பிரதமர் ரணிலின் கருத்தை நிராகரித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு

tna_colombo_1இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொலன்னாவை பௌத்த மத நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கபௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

புதிய அரசியல் சாசனத்திலும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் விடயத்தை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்பட அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற பௌத்த மத நிகழ்வொன்றில் கூறியிருந்தார்.

பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவின் இந்த கூற்றை நிராகரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான ஏ.எம் . சுமந்திரன் அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவில் மதம் சார்ந்த விடயங்கள் இதுவரை பேசப்படவில்லை என்று தெரிவித்தார்.

நாட்டில் சகலருக்கும் சம உரிமை என கூறும் அரசியல் சாசனத்தில் ஒரு மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பது அரசியலமைப்புக்கு முரணானது. நல்லிணக்கத்திற்கு பாதிப்பாக அமையும் என்று தமிழோசையிடம் அவர் தெரிவித்தார்.

‘புதிய அரசியல் சாசனத்தில் இலங்கை ஒரு மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடு.

ஒரு மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவில் சமயம் சார்ந்த விடயங்களும் பேசப்பட வேண்டிய விடயமாக இருந்தாலும் இன்னமும் பேசப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

– BBC – Tamil

TAGS: