விசஊசி விவகாரம் தொடர்பில் ஆறாவது வாரமாகவும் இடம்பெற்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் இதுவரை 161 முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் முதலாம் வாரம் கடந்த மாதம் 2ஆம் திகதியும், இரண்டாம் வாரம் கடந்த மாதம் 9ஆம் திகதியும், மூன்றாம் வாரம் 15ஆம், 16ஆம் திகதியும், நான்கம் வாரம் 23 ஆம் திகதியும், ஐந்தாம் வாரம் 30 ஆம் திகதியும், ஆறாம் வாரம் இம்மாதம் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் வடமாகாண வைத்தியசாலைகளில் இடம்பெற்றன.
அதில் யாழ் மாவட்டத்தில் 29 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 25 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 95 பேரும், வவுனியா மாவட்டத்தில் 07 பேரும், மன்னார் மாவட்டத்தில் 05 பேருமாக 161 பேர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதில் செப்டம்பர் 2ஆம் திகதி 26 பேரும், செப்டம்பர் 9ஆம் திகதி 47 பேரும், செப்டம்பர் 15ஆம் 16ஆம் திகதிகளில் 22 பேரும், செப்டம்பர் 23ஆம் திகதி 30 பேரும், செப்டம்பர் 30ஆம் திகதி 21 பேரும், இம்மாதம் 7ஆம் திகதி 15 பேரும் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, எதிர்காலத்தில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேற்படி மருத்துவ பரிசோதனைகள் நடைபெறவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
-http://www.tamilwin.com