வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் மீது சிங்கள பேரினவாதம் கடும் விசனத்தில் இருக்கிறது. இன்னொரு புறத்தில் தமிழ் விட்டுக் கொடுப்பு அரசியல் தலைமை கொதிப்பில் இருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் கொழும்பில் இருந்து வரும் பொழுது இருந்த விக்னேஸ்வரன் இப்பொழுது இல்லை என்பது தான் கசப்பான உண்மை.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்றது சர்வதேசம், நடத்தினால் தோற்பேன் என்பது மகிந்தவிற்கு தெரிந்த விடயம். வடக்கிற்கு யாரை முதலமைச்சராக நியமிப்பது என்பது கூட்டமைப்பிற்கான சிக்கல். இந்த நிலையில் தான் பலராலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இப்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான சம்பந்தனின் தெரிவாக இருந்தது முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் தான்.
தனித்து விக்னேஸ்வரனை சம்பந்தன் எடுக்கவில்லை. இந்தியாவின் பேராதரவும் இருந்தது இந்த தெரிவில் என்பது பலர் அறிந்த உண்மை தான்.
ஆனால், விக்னேஸ்வரன் பொதுவேட்பாளராக நிறுத்திய போது எவ்வாறு எதிர்ப்புக்கள் வெளிவந்தனவோ அவ்வாறே இப்பொழுதும் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அதில் பெரியதொரு மாற்றம். முதலமைச்சருக்கான பொதுவேட்பாளராக விக்னேஸ்வரன் நிறுத்தப்படும் பொழுது, யார் யார் எல்லாம் எதிர்த்தனரோ அவர்கள் எல்லோருமே இப்பொழுது விக்னேஸ்வரனை ஆதரிக்கின்றார்கள். வரவேற்கின்றார்கள். ஆனால், அன்று ஆதரவு தெரிவித்தவர்கள், களத்திற்கு இழுத்து வந்தவர்கள் விக்னேஸ்வரன் என்றாலே எரிந்து விழுகின்றார்கள், பாய்கின்றார்கள்.
இந்த நிலையில் தான் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன்னுடைய மாகாணம் சார்ந்து மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் மக்கள் சார்ந்தும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். அவர் தன்னுடைய ஒவ்வொரு உரையிலும் தமிழ் மக்களை சிங்களப் பேரனவாதிகளும், எமது பேரம் போகும் அரசியல் தலைமைகளும் ஏமாற்றுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று பேசுவது தான் நமது தமிழ் அரசியல் தலைமைகளுக்கு பெரும் நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது.
விக்னேஸ்வரனை முதல்வராக்கினால் தங்களின் பேச்சைக் கேட்பார் என்று நினைத்தவர்களுக்கு இந்த விவகாரம் கொஞ்சம் கசப்பைக் கொடுக்கத் தான் செய்யும். தவிரவும், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிடைக்காத கௌரவமும், மரியாதையும் இப்பொழுது செல்லுமிடமெல்லாம் விக்னேஸ்வரனுக்கு கிடைப்பதும் அவர் மீதான தமிழ்த் தலைமைகள் சிலரின் கோபமும் அடங்கியிருக்கிறது. இது ஒரு புறத்தில் இருக்க கடந்த வாரம் வடக்கில் விக்னேஸ்வரன் தலைமையில் திரண்ட வடக்கு மக்களின் ஆதரவைப் பார்த்து தெற்கும், வட கிழக்கின் தமிழ்த் தலைமைகள் கொதிப்படைந்தன.
ஒரு புறத்தில் இனவாதத்தை எப்படி கையில் எடுக்கலாம் என்று காத்திருந்த மகிந்த தலைமையிலான ஒரு கூட்டமும், அதை வைத்து அரசியல் நடத்தலாம், ஆதாயம் காணலாம் என்று இருக்கும் பேரினவாதிகளும், இன்னொரு புறத்தில் கடும் இனவாதக் கும்பலும் ஆட்டம் போடத் தொடங்கியிருக்கின்றன. ஒரு வகையில் சொல்லப் போனால் வடக்கு முதல்வர் ஒரு புயலாக புறப்பட்டிருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்.
