கன்னியா பறிபோய்விட்டது என்ற செய்தி தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் வெளிவந்த போது இலங்கையில் உள்ள அனைத்து சைவத் தமிழ் மக்களது மனங்களிலும் வேதனைகள் வெளிப்பட்டதை உணர முடிந்தது.
இதற்குரிய காரணமாக முன்வைக்கப்பட்ட பதில்களை சுருக்கமாக கூறுவதானால் பெரும்பான்மையினர் பறித்து விட்டார்கள் என்பதே.
இதனை நாம் விரிவாகவும் தெளிவாகவும் ஆய்வு செய்வோம். தனது தாயாரின் இறுதிக் கிரியைகளைச் செய்வதற்காக மன்னன் இராவணனால் உருவாக்கப்பட்ட ஏழு கிணறுகள் அமைந்த இடம் தான் கன்னியா என்பதுதான் வரலாறு.
இயற்கையாகவே சுடுதண்ணீர் கிணறுகள் கொண்ட கன்னியா சைவத் தமிழ் மக்களின் புனிதமான பிரதேசமாக இராவண மன்னனின் காலம் முதலாக மதிக்கப்பட்டு வந்தது. இத்தகைய கிணறுகள் உலகின் எப்பகுதியில் அமையவில்லை என்பதே உண்மை. இதன் மூலமாக இராவண மன்னனின் தவவலிமையின் சக்தியை நாம் உணரமுடியும்.
ஏழு கிணறுகளையும் வகைப்படுத்தி தான் அனுபவித்த அனுபவங்களை நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடல்களாக பாடியுள்ளார்கள் இப்பாடல்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய மதிப்பைப் பெற்றுள்ளன.
கன்னியாவின் பெருமைகளையும் தொன்மைகளையும் பல சைவத் தமிழ் பெரியார்கள் பல மேடைகளில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். பூர்வீக காலமாக திருகோணமலை இந்து மக்களே இதனைப் பராமரித்து வந்தார்கள்.
பின்னர் கன்னியா அமைந்துள்ள காணி அரசாங்க காணியெனவும் அதனால் இக்கிணறுகளை பராமரிக்கும் உரிமை உப்புவெளி கிராமசபைக்கு மட்டுமே உண்டு எனவும் கூறி நிர்வாகப் பொறுப்புகளை கிராமசபை பறித்துக்கொண்டது.
அதன்பின்னர் பல திருத்த வேலைகளைச் செய்து பல விதிமுறைகளையும் கொண்ட நிர்வாகக் கட்டமைப்புகளை உருவாக்கி இக்கிணறுகளை தனது உடமையாக மாற்றிக்கொண்டது.
அதன் விளைவாக இதிகாச பெருமை பெற்ற இக்கிணறுகள் காட்சிப்படுத்தப்பட்டு உல்லாசப் பயணிகள் வந்து போகும் இடமாகவும் கிணறுகளில் நீராடி மகிழ்ந்து போகும் உல்லாசப்பயணிகளின் முக்கிய இடமாகவும் உருவாக்கப்பட்டது.
இதன்மூலம் வருமானம் தேடும் கேந்திர நிலையமாக மாற்றமடைந்தது. சுற்றுலாப் பயணிகள் ஊடாக வரும் வருமானத்தை அவதானித்த வேறு சிலர் ஒன்றுகூடி தமது அரசாங்கத்தின் ஆதரவுடன் மீண்டும் அரசாங்க காணியென்ற உரித்துடன் வேறு ஓர் சரித்திரக் கதை கூறி கன்னியா நிர்வாகம் மாற்றமடைந்து விட்டது.
இத்தகைய அவலம் ஏற்படுத்தும் வழியைக் காட்டிக் கொடுத்தவர்கள் யார் என்பதை தேடினால் நம்மவர்கள் தான் என்ற உண்மையான விடைவரும்.
கன்னியா சமயக் கிரியைகள் செய்யும் புனிதமான நிலம். தமிழர்களின் நிலம் என்பதை மறைத்து அதனூடாக வருமானம் தேட முனைந்தவர்கள் யார்? இ்பாதையைக் காட்டிக் கொடுத்தவர்கள் யார்? தமிழர்களே. இதுவே விடையாகும்.
பெரும்பான்மையினர் பறித்து விட்டார்கள் என்று இன்று கூறுபவர்கள் தமிழர்கள். அன்று அரச உடமை, அரச காணி என்று பறித்து எடுத்த பெருமையும் தமிழர்களுக்கே வந்து சேரும்.
உண்மையில் எமது சைவ சமய நிறுவனங்களோ, சைவசமய பெரியார்களோ கன்னியாவினை பிழையாக வழிநடத்திய காலத்தில் முன்வந்து கன்னியாவின் பெருமையினை எடுத்துக் கூறியிருக்க வேண்டும். தவறவிட்டார்கள். அதன் விளைவு கன்னியா பறிபோய்விட்டது.
கிணறுகள் சைவசமய கியைகளுக்கு மட்டுமே திறக்கப்படல் வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்திருக்க வேண்டும். இறுதிக்கிரியைகள் செய்யும் புண்ணிய தலம் என்பதை உணரச் செயதிருக்க வேண்டும்.
அன்றே புனித பூமியாக காத்திருந்தால் இந்தக் கிணறுகள் இந்து மக்கள் இறுதிக் கிரியைகள் செய்யும் சமய கேந்திர நிலையமாக இன்றும் அமைந்திருக்கும். பாதுகாக்கப்பட்டிருக்கும்.
சமயக் கிரியைகளுக்கு மட்டுமே என்று அன்று தொடக்கம் பாதுகாக்கப்பட்டிருந்தால் இதன் மூலம் சைவசமய மக்களின் சொத்து என்பதை மக்கள் அனைவரும் அறிவு பூர்வமாக ஏற்று மதித்து வணங்கிச் சென்றிருப்பார்கள். பறிபோயும் இருக்காது. என்பதே உண்மை.
-http://www.tamilwin.com
நாம் தவற விட்டதில் இதுவும் ஒன்று.