விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காலத்தில் வடக்கில் சமூகவிரோத குழுக்களுக்கு இடமளிக்கவில்லை என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தின் பல இடங்களில் சமூகவிரோத குழுக்களின் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில் இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வாறு செயற்படும் சமூக விரோத குழுக்களை கடந்த அரசாங்கத்தில் வடக்கில் உயர் பதவி வகித்த இராணுவ அதிகாரி ஒருவரே, இரகசியமாக உருவாக்கினார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் நன்கு திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையில் இவ்வாறான சமூகவிரோத குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, யுத்தத்திற்கு முன்னரும், பின்னருமான காலப்பகுதியில் இவ்வாறான சமூகவிரோத குழுக்கள் செயற்பட்டு வந்த போதிலும், விடுதலைப் புலிகள் காலத்தில் இவ்வாறான குழுக்கள் செயற்படவில்லை என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com