அச்சத்தின் உச்சத்தில் யாழ். மக்கள்..! காரணம் என்ன..?

Jaffna-Boys-06அண்மைய காலமாக யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரமானது ஒரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது.

இதன் காரணமாக யாழ். பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, யாழ்.குடாநாட்டி நகரப்பகுதிகளில் ஒருவித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு யாழ்.நகரப் பகுதியால் கூரிய ஆயுதங்களுடன் கும்பலொன்று நடமாடியதாக அவர்களை நேரில் கண்ட பலர் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக இவர்கள் கோடரி, வாள் இரும்புக் கம்பிகள் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு சைக்கிளில் முகங்களை துணியால் மறைத்து தலைக்கவசங்களை அணிந்திருந்ததாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து இக்கும்பலானது இலுப்பையடி சந்திக்கு அண்மையில் இருந்த வாகனமொன்றின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், இராசாவின் தோட்டச் சந்திக்கு அண்மையிலுள்ள புகையிரத கடவையில் வைத்து சிலர் மீது வாள்வெட்டுத்தாக்குதலை நடாத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவமானது நடைபெற்ற போது புகையிரத கடவை மூடப்பட்டிருந்ததாகவும் வாள்வெட்டு சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் அச்சத்தின் காரணமாக ஒட முற்பட்ட போது அவர்களில் ஒருவர் புகையிரத கடவையின் மீது மோதியதால் தலைப்பகுதியில் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் வாள்வெட்டுக்களை மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் யாழ்.மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவ்வாறான வாள்வெட்டு கலாச்சாரமானது யாழ்.குடாநாட்டில் அதிகரித்திருந்ததுடன் இவற்றில் பிரதான சந்தேகநபர்களாக மூவர் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களை கைது செய்வதற்கான விஷேட பொலிஸ் குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த மூவரும் தப்பியிருந்த நிலையில் அவர்களுக்காக இவ்வாள்வெட்டு சம்பவங்களை செய்திருந்த வேறுசிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில் குறைந்திருந்த வாள்வெட்டு கலாச்சாரமானது மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதன் காரணமாக யாழ். குடாநாட்டில் பயங்கரமான பதட்டமான ஒர் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-http://www.tamilwin.com

TAGS: