சித்ரவதைகளுக்கு எதிரான ஐநா மன்றக் குழுவின் ஜெனிவா அமர்வின்போது, இலங்கையில் ஏழு ரகசிய முகாம்கள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவமும் – அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களும் இந்த ரகசிய முகாம்களை நடத்தியதாகவும் இதில் சில முகாம்கள் இன்னமும் செயல்படலாம் என்ற சந்தேகத்தையும் அனைத்துலக பொதுமன்னிப்பு மன்றம் (Amnesty International) வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற இடங்களில் சித்ரவதைகள்-சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் போன்றவை நடைபெற்றதாக குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக 7 முகாம்களின் முகவரியை அனைத்துலக பொதுமன்னிப்பு மன்றம் வெளியிட்டுள்ளது.
வவுனியா பூந்தோட்டம் கல்லூரி, வவுனியாவில் இருக்கும் 211-வது பிரிகேடின் தலைமையகம், வெளிக்குளம் பாடசாலை, புளோட் அமைப்பின் வவுனியா தடுப்பு மையம் மற்றும் தர்மபுரத்துக்கு 14 மைல்கள் தொலைவில் உள்ள ஐந்து கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களில் முன்னாள் புலிகள் 700 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 80 பேர் புலிகளின் முன்னணித் தலைவர்கள் என்றும் 300 பேர் புலிகளின் ஆதரவாக செயல்பட்ட பொதுமக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர முல்லைத் தீவில் இரண்டு இரகசிய இடங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து சி்த்ரவதைகளுக்கு எதிரான ஐநா மன்றக் குழுவின் ஜெனிவா அமர்வில் விரிவாக ஆராயப்பட்டது. இந்தக் குழுவின் தலைவரான பெலிஸ் கியர் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மனித உரிமை மீறல்கள் குறித்த அம்னெஸ்ட்டி உள்ளிட்ட அமைப்புக்கள் அளித்த ஆதாரங்கள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டோர் மீது சுயாதீனமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவதில்லை என்றும் ஐநாவின் சித்ரவதைகளுக்கு எதிரான குழுவின் தலைவர் பெலிஸ் கியர் கூறினார்.