கிழக்கு மாகாணத்திற்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் முதலமைச்சரை சந்திக்கும்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் உள்வாங்கப்படவேண்டும் என கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் கடைத்தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இன்று மலையக மக்களின் சம்பள விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுவருகின்றது.
இந்த நாட்டின் வர்த்தக துறையினையின் தூணாகவும், நாட்டின் முதுகெழும்பாகவும் உள்ள மலையக தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கமும் தொழில் சங்கங்களும் பின்னடித்துக்கொண்டுள்ளது.
இந்த ஏழை தொழிலாளர்களின் சந்தா பணத்தில் வாழ்க்கையினை நடாத்திவரும் இந்த தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மாறிமாறி வரும் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு தங்களை வளர்த்துக்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் நினைத்திருந்தால் இந்த ஆயிரம் ரூபாவினை எப்போதே அதிகரித்திருக்கமுடியும். மலையக தொழிலாளர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு என்றும் இருக்கும்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின்போது அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நல்ல நடிகராக மாறிவிட்டார்.
தமிழர்களின் நம்பிக்கையாக வந்த ஜனாதிபதி, இன்று மகிந்த ராஜபக்ஸவின் கம்பனியை காப்பாற்றுவதற்காக செயற்பட்டு வருகின்றார்.
தமிழர்களை கொன்றொழித்த இராணுவத்திற்கும் அதன் பாதுகாப்பு செயலாளருக்கும் உற்றதுணையாக அவரது பேச்சுகள் இருந்துவருகின்றன. ஊழில் மோசடிகளை செய்தவர்களைக்கூட பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்டுவருகின்றார்.
தமிழர்களை அழித்தொழித்த இராணுவத்தினர் 18 மாதமாக சிறைவாசம் இருப்பதாக ஜனாதிபதி கவலைப்படுகின்றார்.
ஆனால் 18 ஆண்டுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் வாடிக்கொண்டுள்ளனர். ஜனாதிபதி வந்தால் விடுதலைசெய்வார் என்று நம்பி தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.
-http://www.tamilwin.com