தெற்கில் இதையெல்லாம் வைத்து அரசியல் நடத்துவார்கள் என்பது தெரிந்ததே. அதனால் உரிமைக்கான ஒன்று கூடலை தடுக்க முடியாது. அவர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்பதற்காக நாங்கள் மௌனித்து இருப்போமாயின் எமக்கான தீர்வு சாத்தியமற்றுப் போகும். இந்த வகையில் எழுக தமிழில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது தான்.
2009ம் ஆண்டிற்குப் பின்னர் தமிழ் மக்கள் அதிகளவில் ஒன்றித்து கிளர்ந்தெழுந்த நிகழ்வாக இது வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது. ஆனால், கொதிப்படைந்துள்ள சிங்கள பேரினவாத அமைப்பினரும், அரசியல்வாதிகளும் விக்னேஸ்வரனை திட்டித் தீர்ப்பதில் குறியாக இருக்கின்றனர். அடுத்த பிரபாகரனாக விக்னேஸ்வரன் மாற முயற்சிக்கின்றார் என்கிறார்கள் தெற்குவாசிகள். தமிழ் மக்களின் உரிமைக்காக எவர் போராடினாலும் அவர் பிரபாகரனாகத் தான் இருக்க முடியும் என்பது தெற்கு அரசியல்வாதிகளின் முடிவு. தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக தன்னலம் பார்க்காமல் உழைத்தவர் அவர் என்பதை தெற்கு நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது என்பதன் பொருள் தான் இது.
உண்மையில் நாட்டில் முன்னாள் நீதியரசர் ஒருவரை, அதுவும் ஜனநாயக வழியில் தேர்வு செய்யப்பட்ட அரசியல் தலைவரை, ஆயுதம் ஏந்தி தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய பிரபாகரனோடு ஒப்பிட்டு பேசுவதன் மூலமாக தெற்கு தெளிவானதொரு முடிவினை தமிழ் மக்களுக்கு எடுத்து காட்டியிருக்கின்றது. பிரபாகரன் என்றாலே அது உரிமைக்கான குரல் என்பதை நிரூபித்திருக்கின்றது. ஆனால், ஜனநாயகவாதியை அவர்கள் இன்று மிகக் கீழ்த்தரமாக நித்திப்பது, அவர்களின் அரசியல் வங்குரோத்து நிலையை எடுத்துக்காட்டியிருக்கிறது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான எந்த போராட்டமாக இருந்தாலும் அது இனவாதம் எனில், தெற்கு அரசியல் வாதிகள் செய்வது எதுவென்று நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் தான் எடுத்தியம்ப வேண்டும். ஒருவேளை வடக்கில் இனவாதத்தை விக்னேஸ்வரன் தூண்டுகின்றார். அவரை கைது செய்ய வேண்டுமெனில் தெற்கில் இனவாதம் பேசுவோரை என்ன செய்ய வேண்டும் என்பதை ஜனாதிபதி மைத்திரி தெளிவுபடுத்த வேண்டும்.
எதுவாயினும், வடக்கில் பயங்கரவாதியாக விக்னேஸ்வரன் செயற்படுகின்றார் என தெற்கு மீண்டும் மீண்டும் தெரிவிக்குமாயின், அவர் பயங்கரவாதியா இல்லையா என்ற முடிவை இந்தியாவும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும், எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனும் தான் உறுதிப்படுத்த வேண்டும்.
ஏனெனில் வடக்கில் விக்னேஸ்வரன் தான் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என முடிவெடுத்தவர்களில் அவர்களின் பங்கு தான் அதிகம். எதுவாயினும் ஜனநாயக வழிமுறையில் தேர்வு செய்யப்பட்ட ஒரு பண்பான முன்னாள் நீதியரசரை, ஆன்மீகவாதியை, இலக்கியவாதியை, அரசியல் தலைவரை இவ்வாறு கீழ்த்தரமாக விமர்சிப்பது நல்லதல்ல. தவிரவும், இன்று கிடைத்திருக்கும் ஜனநாயக வெளியைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் கேட்கும் உரிமைகளை கொடுப்பதற்கு மைத்திரி ரணில் அரசு சித்தம் கொள்ள வேண்டும். இல்லையேல் நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் தமிழ்த் தரப்புக்களால் முன்னெடுக்கப்படுமோ இல்லையோ கண்டிப்பாக சிங்களத்தரப்பினால் முன்னெடுக்கப்படும் என்பது ஆணித்தரமான உண்மை.
-http://www.tamilwin.com