இலங்கையர்களுக்கு நம்பிக்கையளிக்கும் அறிவிப்பு

susma_ranilஇலங்கைக் கடற்றொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய அறிவிப்பொன்று நேற்று முன்தினம் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் விடுக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த அறிவிப்பை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விடுத்திருக்கின்றார்.

இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 05ம் திகதி நடத்தப்படும் என்று தற்போது இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அவர் உறுதி அளித்திருக்கின்றார்.

அதுவும் இரு நாடுகளது வெளிவிவகார அமைச்சர்கள் தலைமையில், இரு நாடுகளின் கடற்றொழில் அமைச்சர்களையும் உள்ளடக்கி இப்பேச்சுவார்த்தையை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தாஜ்பலஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இச்சந்திப்பின் போது இருபக்க உறவிகளை மேலும் மேம்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இச்சமயம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை மீனவர்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்தும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் தெளிவாக எடுத்துக் கூறினார்.

இந்த அடிப்படையில் இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் நவம்பர் மாதம் 05ம் திகதி இராஜதந்திர மட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இந்திய மீனவர்கள் கடந்த பல வருடங்களாக இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதோடு அழிவு தரும் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.

இதன் தாக்கங்களையும், பாதிப்புகளையும் பிரதமர் நன்கறிந்துள்ளார். அதன் காரணத்தினால்தான் பிரதமர் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படுவதற்கு ஏற்ப நகர்வுகளை மேற்கொண்டுள்ளார். இது பெரிதும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபடுவதால் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.

அவற்றில் மீன் இனவிருத்திக்கு பெரிதும் துணைபுரியும் முருகைக்கற்பாறைகள் இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி முறைமைகளால் பெரிதும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதேநேரம் இந்திய மீனவர்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி முறைகளைப் பெரிதும் பயன்படுத்தியே கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர்.

அவற்றில் ‘பொட்டம் ரோலிங்க்’ இழுவை முறை மிக முக்கியமானது. இம்முறைமையின் ஊடாக இப்பிராந்தியத்திலுள்ள மீன் குஞ்சுகள் அள்ளிச் செல்லப்படுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளால் இப்பிராந்தியத்தில் மீன் இன விருத்தி வீழ்ச்சி அடைந்து வருவதை இலங்கையின் சமுத்திரவியல் நீரியல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வாளர்கள் அவதானித்து அறிவித்துள்ளனர்.

இவை இவ்வாறிருக்க, இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் இந்நாட்டு மீனவர்களின் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களுக்கும் சேதங்களை ஏற்படுத்துகின்றனர்.

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபடுவதற்கும் அவர்களது அழிவுகரச் செயற்பாடுகளுக்கும் இந்நாட்டு கடற்றொழிலாளர்கள் ஆட்சேபனைகள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளனர்.

இப்பேச்சுகள் இந்தியாவிலும், இலங்கையிலும் இடம்பெற்றுள்ளன. பல வருடங்களாக நீடித்து வரும்இப்பிரச்சினைக்கு இற்றை வரையும் நியாயமான தீர்வு கிடைக்கப் பெறாதுள்ளது.

இவ்வாறான சூழலில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை மீனவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இவ்விவகாரத்தில் இந்திய தரப்பினர் கவனம் செலுத்த வழிவகுத்திருக்கின்றார்.

இதனூடாக தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்கப் பெறும் என கடற்றொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஏனெனில் ஐரோப்பிய நாடுகளுக்கான இந்நாட்டின் மீன் ஏற்றுமதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆட்சிக் காலத்தில் தடை விதித்தது.

அத்தடையை நீக்கவெனக் கடந்த ஆட்சிக் காலத்தில் பலவித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும் அந்நடவடிக்கைகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்ததைத் தொடர்ந்து முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகளின் பயனாக அத்தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது.

இது இலங்கை மீனவர்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக் கொடுத்த பாரிய வெற்றியாகும்.

இவ்வாறான நிலையில் இந்நாட்டு கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதால் இந்நாட்டு கடற்றொழிலாளர்கள் பல வருடங்களாக முகம் கொடுத்துள்ள பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு பெற்றுக் கொடுப்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.

இதனடிப்படையில் தான் பிரதமர் தம் இந்திய விஜயத்தின் போது இவ்விடயத்திலும் இந்தியத் தரப்பினர் கவனம் செலுத்தக் கூடிய நிலைமையை ஏற்படுத்தி இருக்கின்றார்.

இதனடிப்படையில் நவம்பர் மாதம் நடைபெறும் பேச்சுவார்த்தை இலங்கை மீனவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் ஊடாக இந்நாட்டு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்பாடு அடையும்.

-http://www.tamilwin.com

TAGS: