வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் பேரவை நடத்திய எழுக தமிழ் எழுச்சிப் பேரணி மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தப் பேரணி எதைச் சாதித்தது என்ற கேள்வியை முன்வைப்பவர்களுக்கான பதில் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட – ஒருமித்த குரல் பேரணி வாயிலாக முன்னெழுந்துள்ளது என்பதுதான்.
அரசியல் நோக்கமற்றது என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை அரசியல் சார்ந்து யாரேனும் விமர்சிப்பவர்களாக இருந்தால் அத்தகைய விமர்சனம் ஏற்புடையதன்று எனக் கூறுவதையே நாம் செய்ய முடியும்.
தவிர எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானது என்றுரைப்போர் அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது நம் தாழ்மையான கருத்து.
ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய நான்கு அரசியல் கட்சிகள் இப்பேரணிக்கு பேராதரவு வழங்கியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருக்கக்கூடிய வர்களின் சிலரின் ஒத்துழைப்பும் பேரணிக்குக் கிடைத்திருப்பதால் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு எதிராகப் பேரணி நடத்தப்பட்டது என்பது ஆதாரமற் றது.
அதேவேளை பேரணியில் குறைந்தது 45 ஆயிரம் தமிழ் மக்களுக்கு மேல் கலந்து கொண்டுள்ளனர். இதற்கு மேலாக வடக்கு மாகாணம் முழுவதிலும் பூரண கடையடைப்பு நடந்துள்ளது.
எனவே கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பது போல பேரணிக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவு என்பது வெளிப்படையானதும் மனத் தூய்மை கொண்டதுமாகும்.
பேரணி உரையில் எந்த அரசியல் கட்சி குறித்தும் எவரும் பிரஸ்தாபித்திருக்கவில்லை.
பேரணியின் இறுதியில் உரையாற்றிய வடக்கின் முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரன் அவர்கள் மிகத் தெளிவாக தமது நிலைப்பாட்டை; தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை; தமிழர் தாயகத்தின் தனிப்பண்புகளை எடுத்தியம்பி இருந் தார்.
முதலமைச்சரின் உரைக்கு முன்னதாக எழுக தமிழ் எழுச்சிப் பிரகடனம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பிரகடனத்தை பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான இருதய வைத்திய நிபுணர் பூ.லக்ஸ்மன் வாசித்தபோது அதனை பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இந்தப் பிரகடனம் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை; அவர்களின் மன உணர்வை; தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, யுத்தத்தின் கொடூரத்தை, இதுவரை போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்படாத காலந்தாழ்த்தலை போர்க்குற்ற விசாரணையினை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை; இனப்பிரச்சினைக்கான தீர்வை விரைவுபடுத்த வேண்டியதன் கட்டாயத்தை பிரகடனம் மிகத் தெளிவாக கூறியிருக்கின்றது.
தமிழ் மக்களின் அபிலாசைகளை, அவர்களின் மன வெளிப்பாடுகளை வலியுறுத்திய எழுக தமிழ் எழுச்சிப் பேரணி எந்த ஒரு கட்சிக்கும் எதிரானது அல்ல என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படுகின்றது.
இருந்தும் இதைமறுத்து பேரணி ஒரு கட்சிக்கு எதிரானது என்று கூறப்படுமாயின் அதன் பொருள் குறித்த அரசியல் கட்சி எழுச்சிப் பிரகடனத்துக்கு எதிரானது என்ற தோற்றப்பாட்டையே உருவாக்கும்.
ஆகவே தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் ஒரு பலமான அமைப்பு. அதன் பலத்தை வலுக்குறைப்பு செய்யும் வகையிலான விமர்சனங்களைத் தவிர்த்து, அந்த அமைப்பு தமிழ் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்.
அதன் மக்கள் பணி எப்படியாக அமைய வேண்டும் என்பதை விமர்சனம் செய்வோர் தெரிவித்தால் அது மிகவும் பயனுடையதாக அமையும். தமிழ் மக்களுக்கு உதவுவதாகவும் இருக்கும்.
-http://www.tamilwin.com