மலையக மக்களுக்காக கொழும்பில் பாரிய போராட்டம் – பொலிஸாரின் தடையை மீறி இளைஞர்கள் கொந்தளிப்பு

malaiyagamதமது சம்பளத்தை அதிகரிக்க கோரி மலையக மக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்புக்களும் கொழும்பில் வேலை செய்யும் மலையக இளைஞர் யுவதிகளும் ஒன்றிணைந்து இன்று காலை இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

கொழும்பில் வேலை செய்யும் இளைஞர் யுவதிகளில் பெரும்பாலானவர்கள் மலையகத்தைச் சேர்ந்தவர்களே. பெற்ற தாய் தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் மனைவி பிள்ளைகளை விட்டுப் பிரிந்து தொழில் நிமித்தம் கொழும்பில் தஞ்சமடைந்துள்ள இவர்கள், மலையகத்தில் போராட்டங்களை நடாத்தும் தமது பெற்றோருக்கு கொழும்பிலிருந்து குரல் கொடுப்பதாக இந்த போராட்டம் அமைந்துள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தை நீதியான முறையில் முன்னெடுக்குமாறும், மறைமுகமாக நடாத்தப்படும் செயற்பாடுகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் இவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் இதன்போது, “மிருகங்களுக்கு காட்டும் மனிதாபிமானத்தை தொழிலாளர்களுக்கு சற்றேனும் காட்டுங்கள், தலைவர்களுக்காக மக்களா? மக்களுக்காக தலைவர்களா? தொழிலாளர்களின் இரத்தத்தை உறியாதே, வியர்வைக்கு விலை பேசாதே” போன்ற பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இந்த போராட்டத்தில் கலந்து கொண்டள்ளனர்.

பொலிஸாரின் தடையை மீறி இளைஞர்கள் கொந்தளிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கொழும்பு – கொச்சிக்கடை வரை பேரணியாக வந்து தேங்காய் உடைப்பதற்கு முற்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த செயற்பாட்டிற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

இந்த தடையை மீறியும் மலையக இளைஞர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து பேரணியாக செல்வதுடன், கொச்சிக்கடை சுற்று வட்டாரத்திலுள்ள கோயிலில் தேங்காய் உடைக்க முடிவெடுத்துள்ளனர்.

தமது போராட்டத்திற்கு பொலிஸார் தடை விதித்திருப்பதால் கொந்தளித்துள்ளதுடன் தமது போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்றும் தெரிவித்தார்கள்.

-http://www.tamilwin.com

TAGS: