கடாபியின் கடைசி நாட்கள் பற்றி கூறுகிறார் அவரது பாதுகாவலர்

கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாபி, தன் கடைசி நாட்களில் உணவைத் தேடியலைந்தார். பாதுகாப்புக்காக ஒவ்வொரு வீடாக மாறினார் என அவரது பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

லிபியாவின் முன்னாள் தலைவர் மும்மர் கடாபி, கடந்த மாதம் 20-ம் தேதி கிளர்ச்சியாளர்களினால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். கடாபியின் பாதுகாப்புக் குழுத் தலைவர் மன்சூர் டாவும் அவருடன் பிடிபட்டார். மன்சூர் தற்போது மிஸ்ரட்டாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடாபியின் கடைசி நாட்கள் பற்றி அவர் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“தனது ஆட்சியில், சகல ஆடம்பரங்களுடன் வசித்த அவர், எதிர்ப்பாளர்கள் முன்னேறிய போது, தனது மாளிகையில் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டார். சிர்ட் நகரில் அவர் பதுங்கியிருந்த போது, கைவிடப்பட்ட வீடுகளில் நுழைந்து உணவு இருக்கிறதா என்று தேடி அலைந்தார். மீதமுள்ள பொழுதை தன் கையில் வைத்திருந்த பெட்டியில் இருந்த புத்தகங்களைப் படிப்பதில் செலவிட்டார்.”

“கடாபியின் செயல்களை யூகிக்கவே முடியாது. சிர்ட் நகரில் இருந்து 20 கி.மீ., தொலைவில் இருந்த அவரது சொந்த ஊரான ஜரீப்புக்கு எப்படியாவது போய்விட வேண்டும் என அவர் பரிதவித்தார். பல நேரம் அவர் மிகவும் கவலையுடனும் பயத்துடனும் இருந்தார். சில நேரங்களில் அவர் கடந்து போன காலங்களுக்காக வருத்தப்பட்டார்.” இவ்வாறு மன்சூர் தெரிவித்தார்