்டு காலப்பகுதியில் தன்னை இரண்டாவது உலகப் பொருளாதார வல்லரசாக ஆக்கிக் கொண்டது.
ஐரோப்பியர்களின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகி பாரிய இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட யூத மக்கள் தமக்கு ஏற்பட்ட பாரிய இனக்கொலைகளின் சவால்களை எதிர் கொண்டு,ஐக்கியப்பட்டு, அனைத்து வளங்களையும் ஒன்று திரட்டி புதிய அரசை உருவாக்குவதில் வெற்றி பெற்றனர்.
இலங்கையில் வாழும் தமிழர்களும் ஓரணியின் கீழ் ஐக்கியப்பட்டு தமது உரிமைக்காக வடக்கு,கிழக்கு, மலையகம், கொழும்பு என்ற பேதங்கள் இன்றி மொழியால் ஒன்றுபட்டு உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய காலம் கனிந்து வந்துள்ளது.
சில வேளைகளில் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றியும் அவர்களின் சுய நிர்ணய உரிமை பற்றியும் சில சிங்கள தலைவர்களும் இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட தலைவர்களும் அவ்வப்போது சார்பான கருத்துக்களையும், ஒத்தியைவுகளையும் வெளிப்படுத்தி வந்த போதும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவர்கள் தமது கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு தமிழின அழிப்பை ஏற்றுக்கொள்கின்ற அரசியல் தலைவர்களாக மாற்றம் பெற்றது நாம் தெரிந்ததே.
ஆகவே சிங்கள மக்களின் தலைவர்கள் எந்தளவு மனிதாபிமானம் உடையவர்களாக இருந்தாலும் இனவேற்றுமையின் பொறிகளுக்குள் சிக்கி விட்டால் அவர்கள் மனிதாபிமான நடுவிலிருந்து வழுகி விடுகின்றார்கள். அதற்கு பதிலாகத் தமிழர்கள் இனவாதம் பேசுவதால்த்தான் தாமும் பேசுவதாகக் கூறுகின்றார்கள்.
தமிழர்கள் தமது உரிமைகளை அதாவது அவர்களின் பாரம்பரிய நிலங்களில் குடியேறுவதற்கும் அங்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தமது கலாச்சாரங்களை பேணிப் பாதுகாப்பதற்கும் இராணுவப் பிரசன்னம் அற்ற இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்கும், விரும்பி மேற்கொள்ளும் நியாயபூர்வமான போராட்டங்கள், கோரிக்கைகள் ஆகியன சிங்களத் தலைமைகளுக்கு இனவாதத்தைத் தூண்டுகின்ற ஒரு செயலாகத் தென்படுகின்றது.
அதனால் உரிமைக்காக குரல் கொடுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களை சிறையில் அடைக்க வேண்டும், ஒட்டுமொத்த தமிழர்களையும் இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் எனச் சிலர் சிங்கள பேரினவாதிகளாக மாறிக் கொக்கரிக்கின்றார்கள்.
எமது உரிமைக்காக நாம் குரல் கொடுக்கின்ற போது இனவாதம் பேசுகின்றோம், சிங்கள மக்களைச் சினமடையச் செய்கின்றோம், இந்த நாட்டில் மீண்டும் ஒரு முறை இனக்கலவரங்களை உண்டாக்குவதற்கு முயற்சிக்கின்றோம் என்று கூறுகின்றார்கள்.
தமிழ் மக்களை அடக்கியாள முயற்சித்து அவர்கள் அது சார்பாக நடவடிக்கைகள் எடுப்பதை நாம் கண்டும் காணாதது மாதிரி இருக்க வேண்டும் என்று இவர்கள் கருதுகின்றார்களா?
உதாரணத்திற்கு சட்டவலுவற்ற தன்மையில் வடமாகாணத்தில் புத்த விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன என்று தான் நாம் அண்மையில் கூறினோம். அதனைத் திரித்து வட மாகாணத்தில் புத்த விகாரைகள் கட்டக்கூடாது; சிங்கள மக்கள் குடியிருக்கக் கூடாது; சிங்கள மக்கள் வட மாகாணத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றெல்லாந்திரித்துக் கூறி என் மீதான பலத்த ஒரு வெறுப்பியக்கத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
ஆகவே நாம் எமது பிரச்சினைகளைக் கூறக் கூடாது. அவர்கள் தருவதை ஏற்க வேண்டும்; என்ற ஒரு எண்ணப்பாடே இன்று பெரும்பான்மை மக்கள் பலரிடம் இருந்து வருகின்றது. இதற்குள் அரசியலும் சேர்ந்து எனது உயிருக்கும் உலைவைக்க நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
அதுமட்டுமல்ல.அவற்றைச் செய்தவர்கள் விடுதலைப் புலிகளே என்று கதையைக் கட்டுவதற்கும் தெற்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கைத்தீவு சிங்கள மக்களுக்கு மட்டும் சொந்தமானதொரு தீவாக மாற்றப்பட வேண்டும் என்பதையே அனைத்து அரசுகளும் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகத் தெரிகின்றது.
அவர்கள் தரும் உரிமைகளை மட்டுமே நாங்கள் பெறலாம். சட்டப்படி எமக்கிருக்கும் உரித்துக்களைக் கேட்டால் தாம் அவற்றைத் தர மாட்டார்கள் என்று கூறுவதாகவே இதுவரையான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
ஹிட்லரின் படுகொலைகள் யூதர்களுக்கு எவ்வாறு விடுதலை உணர்வை போதித்ததோ அதே போன்று முள்ளிவாய்க்கால் துயரங்கள் தமிழ் மக்களுக்கு தமது நிலையை உணர வழி வகுக்க வேண்டும்.
நாம் தொடர்ந்தும் எம்மிடையே பகைமை உணர்வுகளையும் அரசியல் போட்டி பொறாமைகளையும், காட்டிக் கொடுக்கும் காக்கை வன்னியர்களாகக் காலத்தை ஓட்டுவதையும் நிறுத்த வேண்டும்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மூலமாக தூய்மையான வரலாறு ஒன்றை தமிழ் மக்கள் இனியாவது படைக்க முன்வர வேண்டும்.
அதுவரை எத்தனை இடையூறுகள் வரினும் அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராகிக் கொள்ள வேண்டும் என்பதை இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனது உரையை நிறைவு செய்வதற்கு முன்பதாக திரு.திருநாவுக்கரசு அவர்களின் அரசியல் சார்ந்த பல படைப்புக்களில் ஒன்றாக வெளிவந்திருக்கும் இலங்கை அரசியல் யாப்பு என்ற இந்த நூல் தமிழ் மக்களுக்கு அரசியல் பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவாக அமையும் என்பதைக் கூறி வைக்கின்றேன்.
இது போன்ற ஆக்கங்கள் தொடர்ந்தும் வெளிவர வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களின் சிந்தனைகள், அவர்களின் அரசியல் முன்னெடுப்புக்கள், சித்தாந்தங்கள் போன்றன மக்களுக்கு எடுத்துச் செல்லப்படுவன.
எமது அரசியல் சூழலை நாம் யாவரும் உணர்ந்து அதில் இருந்து மீண்டெழுந்து எம்மை இந்த நாட்டின் சுதந்திர குடிமக்களாக மாற்றிக் கொள்வதற்கு இந்த நூல் வழி வகுக்கட்டும் என்று கூறி என் உரையை இத்துடன் முடிவுக்குக் கொண்டு வருகின்றேன்.
நன்றி. வணக்கம்
நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன், முதலமைச்சர், வட மாகாணம்
-http://www.tamilwin.com