வடக்கு மற்றும் கிழக்கில் அண்மைய காலங்களில் வன்முறை சம்பவங்கள், வாள் வெட்டு சம்பவங்கள் என சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக வடக்கில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இவ்வாறான சம்பவங்களுக்கு பின்னணியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்னசிங்க இதனை தெரிவித்துள்ளார். வடகிழக்கில் இடம்பெறும் சமூக விரோத செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 12 ஆயிரத்து 600 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும். முன்னாள் போராளிகள் தொடர்பில் கண்காணித்து குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருந்தால் அவர்கள் கைது செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கிலும் கிழக்கிலும் அமைதியின்மை நிலவவும் இவர்களின் தூண்டுதல் உள்ளன. நாட்டின் அமைதியை சீர்குலைத்து மீண்டும் மோசமனான சூழ்நிலையை நாட்டில் உருவாக்கப் பார்க்கின்றனர்.
வடக்கில் இயங்கி வரும் பிரதான பாதாள உலகக் குழுக்களான ஆவா மற்றும் பாவா ஆகிய குழுக்களை முன்னாள் போராளிகளே வழிநடத்தி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் போராளிகளின் எண்ணங்கள் நோக்கங்கள் துரித கதியில் மாற்றமடைந்துவிடாது என குறிப்பிட்டுள்ள அவர், வடக்கில் நிலைமைகளை கட்டுப்படுத்த வடக்கு அரசியல் தலைமைகள் சரியாக செயற்பட வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com