சிங்களவர்களுக்காக சென்ற தமிழனும், தமிழுக்காக சென்ற தலைவரும்

tmilவரலாறுகள் மட்டுமே திரும்ப திரும்ப பேசப்படுபவை. அதற்காக திரும்ப திரும்ப பேசப்படுபவை வரலாறு ஆகிவிடாது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

அதேவேளை வரலாறுகள் உள்ளதை உள்ளபடி சொல்வதாகவும் இருக்க வேண்டும். எனினும் இலங்கையில் பேரினவாதிகள் முதலில் ஆரம்பித்த இனவன்மம் வரலாறுகளை திரிபுபடுத்தியதுதான்.

இலங்கை திருநாட்டில் தமிழ் மன்னர்களின் ஆட்சிகளை மறைத்தல் சிங்கள ஆட்சியே இந்த நாட்டில் இருந்ததாக காட்டாப்புக்கள் என வரலாறுகளை திரிபுபடுத்தி அவற்றை பாடப்புத்தகங்களில் பதிப்பிட்டு மாணவர்களை கற்க வைத்து இந்த நாட்டில் ஒரு பிழையான வரலாற்றை பதிவு செய்யும் கயமைத்தனமே இலங்கையில் இன்றுவரை இனப்பிரச்சினை நீடித்து நிலைப்பதற்கு காரணமாகும்.

உண்மையான வரலாற்றை இந்த நாட்டின் ஆட்சிப்பீடம் பதிவு செய்திருக்குமாயின் இந்த உலகுக்கு இலங்கை ஒரு சமாதான நாடாக காட்சி கொடுத்திருக்கும்.

அதாவது இலங்கையில் சிங்கள தமிழ் இன ஒற்றுமை ஏற்பட வேண்டும் என சிங்கள ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால் அவர்கள் பாடப் புத்தகங்களில் சேர் பொன்.இராமநாதன் அவர்கள் சிங்கள மக்களைக் காப்பாற்றிய வரலாற்றை-சிங்கள மக்கள் சேர் பொன்.இராமநாதனை குதிரை வண்டியில் இருத்தி இழுத்து வந்த காட்சியை பதிவு செய்திருக்க வேண்டும்.

அவ்வாறானதொரு பதிவு பாடப்புத்தகங்களில் இருந்திருக்குமாயின் ஒரு தமிழன் சிங்கள மக்களைக் காப்பாற்றினான் என்ற உண்மை ஒவ்வொரு சிங்கள மக்களின் மனங்களிலும் ஆழப்பதிந்து இருக்கும்.

கூடவே தம் இனத் தலைவர் செய்த உதவியை சிங்கள மக்கள் நன்றியோடு நினைவுகூருகின்றனர் என்ற உவகையில் சிங்கள மக்கள் எங்கள் சகோதரர்கள் என்று தமிழ் மக்கள் நினைத்திருப்பர். ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை.

மாறாக தம்மைக் காப்பாற்றிய சேர் பொன். இராமநாதனை குதிரை வண்டியில் வைத்து இழுத்து வருவதை முன்னைய பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் காட்சிப்படுத்தியிருந்த போதிலும் பின் நாளில் அந்தக் காட்சிப்படம் அகற்றப்பட்டது.

ஆக, தமிழ்த் தலைவர்கள் செய்த பெரு உதவிகளை கூட சிங்கள ஆட்சியாளர்களும் வரலாற்று ஆசிரியர்களும் மறைப்புச் செய்து தமிழ் மக்கள் தங்களின் எதிரிகள் என்பது போல காட்டுவதிலேயே அவர்கள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

இருந்தும் சேர் பொன்.இராமநாதன் அவர்கள் லண்டனுக்குச் சென்று பேசியதால் தான் சிங்கள மக்கள் இன்று ஆட்சியில் உள்ளனர் என்பது மறைக்கப்பட்டு போகாது.

ஆக, அன்று சிங்கள மக்களை காப்பாற்றுவதற்காக தமிழ்த் தலைவர் சேர் பொன். இராமநாதன் லண்டனுக்கு சென்றார்.

ஆனால் இன்று வடக்கின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் எங்களுக்காக லண்டனுக்குச் சென்றுள்ளார். ஆம் இந்த நாட்டின் இரண்டு தமிழ் தலைவர்களின் லண்டன் பயணம் ஒரு வரலாறு ஆகியுள்ளது.

அதில் ஒன்று சிங்கள மக்களை காப்பாற்றுவதற்காக சேர் பொன். இராமநாதனின் லண்டன் பயணம் மற்றையது எங்களுக்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் லண்டன் சென்றது. இந்த இரு பயணங்களும் முக்கியமானவை. அதில் முன்னையது அவர்களுக்கானது. பின்னையது எங்களுக்கானது.

இதை நாம் கூறும் போது முன்னையது நடக்காமல் இருந்திருந்தால் பின்னையது தேவைப்பட்டிருக்காது என்று கருத்துரைப்போரும் இருக்கலாம். அவ்வாறானதொரு கருத்துரைப்பு எழுமாக இருந்தால் அதை மறுதலிக்கவும் முடியாது.

எதுவாயினும் ஆன்மீக பலம் கொண்ட இரண்டு தமிழ்த் தலைவர்களின் லண்டன் பயணம் முக்கியமானது. அதில் இரண்டாவது பயணம் தமிழ் மக்களுக்கு நன்மையானதாக அமைய வேண்டும் என்பது எம் பிரார்த்தனை.

அதேவேளை அவர்கள் சொல்ல மறந்த வரலாற்றை நாம் சொல்லலாம் அல்லவா! அதைச் செய்வதற்கு எங்கள் வரலாற்று ஆசிரியர்களும் தமிழ் அரசியல் தரப்புக்களும் கூடி திட்டமிட்டு எங்கள் வரலாற்றை ஆவணப்படுத்த காட்சிப்படுத்த ஏதோ ஒரு வகையில் எங்கள் மாணவர்கள் கற்க வகை செய்ய வேண்டும்.

அப்போது தான் எங்கள் பெருமையை வரலாற்றை நாங்கள் அறியமுடியும்.

-http://www.tamilwin.com

TAGS: