யாழில் புலிகள் தலைவரை அண்மையில் கொண்டு வந்ததன் காரணம்?

prabhakaran01அண்மையில் யாழ் மருதனார் மடத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

அதன் பின்னர் அதி வேகமாக சுவரொட்டிகள் ஒட்டிய குற்றச்சாட்டில் ஜெர்மன் பெண்மனி ஒருவர் கைது செய்யப்பட்டு பயங்கர வாதத்தடுப்புபிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் அவர் நிறுத்தப்பட்டு உடனடியாகநாடு கடத்தப்பட உத்தரவிடப்பட்டது இவை யாவும் அறிந்த விடயமே.

மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலய சூழலில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய கண்காணிப்பு கமெராக்களில் பதிவான காட்சிகளை வைத்துஇவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனாலும் அவர் தானாகவே சென்று சரணடைந்ததாகவும் ஒளிப்பதிவுகள் மூலம் அவர் கைது செய்யப்பட வில்லை எனவும் பெண்ணிய செயற்பாட்டாளர் ஒருவர் தனது முகப்புத்தகப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் ஊடகங்கள் கூறுவதனைப்போல் அவர் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு பட்டவர் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முரண்பட்ட கருத்தாக குறித்த பெண்மனியை காணொளி அடிப்படையில் கைது செய்ததாகவும் அவரிடம் இருந்து 40இற்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை கைப்பற்றியதாகவும் பொலிசார் தெரிவித்திருந்தனர்.

மேலும் குறித்த வழக்கில் காட்டப்பட்ட வேகம் இது வரையில் வடக்கில் இடம்பெற்ற எந்த வழக்கிலும் இடம் பெற்றிருக்கவில்லை.

அதே சமயம் கைப்பற்றப்பட்ட சுவரொட்டிகள் தொடர்பிலோ அல்லது கைதானவர் தொடர்பிலோ மேலதிக தகவல் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை என்பதே இதில் குறிப்பிடத்தக்க விடயம்.

மேலும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழேயே சுவரொட்டிகளை ஒட்டியவர் கைது செய்யப்பட்டார். ஆனாலும் அவரின் வழக்கு மீது காட்டப்பட்ட வேகமும் மாற்றமும் ஏனைய வழக்குகளில் அதாவது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஏற்பட்டதா என்பது சந்தேகமே. இவற்றினை பார்க்கும் போது குறிப்பாக முரண்பட்ட கருத்துகளைநோக்கும் போது பல சந்தேகங்கள் ஏற்படுகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் காணப்பட்டு வருகின்றது. இதன் போது அதனை நீக்கினால் காரணமின்றி கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.

அவ்வாறு நிகழ்ந்து விட்டால் அது தற்போதைய அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட அல்லது ஆட்சி மாற்றத்திற்காக செயற்பட்டுவரும் சதியாலோசனையாளர்களுக்கு போராட்டங்கள் நிகழ்த்த ஏதுவான காரணியாக அமைந்து விடும்.

இதன் காரணமாக அரசு திட்டமிட்டு நடத்திய ஓர் செயலாகவே இது நோக்கப்படவேண்டும் என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மற்றொரு வகையில் தற்போது எங்குபார்த்தாலும் மௌனிக்கப்பட்ட விடுதலைப்புலிகளை மீண்டும் கொண்டு வர முயலும் செயற்பாடுகள் அன்றாடம் இடம்பெற்று கொண்டே வருகின்றது அதற்கு முக்கிய காரணம் ஆட்சி மாற்றம் என்ற ஒன்றே.

மேலும் இறுதியுத்தம் தொடர்பில் பல இரகசியங்கள் இன்றுவரை வெளிப்படுத்தப்படவில்லை. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இராணுவ கட்டமைப்பு அதிகரிக்கப்படுகின்றதே தவிர குறைக்கப்பட வில்லை.

இதேவேளை மக்கள் மத்தியில் சிறிது சிறிதாக விடுதலைப்புலிகளை பழக்கப்படுத்தி கொண்டு வரும் செயலுக்காக அதாவது பல நாள் இரகசியங்களை கூற ஆயத்தமாகி வரும் செயலில் ஒன்றாகவே இது நோக்கப்படுகின்றது.

தற்போது மஹிந்தவின் எதிர்ப்புகளுக்கு பொறுமை காத்து வரும் மைத்திரி ரணில் தரப்பு அவரை முடக்க முயலும் முன்பு மஹிந்த தரப்பு ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டு பதற்ற நிலையை தோற்று விக்க முயலும் செயற்பாடாகவும் இவை நோக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் யாழில் கழுகு கண்கொண்டு திரிந்து வரும் இராணுவத்தினருக்கு மத்தியில் சாதாரண பெண் ஒருவர் உள் நுழைந்து சுவரொட்டிகள் ஒட்டுவது என்பது முடியாத காரியம்.

வடக்கில் புலிகள் பற்றி பேசினால் கூட கைதுகள் இடம் பெறும் சூழலே தற்போதும் நிகழ்கின்றது என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இதேவேளை விடுதலைப்புலிகள் மீது பற்று கொண்டவர் இதனை செய்திருக்கலாம் என்று கூறுபவர்கள் ஒரு பெண் ஜெர்மன் நாட்டில் இருந்து தீடீரென சுவரொட்டிகளை ஒட்டுவதற்காகவே யாழ்ப்பாணம் வந்தார் என்று கூறும் கூற்றின் பொய்த் தன்மையை வெளிப்படையாக காட்டிவிடும் ஒன்றே.

அனைத்து பக்கத்திலும் நோக்கும் போது அரசியல் இலாபங்களுக்காக மக்களை தூண்டிவிடும் செயலாகவே இந்த சுவரொட்டிகள் விவகாரம் காணப்பட்டு வருவதாகவும் தென்னிலங்கை புத்திஜீவிகள் தெரிவித்து வருகின்றனர்.

-http://www.tamilwin.com

TAGS: