தமிழர்களின் மனிதாபிமானப் பிரச்சினையை தீர்க்காத நல்லாட்சி அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமா?

maithiri_ranil_001உடனடியாகத் தீர்வு காணக்கூடிய, தீர்க்கப்பட வேண்டிய, பாதிக்கப்பட்ட தமிழ் தொழிலாளர்களின் மனிதாபிமான வாழ்வாதாரப் பிரச்சினையையே தீர்க்க மனமின்றி இழுத்தடித்து வரும் நல்லாட்சி அரசாங்கம், நீண்ட காலமாக இருந்து வரும் தமிழர்களின் உரிமை சார்ந்த இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காணுமா என்ற பலத்த சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மகிந்த ஆட்சி அகன்று மைத்திரி ஆட்சி வந்தால் அது நல்லாட்சியாக அமைந்து தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வும் தமிழர்களின் உரிமைக்கான இனப்பிரச்சனைக்குக் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காணப்பட்டு விடும் தமிழ் மக்களும் நிம்மதியாக, சுதந்திரமாக வாழலாம் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டது.

அதனால்தான் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இணைந்து மகிந்த ஆட்சிக்யைத் தோற்கடிக்கச் செய்து அதற்கு முடிவுகட்டி நல்லாட்சியை ஏற்படுத்துவேன் என்று கூறிய மைத்திரியை நம்பி ஆட்சி பீடம் ஏற்றினார்கள்.

மைத்திரி ஆட்சி ஏற்பட்டு காலங்கடந்த நிலையிலும் தமிழர்களின் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய மனிதாபிமானப் பிரச்சினைகள் தீர்க்கப்படவும் இல்லை தீர்ப்பதற்கான முயற்சிகள்கூட எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழர்களின் விடிவுக்கான உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமா என்ற பலத்த சந்தேகம் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மலையகப் பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களின் உழைப்புச் சுரண்டப்பட்டு அவர்கள் வாழ்வாதாரத்திற்காக நீண்ட காலமாகக் கஸ்டப்பட்டு வருகின்றார்கள்.

இதனைப் பற்றி நல்லாட்சி அரசாங்கம்கூட கருத்தில் எடுத்து அவர்களின் வாழ்க்கைக்கான மனிதாபிமானப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

இந்த மைத்திரி நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கு மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளான அமைச்சர்களாகவுள்ளவர்களும் தொழிலாளர்களது மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமாக முயற்சிக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றார்கள்.

இலங்கை நாட்டுக்கே பெருமளவு வருமானத்தினை ஈட்டுவதற்காக பெருந்தோட்டங்களில் மழை, வெயில், அட்டைக் கடி, பாம்புக் கடி, குளவிக் கொட்டு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுக் கஸ்டப்படும் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்காமல் அவர்களின் உழைப்பைப் சுரண்டப்படுகின்றது.

இதனை இந்த நல்லாட்சிக்கான அரசாங்கமும் கண்டுகொள்ளாமல் கண்மூடி இருந்து பங்கு போட்டுக்கொள்கின்றமை பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கவலையையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் தாம் கஸ்டப்பட்டு வேலை செய்வதற்கான சம்பளத்தைக் கொள்ளையடிக்காது தமக்குத் தரச் சொல்லி ஒரு மாதகாலமாக வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றார்கள்.

அதனை இந்த நாட்டின் நல்லாட்சி அரiசாங்கம் கண்டுகொள்ளாமல் கண்மூடி இருந்து வருகின்றது.

இந்த நாட்டில் தொழிலாளர்களின் உழைப்புப் பல துறைகளில் சுரண்டிக் கொள்ளையடிக்கப்படுகின்றது. அதற்கு ஆட்சியாளர்களின் பூரண ஆதரவும் அனுசரணையும் காணப்படுகின்றது.

இந்தக் காலத்திலும் இலங்கை நல்லாட்சியில் தொழிலாளர்கள் அடிமைகளாக நோக்கப்பட்டு அவர்களின் உழைப்புச் சுரண்டப்படுகின்றது. அவர்கள் அவலப்படுகின்றார்கள். இது எமது நாட்டு நல்லாட்சிக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு இன்னும் தெரியவில்லையா?

தமது குடும்பத்தைக் காப்பதற்காக கஸ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் உழைப்பை மதித்து அவர்களின் உழைப்பைச் சுரண்டாமல் இந்த நல்லாட்சிக்கான அரசாங்கம் நடக்குமாக இருந்தால் தமிழர்களது இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மத்தியில் ஏற்படும்.

இதனைக்கூடச் செய்யாமல் மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என வெறும் பேச்சளவில் கூறுவதில் அர்த்தமில்லை.

-http://www.tamilwin.com

TAGS: