எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டம் தீட்டியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு தகவல் வழங்கியதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் அந்த ஊடகம் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் பலப்பிட்டியவை சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து தனக்கு மின்னஞ்சலொன்று வந்ததாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பின்னர் குறித்த நபரிடமிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்ததாகவும், அனேகமாக மின்னஞ்சல் அனுப்பிய நபராகத்தான் அவர் இருக்கவேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அவர் எதிர்கட்சி தலைவர் சம்பந்தனை கொலைசெய்வதற்கு தீட்டப்பட்டுள்ள திட்டம் குறித்து தனக்கு தெரியும் என குறிப்பிட்டதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதற்காக நபர் ஒருவருக்கு 25 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த கொலைக்கு விடுதலைப்புலிகள் மீது பழிபோட திட்டமிட்டுள்ளனர் எனவும் அந்த நபர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னமும் செயற்படுகின்றது என்பதை காண்பிக்கவே அவ்வாறு திட்டமிடம் தீட்டப்பட்டுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
அந்த நபர் தானே குறிப்பிட்ட மின்னஞ்சலை அனுப்பியதாக குறிப்பிட்டார், தனக்கு இது குறித்து எவ்வாறு தெரியவந்தது, எதிர்கட்சி தலைவரை கொலை செய்யும் பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போன்ற விபரங்களையும் அவர் தன்னிடம் தெரிவித்தார்.
நான் இந்த விடயம் குறித்து ஆராய்ந்த பின்னர் பொலிஸ்மா அதிபரிடம் தெரிவிப்பதாக கூறினேன். எனது முறைப்பாட்டினை ஜனாதிபதிக்கும் அனுப்புவதாக தெரிவித்தேன்.
நான் எனக்கு பாதுகாப்பு கோரவில்லை. இந்த விடயம் குறித்து அறிந்த பின்னர் வடமாகாண சபையே எனக்கான பாதுகாப்பை கோரியது. நான் ஒருபோதும் எனக்கு பாதுகாப்பை கோரியதில்லை.
வடமாகாணசபை அரசாங்கத்திடம் எனக்கான பாதுகாப்பை கோரிய போதும் அரசாங்கத்திடம் இருந்து வந்த பதிலில் அரசியல் தொனி காணப்பட்டது
சில நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் மீண்டும் தன்னுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். பயங்கரவாத விசாரணை பிரிவின் தலைவர் டி.சில்வா என்பவர் தனக்கு தகவல்களை வழங்கியதற்காக தன்னை துன்புறுத்துவதாக குறிப்பிட்டார்.
நான் அவரிடம் ஏன் தமிழர் ஒருவருக்கு உதவுகின்றீர்கள் என கேட்டேன். நான் அந்த நபரின் தொலைபேசி இலக்கங்கள் உட்பட முக்கிய தகவல்களை பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியுள்ளேன். அவர் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மிகவும் பாரதூரன இந்த விடயத்தை அரசியல் கோமாளித்தனத்திற்கு பயன்படுத்த எவரும் முயலக்கூடாது என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக கொழும்பு டெலிகிராப் என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
-http://www.tamilwin.com