சிரியா மக்கள் மீது அந்நாட்டு இராணுவம் தாக்குதல்; 3,500 பேர் பலி

சிரயா தலைவர் பஷர் அல் அசாத்துக்கு எதிராகப் போராடும் அந்நாட்டு மக்கள் மீது சிரிய இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 3,500 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. மன்றத்தின்  மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

சபஷர் அல் அசாத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில், அரபு லீக் ஒரு ஒப்பந்தத்தைத் தயாரித்தது. அதன்படி, சிரிய அரசு கைது செய்துள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

சிரிய தெருக்களில் உள்ள இராணுவம் திரும்பப் பெறப்பட வேண்டும். இதற்கு சம்மதித்து அதிபர் அசாத், கடந்த 2-ம் தேதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.தொடர்ந்து, கடந்த 5-ம் தேதி, 550 கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் அறிவித்தார். ஆனால், இராணுவம் திரும்பப் பெறப்படவில்லை.

மாறாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல் தொடர்கிறது. இந்நிலையில், நேற்று ஐ.நா., மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இதுவரை சிரிய போராட்டத்தில், இராணுவத்தின் தாக்குதலுக்கு 3,500 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.