புதிய அரசியலமைப்பில் ‘சமஷ்டி’ முறை ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் எனினும் அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும் எனவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது.
‘சமஷ்டி’ அல்லது வடக்கு கிழக்கு இணைப்பு என்பது புதிய அரசியலமைப்பில் கிடையாது. இந்த விடயத்தில் ஜனாதிபதி உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாக அமை ச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார்.
இந்த தமது நிலைப்பாட்டை யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மத்தியில் ஜனாதிபதி பகிரங்கமாக வெளியிட்டுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
‘ஊடகங்கள் மூலமாக உத்தேச புதிய அரசியலமைப்பு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எமது கட்சியிலுள்ள எமது நண்பர்கள் இதனை பாரிய விதத்தில் முன்னெடுத்துச் செல்கின்றனர்.
சமஷ்டிக்கு நாம் ஆதரவெனவும், ஈழம் உருவாகப் போகின்றது எனவும் நாடு துண்டாடப் போகின்றது என்றும் அதற்கான ஒப்பந்தத்தையே அரசாங்கம் தற்போது பொறுப்பேற்றுள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.
புதிய அரசியலமைப்பில் இதுவரை காலமும் பௌத்த மதத்துக்கு இருந்த கௌரவம் இல்லாதொழிக்கப்படப் போவதாகவும் புரளிகள் கிளப்பப்படுகின்றன.
இத்தகைய இனவாத, கோத்திரவாத கோஷமிடுபவர்கள் நாட்டிலுள்ள சிங்கள மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் மத்தியில் குரோதத்தை வளர்ப்பதிலும் முன்னின்று செயற்படுகின்றனர்.வட மாகாண முதலமைச்சர் சி. விக்னேஸ்வரன் இதற்கு பாரிய தீயை இட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையிலேயே கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு முதல்வரையும் அருகில் வைத்துக் கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு மத்தியில் ‘சமஷ்டி’ முறையை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய ஆட்சியாளர்கள் நிர்வாகத்தை இலகுபடுத்தவும் வரி அறவிடுவதற்குமே 9 மாகாணங்களாக பிரித்தனர். இதற்கிணங்க ஒரே நாடு என்ற வகையில் எதிர்காலத்திலும் ஐக்கிய இலங்கையை நாம் பாதுகாப்போம்.
நிலைமை இவ்வாறிருக்க மீண்டும் புதிதாக எமது நண்பர்கள் பலவாறு குழப்புகிறார்கள். விக்னேஸ்வரனைச் சுட்டிக்காட்டி, வடக்கு கிழக்கு ஒன்றிணைக்கப்பட்டு 8 மாகாணங்களாக்கப்படப் போவதாகவும் விமர்சனங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அரசியலமைப்பைத் தயாரிக்கும் பணிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளடங்குகிறது. இதில் நாம் பாரிய விழிப்புடன் செயற்படுகின்றோம்.
சம்பந்தப்பட்ட குழுவுடன் ஜனாதிபதி தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார். இதற்கிணங்க நாம் ஒருபோதும் ஐக்கிய இலங்கை என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகப் போவதில்லை.
அதேபோன்று ‘சமஷ்டி’ ஆட்சிமுறையொன்றை இலங்கையில் ஏற்படுத்தப் போவதுமில்லை. இந்த நிலைப்பாட்டில் ஜனாதிபதி மிக உறுதியாக உள்ளார்.
அதேபோன்று ஜனாதிபதி இனவாதத்திற்கு ஒருபோதும் துணை போகமாட்டார். எந்த வகையிலும் பௌத்த மதம் தொடர்பில் எதுவித பங்கம் ஏற்படவும் இடமளிக்கப்படமாட்டாது.
வடக்கு முதல்வர் இனவாதமற்றவராக ஒரு புறம் தெரிந்தாலும், அமைதி நல்லிணக்கம், இனங்களுக்கிடையிலான ஐக்கியம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தும் தற்போதைய சூழலில் அவரது கூற்று மிகவும் தவறானது.
அந்த அவரது கூற்றில் இனவாதம், கோத்திரவாதம் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளது.
அவர் பிரதம நீதியரசராக இருந்தாலும் அவர் எப்போதும் அரசியலுக்காக தூண்டப்படுகிறார் என்பதையும் குறிப்பிட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
-http://www.tamilwin.com